4.1 சிலப்பதிகாரம்
 

தமிழில் வழங்கும் ஐம்பெருங்காப்பியங்களில் இது முதலாவதாக வைக்கப்பட்டுள்ளது. இக்காப்பியத்தின் தலைவியான கண்ணகியின் காலில் அணியப்பெற்ற சிலம்பே கதையின் நிகழ்விற்கு அடிப்படையானமையால் அவ்வணியின் பெயராலேயே காப்பியம் அழைக்கப்பட்டது. பூம்புகாரில் பெரும் புகழ்மிக்க வணிகர் குடியில் தோன்றிய கோவலனும், கண்ணகியும் இக்கதையில் தலைவனும் தலைவியுமாக அமைகின்றனர். அரசனால் தலைக்கோல் பட்டம் பெற்ற மாதவி இரண்டாம் தலைவி என்றும் நிலை பெற்றுள்ளாள். இவர்களைத் தவிர, பாண்டிய மன்னன், சேர மன்னன், கவுந்தியடிகள், ஆயர்குலமகள் மாதரி, அவள் மகள் ஐயை, கண்ணகியின் தோழி தேவந்தி, மாடலமறையோன், அரண்மனைப் பொற்கொல்லன் ஆகியோர் இதில் பாத்திரங்களாக அமைகின்றனர்.

4.1.1 நூலாசிரியர்
 

சிலப்பதிகாரத்தைப் படைத்தவர் இளங்கோவடிகள். இவர் சமணர் என்பது பலர் கருத்து. ஆயினும் வைதீகச் சமயத்தவர் என்ற கருத்தும் உண்டு. இவர், சேரமான் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் இளைய மகன் என்றும், இவர்க்கு மூத்தவனே புகழ்மிக்க கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன் என்றும் கூறுவர். இவர் வரலாறு, இந்நூலின் கடைசிக் காதையில் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளது. சேரமான் அரசவைக்கு வந்த சோதிடன் ஒருவன், இளையவரான இளங்கோவுக்கே தம் தந்தைக்குப் பின்பு அரசனாகும் வாய்ப்பு உண்டு என்று கூற, அதுகேட்டு மூத்தவனான செங்குட்டுவன் மனம் வருந்தினான் என்றும், அதனைக் கண்ட இளங்கோ, தன் அண்ணன் ஆட்சி பெறும் வகையில் தாம் துறவு பூண்டு குணவாயிற் கோட்டத்தில் தவம் செய்தார் என்றும் சிலப்பதிகாரம் சொல்கிறது.

செங்குட்டுவன் கி.பி. இரண்டாம் நூற்றாண்டினன். எனவே, இளங்கோவடிகள் அக்காலத்தவரே என்பர். வரந்தரு காதையில் பத்தினி விழாவிற்கு வந்தவர்களுள் கடல்சூழ் இலங்கைக் கயவாகுவும் ஒருவனாக இடம் பெறுகிறான். இவன் காலம் கி.பி. 2 ஆம் நூற்றாண்டு. எனவே, அடிகளும் அக்காலத்தவரே என்பர். ஆயினும் ஆராய்ச்சியாளர்கள் சிலர், இளங்கோவடிகள் கி.பி.5 அல்லது 6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்பர்.

4.1.2 காப்பியத்தின் அமைப்பு
 

இக்காப்பியம் (1) புகார்க் காண்டம் (2) மதுரைக் காண்டம் (3) வஞ்சிக் காண்டம் என்று மூன்று பகுதிகளைக் கொண்டது. ஒவ்வொரு காண்டமும் பல உட்பிரிவுகள் கொண்டது. பெரும்பான்மையான பிரிவுகள் காதை என்ற பெயரும், சிறுபான்மையானவை பாடல், வரி, குரவை என்றும் பெயர் பெறுகின்றன. உரைப்பாட்டுமடை, உரைபெறு கட்டுரை என்ற உறுப்புக்களும், சில வெண்பாக்களும் இதனுள் உண்டு.

புகார்க் காண்டத்தில் பத்தும், மதுரைக் காண்டத்தில் பதின்மூன்றும், வஞ்சிக் காண்டத்தில் ஏழும் என உட்பிரிவுகள் அமைந்துள்ளன. நூலின் முகப்பில் பதிகம் என்ற உறுப்பும் உள்ளது. இது பின்னால் சேர்க்கப்பட்டது என்பர். இது சிலப்பதிகார நிகழ்ச்சிகளைத் தொகுத்துச் சொல்கிறது. இக்காப்பியம் மூன்று அடிப்படைக் கருத்துக்களைக் கூறுகிறது. அவையாவன:

1) அரசியல் பிழைத்தார்க்கு அறம் கூற்றாகும்.
2) புகழ்மிக்க பத்தினியை உலகம் போற்றும்
3) ஊழ்வினை தவறாது வந்து தன் பலனை அடையச் செய்யும்

என்பனவாகும். இக்கதையை, இதன் ஆசிரியரான இளங்கோவடிகள் சொல்ல, அதனை மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் கேட்டார் என்கிறது சிலப்பதிகாரம்.

4.1.3 கதைச் சுருக்கம்
 

கோவலனும் கண்ணகியும் காவிரிப்பூம்பட்டினத்தில் புகழ் ஒங்கிய இரு வணிகர்களின் மக்களாகத் தோன்றியோர். இருவரும் மணந்து கொண்டு இனிதே இல்லறம் நடத்திவரும் காலத்தில், அந்நகரத்தில் கணிகையர் குடும்பத்தில் பிறந்த கலையரசி மாதவியின் அழகால் கவரப்பட்ட கோவலன் தன் மனைவியைத் தனியே விடுத்து மாதவி இல்லத்திலேயே வாழ்ந்தான். ஒரு நாள் கடற்கரை மணல் வெளியில் இருவரும் அமர்ந்து யாழ் வாசித்துப் பாடும்போது கோவலனுக்கு மாதவி மீது ஐயம் தோன்றிற்று. அவன் தன் வீடு நோக்கிச் சென்றான்; தன் குறைகளை வெளிப்படையாகக் கண்ணகியிடம் சொல்லி வருந்தினான்; தன் செல்வம் குறைவுற்றது பற்றிப் புலம்பினான்; இழந்த பொருளை மீட்க மதுரைக்குச் செல்ல விரும்பினான்.

கண்ணகி தன் விலையுயர்ந்த கால் சிலம்பை மூலப்பொருளாகக் கொடுத்தாள். இருவரும் கவுந்தியடிகள் என்னும் சமணப் பெண் துறவி துணையுடன் மதுரை அடைந்தனர். கண்ணகி, ‘மாதரி’ என்னும் இடையர் குலத்துப் பெண் வீட்டில் அடைக்கலப்படுத்தப்பட்டாள். கோவலன் ஒரு சிலம்பை மட்டும் எடுத்துக் கொண்டு மதுரைக்குச் சென்றான். பாண்டி மாதேவியின் சிலம்பைத் திருடிய கள்வனாக, ஒரு பொற்கொல்லனால் திருட்டுக் குற்றம் சாட்டப்பட்டு, மன்னனால் கோவலன் கொல்லப்பட்டான். செய்தி அறிந்த கண்ணகி, பாண்டியன் அவையில் வழக்குரைத்துத் தன் கணவன் குற்றமற்றவன் என்று மெய்ப்பித்தாள். தன் பிழை உணர்ந்த பாண்டியன் உயிர் துறந்தான். சினம் அடங்காக் கண்ணகி மதுரையைத் தீக்கிரையாக்கினாள். மேற்கு நோக்கி நடந்து சேரநாட்டை அடைந்தாள். அங்கே ஒரு வேங்கை மரத்தடியில் அவள் நின்றபோது, தேவர்கள் வந்து இறந்த கோவலனை அவளுக்குக் காட்டி, தம் ஊர்தியில் அவர்களை ஏற்றி விண்ணுலகிற்கு இட்டுச் சென்றனர்.

இக்காட்சியைக் கண்ட குறவர்கள் மலைவளம் காண அங்கு வந்து தங்கியிருந்த சேரன் செங்குட்டுவனிடம் அதனைத் தெரிவித்தனர். உடனிருந்த அரசமாதேவியின் விருப்பப்படி அவன் கண்ணகிக்குச் சிலை நிறுவி, கோயில் கட்ட விரும்பினான்.
 

இமயமலையில் கல்லெடுத்துக் கங்கையில் நீராட்டி, தமிழர் வீரத்தைப் பழித்த கனகவிசயர் தலைமீது அதனை ஏற்றிவந்து, வஞ்சி மாநகரில் பத்தினிக் கோட்டம் நிறுவினான். அவ்விழாவிற்குத் தமிழரசர்களும் குடகுநாட்டுக் கொங்கரும், மாளுவ வேந்தரும், இலங்கை மன்னன் கயவாகுவும் வந்தனர். அவர்கள் வேண்டுதலை ஏற்று அவர்களின் நாட்டிலும் எழுந்தருளுவதாகப் பத்தினித் தெய்வம் வரம் கொடுத்தது. கண்ணகித் தெய்வம் செங்குட்டுவனுக்கும் பிறருக்கும் காட்சியளித்ததோடு பாண்டியன் குற்றமற்றவன் என்றும், தான் அவனுடைய மகள் என்றும், வென்வேலான்குன்றத்தில் தான் எப்போதும் விளையாடப் போவதாகவும் கூறி மறைந்தாள். தேவந்தியின் மேல் தோன்றி வரலாற்றைக் கூறினாள்.