5.6 கல்வி நிலை

பொது மக்கள் கல்வியறிவைப் பற்றிக் கவலைப்பட்டதில்லை. அரசும் பள்ளிக் கூடங்களை நடத்தவில்லை எனத் தெரிகிறது. பொது மக்களால் நடத்தப் பட்ட பள்ளிகளுக்கு அரசு பண உதவி எதுவும் அளிக்கவில்லை. குறிப்பாக அறிஞர்களை நாயக்கர்கள் ஆதரிக்கவில்லை. தொழில் கல்வி வேண்டியோர் அந்த அந்தத் தொழிலாளரிடம் சிறு வயதில் சேர்ந்து அடிமை போலிருந்து விரும்பிய தொழிலைப் பயின்று கொண்டார்கள்.

சிற்றூர்களில் தனிப்பட்டோர் முயற்சியால் திண்ணைப் பள்ளிக்கூடங்கள் நடப்பதுண்டு. பெற்றோர்கள் பண்டமும் பணமும் கொடுத்து ஆசிரியரைப் பேணினார்கள். நாயக்கர்கள் காலத்தில் ஏசு சபையைச் சேர்ந்தவர்கள் பள்ளிகளைத் தொடங்கினார்கள். மதுரையில் பெர்னாண்டஸ் பாதிரியார் இந்து சமய மாணவர்களுக்காக ஒரு தொடக்கப் பள்ளி வைத்து நடத்தினார்.

கிறித்தவரான பார்ப்பனர் ஒருவர் அப்பள்ளியில் ஆசிரியராய் இருந்து, மாணவர்களுக்கு எழுதவும் படிக்கவும் கற்றுக் கொடுத்தார். மதுரை வழியாகத் தற்செயலாகப் பயணம் செய்த பிமெண்டோ பாதிரியார் அப்பள்ளியைப் பார்வையிட்டுப் படிப்பில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கினார்.

பார்ப்பனர்களுக்கு மட்டும் தனிப்பட்டவர்களால் வேதப் பாடசாலைகள் இருந்தன. இதற்கு நாயக்கர்கள் உதவியும் கிடைத்து வந்தது. இராபர்ட்-டி-நொபிலி என்னும் பாதிரியார் கூற்றுப்படி மதுரை நகரில் சுமார் 10,000 பார்ப்பன மாணவர்கள் வேதக்கல்வி பயின்றனர் எனத் தெரிகிறது.

திருமலை நாயக்கர் தெலுங்கு மொழியை ஆதரித்தது போல் தமிழ் மொழியையும், புலவர்களையும் ஆதரிக்கவில்லை. சுப்ரதீபக் கவிராயர் திருமலை நாயக்கன் காதல் என்ற ஒரு நூல் எழுதித் திருமலை நாயக்களிடம் கொண்டு சென்றபோது அவர் அதனை மதிக்கவில்லை. எனவே சுப்ரதீபக் கவிராயர் அதனைக் கூளப்ப நாயக்கன் காதல் என மாற்றிக் கூளப்ப நாயக்கனிடம் காட்ட அவன் அவரை மதித்துப் போற்றிப் பரிசில் வழங்கினான் என்பர். எனினும் திருமலை நாயக்கர் குமரகுருபரரை மட்டும் ஆதரித்ததாகத் தெரிகிறது. குமரகுருபரர் தாம் இயற்றிய மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் என்னும் நூலைத் திருமலை நாயக்கர் முன்னிலையில் அரங்கேற்றினார் என்று கூறுவர்.

விசயரங்க சொக்கநாத நாயக்கர் குற்றாலக் குறவஞ்சி இயற்றிய திரிகூடராசப்ப கவிராயரை ஆதரித்து, அவருக்குக் குற்றாலப் பகுதியில் கி.பி.1715இல் இறையிலியாக ஒரு நிலத்தைக் கொடுத்தார். இந்நிலம் இப்போது குறவஞ்சிமேடு என வழங்கப்படுகிறது.

நாயக்கர் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் அதிவீரராம பாண்டியன், வரதுங்கராம பாண்டியன், திருக்குருகைப் பெருமாள் ஐயங்கார், பிள்ளைப் பெருமாள் ஐயங்கார், சுப்ரதீபக் கவிராயர், உமறுப்புலவர், தாயுமானவர் போன்ற பல புலவர்கள் இருந்தனர். ஆனால் இவர்களை நாயக்கர்கள் ஆதரிக்கவில்லை.

எனினும் நாயக்க மன்னர்கள் தமிழகத்தோடு பிணைந்த வரலாற்றைச் சொந்தமாக்கிக் கொண்டார்கள். அவர்கள் விட்டுச் சென்ற கலைச் செல்வங்கள் இன்றும் நின்று நிலவி அவர்களை நினைவூட்டிக் கொண்டிருக்கின்றன.