6.3 மராட்டியர் ஆட்சி

தஞ்சையில் மராட்டியர் ஆட்சியை ஏகோஜி என்பவர் கி.பி. 1676இல் தொடங்கி வைத்தார். அதுமுதல் அவரும், அவரைத் தொடர்ந்து வந்த அரசர்களும் தங்கள் ஆட்சியில் நடைபெற்றவைகளைக் கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் பொறித்து வைத்தனர். அவற்றைக் கொண்டு அவர்கள் செய்த போர்களையும், திருப்பணிகளையும், ஆங்கிலேயரோடு செய்துகொண்ட ஒப்பந்தங்களையும் பற்றி இதற்கு முன்பு மராட்டிய மன்னர்கள் என்ற தலைப்பில் விரிவாகப் பார்த்தோம். இனி மராட்டியர் ஆட்சிமுறை எவ்வாறு அமைந்திருந்தது என்பதைப் பற்றிக் காண்போம்.

6.3.1 அரசர்

தஞ்சை மராட்டிய அரசுக்குத் தலைமை வகித்து ஆட்சி புரிய உரிமை உடையவர் அரசர் ஆவார். அரசருக்குப் பிறகு அவருடைய மூத்த மகனே ஆட்சிக்கு வருவது மரபாக இருந்தது. தஞ்சையில் மராட்டிய அரசை நிறுவிய ஏகோஜி மறைந்ததும் அவருடைய மூத்த மகனாகிய ஷாஜி அரசரானார். அரசர் வாரிசு இல்லாமல் இறந்துபட்டால், அவருடைய தம்பி ஆட்சிக்கு வருவதும் மரபாக இருந்தது. ஷாஜி 28 ஆண்டுகள் அரசாண்டார். அவருக்கு வாரிசு இல்லை. எனவே அவர் மறைந்ததும் அவருடைய தம்பி முதலாம் சரபோஜி அரசரானார். சில நேரங்களில் அரசர் தமக்குக் குழந்தை இல்லையென்றால், தம் ஆட்சிக் காலத்திலேயே ஆண்குழந்தை ஒன்றை மகன்மை செய்துகொள்ளும் வழக்கம் இருந்தது. அக்குழந்தை வளர்ந்து அரசராவதும் உண்டு. இரண்டாம் சரபோஜி இவ்வாறு அரசரானார்.

6.3.2 நாட்டுப் பிரிவுகள்

தஞ்சை மராட்டிய மன்னர் ஆட்சி புரிந்த நாடு பெரும்பாலும் இன்றைய தஞ்சை மாவட்டம், திருவாரூர் மாவட்டம், நாகை மாவட்டம் ஆகிய மூன்று மாவட்டங்களை உள்ளடக்கியிருந்தது. இவர்களின் நாட்டுக்குக் கொள்ளிடம் ஆறு வடக்கு எல்லையாக அமைந்தது; வங்காள விரிகுடாக் கடல் கிழக்கு எல்லையாக அமைந்தது; மேற்கே திருச்சி, புதுக்கோட்டை அரசுகளும், தெற்கே இராமநாதபுர அரசும் எல்லைகளாக அமைந்தன.

நிருவாக வசதிக்காக மராட்டியர் தங்களது தஞ்சை நாட்டை ஐந்து பகுதிகளாகப் பிரித்து ஆட்சி புரிந்தனர். ஒவ்வொரு பகுதியும் சுபா என்று அழைக்கப்பட்டது. அவ்வைந்து சுபாக்கள் ஆவன : பட்டுக்கோட்டை, மன்னார்குடி, கும்பகோணம், மாயவரம் (மயிலாடுதுறை), திருவையாறு என்பனவாம். ஒவ்வொரு சுபாவிற்கும் தலைவர் ஒருவர் நியமிக்கப்பட்டார். அவர் சுபேதார் என அழைக்கப்பட்டார். இவரிடம் சுபாவின் ஆட்சித் தலைமை மட்டுமன்றி, இராணுவத் துறையும் இருந்தது.

ஒவ்வொரு சுபாவும் பல சீமைகளாகவும், ஒவ்வொரு சீமையும் பல மாகாணங்களாகவும் பிரிக்கப்பட்டன. காரைக்கால் சீமை, சீர்காழிச் சீமை, தஞ்சாவூர்ச் சீமை, திருவாரூர்ச் சீமை, நாகப்பட்டினம் சீமை எனப் பல்வேறு சீமைகளும், ஏழு மாகாணம், சாமிமலை மாகாணம், பச்ச மாகாணம் எனப் பல்வேறு மாகாணங்களும் இருந்தன. மாகாணத்தில் வட்டம், பத்து, கரை எனப் பல்வேறு சிறு பகுதிகளும் இருந்தன. இப்பகுதிகளில் சிறுசிறு ஊர்கள் பல இருந்தன. ஊர்களில் சில தனியூர் என்று அழைக்கப்பட்டன. அவை தனி நிருவாகமுடைய ஊர்களாக இருந்தன. ஊரவையினர் ஊரார் என்றும், நாட்டை நிருவாகம் செய்யும் அவையினர் நாட்டார் என்றும் குறிக்கப் பெற்றனர்.

தஞ்சை மராட்டியர் நாட்டில் பல இடங்களில் கோட்டைகள் (Forts) இருந்தன. அவை, சாகக்கோட்டை, பந்தநல்லூர், மகாதேவ பட்டணம், அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, திருக்காட்டுப் பள்ளி, தேவிகோட்டை என்பனவாம்.

6.3.3 அரசு அலுவலர்கள்

தஞ்சை மராட்டியர் ஆட்சியில் அரசருக்கு உதவி செய்யப் பல அலுவலர்கள் இருந்தனர். சர்க்கேல், சுபேதார், அமல்தார், சிரஸ்தேதார், தாசில்தார், கொத்தவால், கில்லேதார், கமாவிஸிதார், திம்மதி, இமாரதி, ஹேஜிப் என்றாற் போலப் பல அலுவலர்கள் இருந்தனர். இவர்கள் அரசருக்கு உதவியாக இருந்து பல அலுவல்களைக் கவனித்து வந்தனர்.

சர்க்கேல் - தலைமை அமைச்சர்.
சுபேதார் - சுபாவுக்கு உரிய ஓர் அரசியல் அதிகாரி. சுபாவின் ஆட்சித் தலைமை மட்டுமன்றி, இராணுவத் துறையும் இவர் பொறுப்பில் இருந்தது.
அமல்தார் - வருவாய்த் துறை அதிகாரி.
சிரஸ்தேதார் - ஆவணக் காப்பாளர்.
தாசில்தார் - வட்டம் (தாலுகா) என்ற சிறிய பிரிவில் வரிவசூல் செய்யும் அலுவலர்.
கொத்தவால் - கோட்டைக் காவல் அதிகாரி.
கில்லேதார் - கோட்டையின் முழுப்பொறுப்பு அதிகாரி.
கமாவிஸிதார் - சத்திரங்களை மேற்பார்வை செய்யும் அதிகாரி.
திம்மதி - வழக்கு மன்றத் தீர்ப்பில் கையொப்பம் இடுபவர்.
இமாரதி - பழுதுபார்த்தல் (மராமத்து) முதலியவற்றைக் கவனிக்கும் அலுவலர்.
ஹேஜிப் - கணக்குப் பிள்ளை.

6.3.4 உழவர்கள் நிலை

கி.பி.1683 ஆம் ஆண்டு பிரிட்டோ பாதிரியார் எழுதிய கடிதம் ஒன்றில் ஏகோஜி நிலவரி வசூல் செய்த முறை பற்றிக் கூறப்படுகிறது. நில வருவாயில் ஐந்தில் நான்கு பங்கு வரியாக விதிக்கப்பட்டது என்றும், தன் விருப்பம் போல் விளைபொருள்களின் விலையை நிச்சயித்து அதை நாணயமாகச் செலுத்த வேண்டுமென்று ஏகோஜி வற்புறுத்துகின்றார் என்றும், நிலத்தின் முழு விளைச்சலையும் விற்றால் கூட நிலவரியைச் செலுத்த முடியாமல் மக்கள் தவித்தனர் என்றும், நிலவரி கொடுக்க முடியாதவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர் என்றும் அவர் கடிதத்தில் கூறப்படுகிறது. பிற மராட்டிய அரசர்களும் குடியானவர்களைக் கசக்கிப் பிழிந்து வரி வாங்கினர் என்று செவல் (Sewell) என்பவர் கூறுகின்றார்.

மேலே கூறப்பட்ட கருத்துகளை மெக்கன்சி என்பவர் மறுக்கின்றார். உழவர்கள் ஏகோஜியால் பெற்ற சிறப்புகள் முதலாம் சரபோஜியின் செப்பேடு ஒன்றினால் அறியப்படுகின்றன என்று அவர் கூறுகின்றார்.

பல செப்பேடுகள் குடியானவர் செய்த பல்வேறு அறச்செயல்கள் பற்றிக் குறிப்பிடுகின்றன. பல ஊர்களில் குடியானவர்களும், வணிகர்களும், அந்தணர்களும், அரசு அலுவலர்களும் இணைந்து அறக் கொடைகள் பல தந்துள்ளனர். உழவர்கள் தங்களுக்குள் மகமை வைத்து ஆலயப்பணி செய்திருக்கின்றனர். பொதுவாக எல்லா மராட்டியச் செப்பேடுகளும் பொதுமக்கள் மகிழ்ச்சியோடு வாழ்ந்து அறச்செயல்கள் செய்தமையையே கூறுகின்றன. எனவே மிகவும் கொடுமையான வரி, அதனைக் கசக்கிப் பிழிந்து வசூலித்தனர் என்ற கருத்துப் பொருந்தாது.

6.3.5 நில அளவு முறை

மராட்டியர் ஆட்சிக் காலத்தில் நிலங்கள் அளக்கப்பட்டன. நில அளவுக்குப் பல கோல்கள் பயன்படுத்தப்பட்டன. ஏகோஜியின் காலத்தில் 24 அடிக்கோலும், பிரதாப் சிங் காலத்தில் சோழ நாட்டின் மேற்குப் பகுதியில் (திருக்காட்டுப் பள்ளிச்சீமை) 14 அடிக்கோலும், சோழ நாட்டின் கிழக்குப் பகுதியில் (சீர்காழிச் சீமை) 21 அடிக்கோலும் பயன்படுத்தப்பட்டன.

கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலங்களுக்கு நாற்பக்க எல்லைகளும் சரியாகக் கூறப்பட்டன. பொதுவாக நிலம் மா, குழி, வேலி எனக் கணக்கிடப் பெற்றது.

6.3.6 வாணிகம்

மராட்டியர் ஆட்சிக் காலத்தில் வாணிகம் மிகவும் செழிப்பாக நடைபெற்று வந்தது. உள்நாட்டு வணிகர்களுடன் பிரெஞ்சு, போர்ச்சுக்கீசிய, டச்சு, இங்கிலாந்து நாடுகளின் வாணிகக் குழுக்களைச் சேர்ந்த வணிகர்களும் சோழ நாட்டுப் பகுதிகளில் வாணிகம் செய்து வந்தனர். வெளிநாட்டு வணிகர்கள் கடற்கரைகளில் தொழிற் சாலைகளையும், சேமிப்புக் கிடங்குகளையும் கட்டிக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக உள்நாட்டுக்குள் பொருள்களைக் கொண்டு வந்து விற்றனர்; உள்நாட்டுப் பொருள்களை வாங்கினர். அவர்களுக்குப் பல வணிகச் சலுகைகளும் அளிக்கப்பட்டன. முதலில் குத்தகைக்கு ஊர்களைப் பெற்ற வெளிநாட்டினர் பின்னர், தமிழக அரசியலில் ஈடுபட்டு இலவசமாகவும் ஊர்களைப் பெறத் தொடங்கினர்.

உள்நாட்டில் இருந்த உழவு சாராத மற்றத் தொழிலாளிகளும், வணிகர்களும் பலபட்டடை செட்டியள் வர்த்தகர் என்றும், பதினெட்டுப் பட்டடை வர்த்தகர்கள் என்றும் அழைக்கப்பட்டனர். பொருட்களை மொத்தமாகக் கொண்டு வந்து பலர் விற்கும் இடங்களைப் பேட்டை என்றனர். அரிசிப்பேட்டை, ஆட்டுப்பேட்டை என்றெல்லாம் பல பேட்டைகள் இருந்தன. அரிசிப்பேட்டையில் அரிசி விற்கும் வணிகர் பலரும், ஆட்டுப்பேட்டையில் ஆடு விற்கும் வணிகர் பலரும் இருந்தனர். தனித்தனியாகப் பொருட்கள் விற்கும் இடங்களைக் கடை என்றும் (அரிசிக்கடை, ஜவுளிக்கடை, தேங்காய்க் கடை, நெல்லுக் கடை, கசாப்புக் கடை, காசுக்கடை, கறிகாய்க் கடை, சாராயக்கடை) அழைத்துள்ளனர்.

ஒரே கடையில் பல்வேறு பொருட்களையும் விற்கும் இன்றைய மளிகைக்கடை போன்ற கடைகளும் அன்று இருந்தன. அவை சரக்குக்கடை, பல சரக்குக்கடை, சில்லறைக்கடை, மூலமளியக்கடை எனப் பல்வேறு பெயர்களில் அழைக்கப்பெற்றன.

அரிசி, நெல், தானியம், பயறு முதலிய பொருட்கள் விற்பனை நிலையங்களுக்குப் பொதி, சுமை என்ற அளவுகளில் கொண்டு வரப்பட்டன. விற்பனை நிலையங்களில் அப்பொருள்கள் கலம், குறுணி, கண்டி, சேர், படி, நாழி, உரி, தூணி, மா போன்ற பல்வேறு அளவுகளில் அளந்து விற்கப்பட்டன. நிறுக்கக் கூடிய பொருட்கள் மனு, துலாம் என்ற அளவுகளில் நிறுக்கப்பெற்றன. நெய் தோண்டி என்றும், வெற்றிலை கட்டு என்றும், எண்ணெய் குடம், காணம், சேர் என்றும் பல்வேறு அளவுகளில் விற்கப்பட்டன.

மூன்றேகால் சேர் கொண்டது ஒரு படி என்ற அளவு முறை இருந்துள்ளது. பொருட்கள் கடைகளில் விற்கப்பட்டது மட்டுமின்றி, உள்ளூரிலும் கொண்டு போய் விற்கப்பட்டன. அன்றிருந்த பல்வேறு வணிகர்கள் பெயர்களையும் செப்பேடுகள் மூலம் அறிகின்றோம்.

6.3.7 நாணய முறை

தஞ்சை மராட்டியர் கால நாணயம் எதுவும் இதுவரை கிடைக்கப் பெறவில்லை. ஆனால் செப்பேடுகளில் நாணயங்கள் பற்றிய பல குறிப்புகள் கிடைக்கின்றன. பணம், பொன், வராகன், ராசகோபாலச் சக்கரம், காசு என்ற பல குறியீடுகளைச் செப்பேடுகளில் காண முடிகிறது.

ஒரு செப்பேட்டில் பொன் (துளைப்பொன்) என்று குறிக்கப்பெறுகிறது. அஃது உயர்ந்த பொன்னாக இருக்கலாம். கால் பணம், அரைப்பணம் என்ற வழக்கம் இருந்துள்ளது.

10 பணம் கொண்டது 1 பொன் என அழைக்கப்பட்டது. பொன்னும் ராசகோபாலச் சக்கரமும் சமமான மதிப்புக் கொண்டது காசாகும்.

நாணயம் உருவாக்கும் இடம் கம்பட்டம் எனப்பட்டது. நாகப்பட்டினத்தில் டச்சுக் கிழக்கிந்தியக் கம்பெனியாரும், ஏகோஜியும் சேர்ந்து ஒரு கம்பட்டத்தில் கூட்டாகக் காசுகள் அடித்தனர். அக்காசு தங்கக் காசு ஆகும். தஞ்சாவூர்ச் சீமைக்காக மூன்றரை மாத்து உள்ள பணமும், பவழக்காடு சீமைக்காக எட்டரையே அரைக்கால் மாத்து உள்ள வராகனும் அடிக்கப்பட்டன. அக்கம்பட்டங்கள் முறையே பணக் கம்பட்டம், வராகன் கம்பட்டம் எனத் தனித் தனியாகப் பெயர் கொடுத்து அழைக்கப்பட்டன. இந்த வராகன், விராகன் என்ற பெயராலும் குறிக்கப்படுகிறது.

இந்த நாணயங்கள் அடிக்கிற கம்பட்டத்தில் வருகின்ற வருவாயில் டச்சுக் கம்பெனிக்குப் பாதியும், ஏகோஜிக்குப் பாதியும் சேர வேண்டும் என்றும், கம்பட்டத்தில் ஏகோஜியின் ஆள் ஒருவர் இருந்து கணக்குகளைச் சரிபார்க்கலாம் என்றும் ஒப்புக் கொள்ளப்பட்டது.

6.3.8 சமய நிலை

சைவம், வைணவம், இசுலாம், கிறித்தவ சமயங்கள் எல்லாவிதமான வழிபாட்டு உரிமைகளுடன் மராட்டியர் ஆட்சியில் நிலவினாலும், சைவ சமயமே மிகச் சிறப்புடன் செழித்தோங்கியது. தஞ்சை மராட்டிய மன்னர்கள் வெளியிட்ட 50 செப்பேடுகளில் 40 செப்பேடுகள் சிவாலயம் தொடர்பான செய்திகளைப் பேசுகின்றன.

அரசர்களும், பாளையக்காரர்களும், முன்னின்று ஆலயத் திருப்பணிகள் செய்தனர். அரசு அலுவலர்கள் ஆங்காங்கு நடைபெற்ற சமயக் கொடைகளுக்கும் விழாவிற்கும், வழிபாட்டிற்கும் முன்னின்று உதவினர். பல்வேறு வணிகர்கள் சாதி மத பேதமின்றித் தங்கள் வாணிகத்திற்கு ஏற்ப மகமை வசூல் செய்தும், பொன்னை அளித்தும், சிவாலயத்திற்கு விழா எடுத்தனர். உழவர்களும் தங்கள் குடும்பத்திற்கு ஏற்பவும், விளைச்சலுக்கு ஏற்பவும் நாணயங்களையும், தானியங்களையும் சிவாலயத்திற்கு அளித்தனர்.

சிதம்பரம், வைத்தீஸ்வரன் கோயில் போன்ற பல ஊர்களில் மடங்கள் இருந்தன. ஒரே ஊரில் பல சாதியாருக்குத் தனித்தனி மடங்கள் இருந்தன. ஆங்காங்குச் சமய தருமம் இனிது நடத்தச் சான்றோர்கள் பலர் இருந்ததாகச் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது.

ஆலயங்களில், நாள் வழிபாடு, வார வழிபாடு, பட்ச வழிபாடு, மாத வழிபாடு ஆகியவையும், ஆண்டுச் சிறப்பு விழாக்களுடன் பல்வேறு பண்டிகைகளும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டன. வழிபாட்டின்போது அந்தணர்களுக்கும், வழிப்போக்கர்களுக்கும் திரு அமுது படைக்கப்பட்டது. ஏழைகளும், நோயாளிகளும் நாள்தோறும் உணவு பெற்றனர். அன்னதானத்துக்கு எனத் தனியாகச் சத்திரங்களும் அமைக்கப்பட்டன.

6.3.9 மொழி நிலை

மராட்டிய மன்னர்கள் வெளியிட்ட பல செப்பேடுகள் மூலம் தஞ்சை மராட்டிய நாட்டில் நிலவி வந்த மொழி நிலையை ஓரளவிற்கு அறிய முடிகிறது.

(i) முதலிலும், இடையிலும், இறுதியிலும் ரகரம் றகரமாக எழுதப் பெற்றுள்ளது.

சான்று :

ராமலிங்கம் - றாமலிங்கம்
கிராமம் - கிறாமம்
ர்மம் - தற்மம்
வீரராம - வீறறா
நயினார் - நயினாற்

(ii) நகரம் னகரமாக எழுதப் பெற்றுள்ளது.

சான்று :

நாகப்பட்டினம் - னாகப்பட்டினம்
நாயக்கர் - னாயக்கர்
நாச்சியார் - னாச்சியார்
நாடு - னாடு
நாட்டாமை - னாட்டாமை

(iii) இரட்டை றகரம் இரட்டைத் தகரமாக எழுதப்பெற்றுள்ளது.

சான்று :

ற்றும் - மத்தும்
ற்றுக்கு - ஆத்துக்கு
முற்றிலும் - முத்திலும்
பெற்ற - பெத்த

(iv) இரட்டைத் தகரம் இரட்டைச் சகரமாக எழுதப்பெற்றுள்ளது.

சான்று :

சம்மதித்து - சம்மதிச்சு
நியமித்த - நியமிச்ச

(v) இகர, ஈகாரம் முறையே யிகர, யீகாரமாக எழுதப்பெற்றுள்ளது.

சான்று :

ந்தியக்கரை - யிந்தியக்கரை
ந்த - யிந்த
ழம் - யீழம்

(vi) யகர ஒற்று இகரச் சாரியை பெற்று எழுதப் பெற்றுள்ளது.

சான்று :

வாய் - வாயி
தேங்காய்க்கடை - தேங்காயிக் கடை
நெய்வேதனம் - நெயிவேதனம்

மேலே கூறப்பட்டவைகளைப் போல் இன்னும் பல எழுத்துகள் மாற்றிப் பயன்படுத்தப்பட்டன.