3.3 அகநூல்கள்
|
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் அகப்பொருள் பற்றியன ஆறு நூல்களாகும்.
அவை (1) கார்நாற்பது (2) ஐந்திணை ஐம்பது (3) திணைமொழி ஐம்பது (4)
ஐந்திணை எழுபது (5) திணைமாலை நூற்றைம்பது (6) கைந்நிலை என்பன.
|
3.3.1 கார் நாற்பது
|
இது முல்லைத்திணைக்குரிய ஆற்றியிருக்கும் ஒழுக்கத்தினை
அழகிய நாற்பது வெண்பாக்களால் விளக்கும் நூலாகும்.
முல்லையின் பெரும்பொழுதான கார்காலம் ஒவ்வொரு
பாட்டிலும்
சிறந்த முறையில் பாடப்படுவதால் இது கார் நாற்பதாயிற்று.
இதன் ஆசிரியர் மதுரைக் கண்ணங் கூத்தனாராவார்.
கண்ணனார் என்பவர் இவர் தந்தையார் என்பர். தம் முதற்பாட்டிலேயே வானவில்லைத் திருமாலின் மார்பில் அசைந்தாடும்
பல வண்ண
மாலையோடு உவமித்தமையாலும், பத்தொன்பதாம்
பாட்டில் கடப்ப மலர்களின் வெண்ணிறத்திற்குப் பலராமன்
வெண்ணிறத்தை உவமையாகக் கூறலாலும் இவரை வைணவர் என
அடையாளம் காட்டுவர்.
சிவபெருமானுக்காகப் பண்டைத் தமிழர் கொண்டாடிய
கார்த்திகை விழாவையும் இவர் (பா.
26) சுட்டத் தவறவில்லை. இது
இவருடைய சமயப் பொதுமைப் பண்பாட்டிற்கு சான்றாகும்.
அரசன் பொருட்டுப் போர்க்கடமை ஆற்றத் தன் காதலியைப்
பிரிந்து போன தலைவன், தான் குறித்துச் சென்ற கார்காலம்
வந்தும் திரும்பவில்லை. அதனால் பிரிவாற்றாமல் தலைவி
வருந்தினாள். அவளை அவள் தோழி அன்பு மொழிகள் பல
கூறித் தேற்றினாள். அப்பொழுது தலைவன் திரும்பி வந்தான்.
இதனை நாடகப் பாங்கில் கூறுவதே இந்த நூல்.
தலைவி பிரிவாற்றாமல் கூறுவது, அதற்குத் தோழி ஆறுதல்
கூறுவது, தலைவன் தன் உள்ளத்து உணர்வுகளைத் தன்
தேர்ப்பாகனிடம் வெளிப்படுத்துவது முதலியன இந்நூலில் இடம்
பெறுவனவாகும்.
இந்நூலில் நெஞ்சைக்கவரும் உவமைகள் மலிந்துள்ளன.
கார்கால மழையால் வழியெல்லாம் குமிழம் பூக்கள் கொத்துக்
கொத்தாய் அசைந்தாடுகின்றன. அவை பொன்னால் செய்த
குழைகளாகக் கவிஞர்க்குத் தோன்றுகின்றன.
இமிழிசை வானம் முழங்கக்
குமிழின்பூப்
பொன்செய் குழையின் துணர்தூங்கத் தண்பதம்
செவ்வி உடைய சுரம் (28) |
நொச்சியின் பூவுக்கு நண்டின் கண்களும் (39) தளவ மலருக்குச்
சிரல் பறவையின் அலகும் (36) உவமைகளாகக் கூறப்பட்டுள்ளன.
|
3.3.2 ஐந்திணை ஐம்பது
|
ஒவ்வொரு திணைக்கும் பத்துப் பாக்களாக ஐந்து திணைகளுக்கும் ஐம்பது வெண்பாக்களைக்
கொண்ட நூல் ஐந்திணை ஐம்பது என்று பெயர் பெற்றது. முல்லை, குறிஞ்சி,
மருதம், பாலை, நெய்தல் என்ற வரிசையில் திணைகள் வைக்கப்பட்டுள்ளன. கருத்து
வளமும் நடை வளமும் கொண்டது
இந்நூல்.
இதனை இயற்றியவர் மாறன் பொறையனார். மாறன் என்பது
இவருடைய தந்தையார் பெயராதல்
கூடும். எனவே பொறையனார்
என்பது இவர் இயற்பெயர் எனலாம்.
இந்நூலின் முதற் செய்யுளிலேயே திருமால், முருகவேள்,
சிவபெருமான் என்னும் மூன்று
கடவுளரின் திருப்பெயர்களும்
இடம் பெறச் செய்தமையின் இவருடைய சமயம் வைதீகம் என்பது
தெரிகின்றது.
இந்நூலுக்குச் சிறப்புப்பாயிரம் ஒன்று உள்ளது. இதற்குப் பழைய
உரையொன்று கிடைத்துள்ளது. இதன் செய்யுட்களைப்
பேராசிரியரும், நச்சினார்க்கினியரும் பிறரும் மேற்கோள்களாகக்
காட்டியுள்ளனர்.
தலைவனால் தனியே விடப்பட்ட பெண்ணொருத்தி, தன் காம மிகுதியால் வாடுகின்றாள்.
தன் தலைவன் ஊர்ந்து சென்ற தேரின் சுவட்டைக் கண்டேனும் ஆறுதல் பெற விரும்புகின்றாள்.
எனவே, அங்கும் இங்கும் ஊர்ந்து மகிழும் நண்டினை அழைத்து, வளைந்த
காலையுடைய நண்டே! உன்னை யான் ஒன்று வேண்டுகின்றேன். என்றும் ஒடுங்காத
ஆரவாரமுடைய கடற்கரை நாட்டின் தலைவனாகிய என் காதலன் ஏறிச் சென்ற தேர்
விட்டுச் சென்ற சுவட்டினை யான் கண்ணாரக் காணும்படியாக, அதனை நின் நடையாலே
சிதைத்து விடாதே! என்று வேண்டுகின்றாள் (42). இது போன்ற பாடல்களைக்
கொண்ட இந்நூல் அகஉணர்வுகளை அழகுபடச் சித்திரிக்கின்றது.
|
3.3.3 திணைமொழி ஐம்பது
|
இந்நூலும் ஐந்து திணைகளையும் பற்றிய ஐம்பது பாக்களைக்
கொண்டதே. ஒவ்வொரு திணைக்கும் பத்துப்பாடல்களைக்
கொண்டிருக்கும் இந்நூல் ஐந்திணை
ஐம்பதிற்கு வழி காட்டிற்றா
அன்றி ஐந்திணை ஐம்பது இதற்கு வழி காட்டிற்றா என்பது
விளங்கவில்லை. திணைகள் குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம்,
நெய்தல் என்ற வரிசையில்
அமைந்துள்ளன.
இதன் ஆசிரியர் கண்ணஞ்சேந்தனார். இவர் தந்தை பெயர்
சாத்தந்தையார். கார்நாற்பதின் ஆசிரியர் கண்ணங்கூத்தனாரும்,
கண்ணஞ்சேந்தனாரும் உடன்பிறந்தவரோ என ஐயுறுவார் உளர்.
பன்றிகள் தம் கொம்புகளால் தோண்டி வெளிப்படுத்திய
மாணிக்கக் கற்கள் இரவில் ஒளிவிட்டமையால்,
அதனைத் தீயெனப்
பிறழ உணர்ந்த கானவர் தம் கைகயை நீட்டிக் குளிர்காய
முனைந்தனர் என்பார் இவர் (4).
பலாக்கனியொன்றைப் பெற்ற ஆண்குரங்கு அதனைத் தன்
காதலியோடு உண்டு மகிழ விரும்பி அதனை அன்போடு
அழைக்கும் என இவர் கூறுவது (10) அகநானூற்றின் 353 ஆம்
செய்யுளை நினைவூட்டுகின்றது.
அஞ்சனம் காயா மலரக்
குருகிலை
ஒண்தொடி நல்லார் முறுவல் கவின்கொளத்
தண்கமழ் கோடல் துடு்ப்பு ஈனக் காதலர்
வந்தார் திகழ்க நின்தோள் (21) |
என்பது இந்நூலின் மிக அழகிய பாட்டுகளுள் ஒன்றாகும்.
“காயாச் செடி கண்மை போலப் பூக்க, குருக்கத்திச்
செடி
பெண்களின் பற்களைப் போன்று விளங்க, வெண் காந்தள்
துடுப்பைப் போன்று மலர, நம் தலைவர் மணம் பேச வந்தார்;
எனவே உன் தோள்கள் முன் போல் பூரிக்க” - என்பது இதன்
பொருள்.
|
3.3.4 ஐந்திணை எழுபது
|
அன்பின் ஐந்திணைகளான முல்லை, குறிஞ்சி, மருதம்,
நெய்தல், பாலை என்பவற்றுள் ஒவ்வொன்றுக்கும் 14 செய்யுட்கள்
வீதம் எழுபது செய்யுட்களைக் கொண்டிருப்பதனால் இப்பெயர்
பெற்றது. இப்பொழுது இந்நூலில் 66 வெண்பாக்கள் மட்டுமே
உள்ளன.
எஞ்சிய நான்கும் அழிந்து போயின (25, 26, 69, 70).
இன்னிசை வெண்பாக்களாலும் நேரிசை வெண்பாக்களாலும்
ஆனது இது. இதில் கடவுள் வாழ்த்துப்பாவொன்று உண்டு. அது
விநாயகர் வணக்கமாகும். கி.பி. ஏழாம் நூற்றாண்டில்தான்
பிள்ளையார் வணக்கம் தமிழ்நாட்டில் வழக்கிற்கு வந்தது. எனவே
கி.பி. ஐந்தாம் நூற்றாண்டுக்கு உரிய இந்நூலில் உள்ள
இவ்வாழ்த்துப் பிற்காலத்தில் இணைக்கப்பட்டது என்பர். இதற்குப்
பழைய உரை இல்லாமை இதற்குச் சான்றாகும்.
|
ஆசிரியர்
|
இதனை இயற்றியவர் மூவாதியார். இவரைச் சமணர் என்பர்
சிலர். ஆனால், நூலில் இதற்குச் சான்று இல்லை. இவருடைய
பெயருக்கு உரிய காரணம் புலப்படவில்லை.
ஒருவேளை அயன்,
மால், சிவன் என்னும் மூன்று கடவுளர்க்கும் மூலமான
பரம்பொருள் என்று இப்பெயருக்கு விளக்கம் கூறலாம்.
|
சிறப்புச் செய்திகள்
|
இந்நூல் ஐந்திணை ஐம்பது என்ற நூலை அடியொற்றியது.
பெயர் ஒற்றுமையும் வேறு சில குறிப்புகளாலும் இதனை
உணரலாம். ஐந்திணை ஐம்பதின் 38 ஆம் செய்யுளில் வரும்.
கள்ளத்தின் ஊச்சும்
சுரம் என்பர், காதலர்
உள்ளம் படர்ந்த நெறி |
என்பதும் ஐந்திணை எழுபதில் 36 ஆம் செய்யுளில் வரும்,
கள்ளர் வழங்கும் சுரம்
என்பர், காதலர்
உள்ளம் படர்ந்த நெறி |
என்பதும் ஒத்திருத்திருக்கின்றன.
சான்றோருடனான நட்பு இப்பிறப்பில் சிதைவுபடாமல் ஊன்றி
நின்று வலிமை பயப்பதோடு, வரும் பிறவிகளிலும்
உறுதுணையாகும் என்கிறார் இவ்வறிஞர்.
சான்றவர் கேண்மை சிதைவு
இன்றாய் ஊன்றி
வலிஆகி, பின்னும் பயக்கும் - (5) |
புல்லுநர் இல்லார் நடுங்க,
சிறு மாலை,
கொல்லுநர் போல வரும் (17) |
(புல்லுநர் = அணைக்கும் காதலர்) என்ற இந்நூலின் பகுதி,
காதலர் இல்வழி மாலை,
கொலைக்களத்து
ஏதிலர் போல வரும்
(திருக்குறள்
: 123 : 4) |
என்ற திருக்குறளின் எதிரொலியாகும்.
பெண்களுக்கு இடக்கண் துடித்தல், நல்ல இடத்தில்
பல்லி ஒலி
செய்தல், நல்ல கனாக்கள் காணல் என்பன நல்லவை நிகழ்வதனை
உணர்த்தும் அறிகுறிகள் என்று இந்நூலின் 41ஆம் செய்யுள்
கூறுகின்றது. இது சமுதாய நம்பிக்கைகளின் வெளிப்பாடு.
|
3.3.5 திணைமாலை நூற்றைம்பது
|
பதினெண்கீழ்க்கணக்கிலுள்ள அகநூல்களுள் பெரியது
இதுவே. குறிஞ்சி முதலான அகத்திணை
ஒழுகலாறுகளை
வரிசைப்படுத்தி மாலைபோலத் தொகுத்து அமைத்தமையால்
திணைமாலை ஆயிற்று.
பாடல் எண்ணிக்கையால் திணைமாலை
நூற்றைம்பதாயிற்று. குறிஞ்சி, நெய்தல், பாலை,
முல்லை, மருதம்
எனத் திணை வரிசை அமைந்துள்ளது. ஒவ்வொரு திணைக்கும்
முப்பது செய்யுட்கள் அமைந்திருத்தல் முறை. எனினும் குறிஞ்சி,
நெய்தல், முல்லை என்னும் திணைகள் தலைக்கு 31
செய்யுட்களைப் பெற்றுள்ளன. மூன்று செய்யுட்கள்
மிகைப்பாடல்களாகக் கருதத்தக்கனவாகும். இதிலுள்ள 153
செய்யுட்களுக்கும் பழைய உரை காணப்படுகிறது.
இந்நூலின் ஆசிரியர் கணிமேதாவியார். இவர் சமணர்.
மதுரையைச் சேர்ந்த தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணாக்கர்
என்று இவர் அறியப்படுகிறார். தலைவியை, கோடாப்புகழ்
மாறன்
கூடல் அனையாள் (4) என இவர் குறித்தலால் இவர்
மதுரையின்பாலும் பாண்டியன்பாலும், பேரன்புடையவர் என்பது
உணரப்படும்.
இந்நூலின் மூன்று செய்யுட்களில் மாந்தர் நல்ல நாள் பார்த்துத்
தம் கடமையாற்றுவது பற்றிய குறிப்புண்டு. (46, 52, 54) இவர்
கணியர் என்பது இதனால் தெளியப்படும்.
அளகம், வகுளம், பாலிகை, சாலிகை, சுவர்க்கம், அலங்காரம்
முதலிய வட
சொற்கள் இதில் இடம் பெற்றுள்ளன. இந்நூலின்
எட்டாம் செய்யுளில் காமவேளின் அம்புகள் ஐந்து என்ற
குறிப்புள்ளது.
கடலுக்கும், கானலுக்கும் முறையே மாயவனும் பலராமனும்,
உவமையாகக் கூறப்பட்டுள்ளனர்.
(58) அவ்வாறே இருளுக்கும்,
நிலவுக்கும் இக்கடவுளர் உவமையாக்கப்பட்டுள்ளனர். (96, 97)
இப்பிறவியில் செய்த நன்மை, தீமைகளின் பயன்களை அடுத்த
பிறவியில் துய்ப்பர் என்ற
நம்பிக்கைக்கு மாறாக, அப்பயன்களை
இப்பிறவியிலேயே துய்க்க வேண்டும் போலும் என்ற
கருத்தை
இவர் வெளியிடுகிறார்.
இம்மையால் செய்ததை இம்மையே
ஆம்போலும்
உம்மையே ஆம் என்பார் ஓரார் காண் (123) |
சுந்தரமூர்த்தி சுவாமிகளின் தேவாரம், கலித்தொகை,
சீவக
சிந்தாமணி, திருக்குறள் முதலான நூல்களின் கருத்துக்களோடு
ஒத்த பகுதிகளை இந்நூலில் காண முடிகிறது. இதனால், இந்நூல்
காலத்தால் பிற்பட்டது என்ற உண்மை புலப்படுகின்றது. இந்நூலுக்கு 127 ஆம் செய்யுள் வரை பழைய உரை
கிடைக்கிறது. எஞ்சியவற்றுக்குக் கிடைக்கவில்லை. இந்நூல்
உரையாசிரியர்கள் பலராலும் மேற்கோளாகக் காட்டப்பட்ட
சிறப்புக்குரியது.
|
3.3.6 கைந்நிலை
|
‘கை’ என்பது ஒழுக்கம். இங்கு அகவொழுக்கத்தை இது
குறிக்கும். ஐந்திணை ஒழுக்கம்
பற்றிய நூல் என்பது ‘கைந்நிலை’
என்பதன் பொருள். திணைக்குப் பன்னிரண்டு வெண்பாக்கள்
கொண்டது. எனவே இது ஐந்திணை அறுபது என்ற பெயர்க்குத்
தகுதியானது. இதில் பாடல்கள்
குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம்,
நெய்தல் என்ற வரிசையில் வைக்கப்பட்டுள்ளன. இதன் 18
பாடல்கள் சிதைவுகளுடன் காணப்படுகின்றன.
|
ஆசிரியர்
|
இதன் ஆசிரியர் மாறோகத்து முள்ளிநாட்டு
நல்லூர்க்
காவிதியார் மகனார் புல்லங்காடனார். புல்லங்காடனார் இவரது
இயற்பெயர். இவர் தந்தையார் காவிதிப்பட்டம் பெற்றவர் எனத்
தெரிகிறது. மாறோகம் என்பது கொற்கையைச் சூழ்ந்த பகுதி. தென்னவன் கொற்கைக் குருகு இரிய என்ற தொடர்
இந்நூலின் 60 ஆம் பாடலில் இடம் பெறுவதால் இவர்
பாண்டியனால் ஆதரிக்கப்பட்டவர் என்று கருதலாம்.
|
சிறப்புச் செய்தி
|
அகப்பொருளைப்பாடுவதில் இந்நூலும் ஏனைய
நூல்களையொத்தே காணப்படுகிறது. தாரா (40) பாசம் (3) ஆசை
(3) இரசம் (5) கேசம் (12) இடபம் (36) உத்தரம் (48) முதலிய
வடசொற்களை இதில் காணலாம்.
இதன் சில பகுதிகட்கு மட்டுமே உரை கிடைக்கிறது. இதன்
செய்யுட்களை இளம்பூரணர் முதலான பழைய உரையாசிரியர்கள்
எடுத்தாண்டுள்ளனர். இதிலுள்ள அழகிய பாடல்களுள் ஒன்று
வருமாறு:
காந்தள் அரும்பகை என்று
கதவேழம்
ஏந்தல் மருப்பிடைக் கைவைத்து இனன் நோக்கிப்
பாய்ந்து எழுந்து ஓடும் பய மலை நாடன்
காய்ந்தான் கொல் நம் கண் கலப்பு ! (9) |
(சுதவேழம் = யானை; மருப்பு = தந்தங்கள்; இனன் = இனம்;
பயமலை = பயன் மிகுந்த மலை; காயந்தான் கொல் =
வெறுத்தானோ?;
கலப்பு = கூட்டுறவு) |