6.3 பூதத்தாழ்வார்

முதலாழ்வார் மூவருள் இரண்டாம் இடம் வகிப்பவர் பூதத்தாழ்வார். இவரும் தொண்டை நாட்டில் பிறந்தவரே. கடல்மல்லை என்று சிறப்பிக்கப்படும் மகாபலிபுரத்தில், ஒரு குருக்கத்திப் பந்தலில், ஒரு குருக்கத்தி மலரில் பிறந்தவராக இவர் பாராட்டப்படுகின்றார். இவர் ஐப்பசித் திங்களில் அவிட்ட விண்மீனில் பிறந்தவர் என்பர். இவர் திருமாலின் கையிலுள்ள கதை என்னும் படைக்கருவியின் அமிசம் எனக் கருதுவது வைணவ மரபாகும்.

  • பெயர்க்காரணம்
     
  • பூதம் என்னும் வடசொல் பூ என்ற அடிச்சொல்லில் இருந்து தோன்றியது. இதன் பொருளாவது, சத்தைப் பெற்றது என்பது. (சத்து = அறிவு) திருமாலின் திருக்குணங்களை அநுபவித்தே அறிவைப் பெற்றவர் பூதத்தாழ்வார் என்பர்.

    6.3.1 பூதத்தாழ்வாரின் அருளிச்செயல் (திருநூல்)
     

    பூதத்தாழ்வாரின் அருளிச்செயல் இரண்டாம் திருவந்தாதி. இது இயற்பா என்னும் பிரிவில் அடங்குவது. தனிப்பாடல் நீங்கலாக இதில் 100 இனிய வெண்பாக்கள் அடங்கியுள்ளன. பாடல் தோறும் எம்பெருமானின் கலியாண (நல்ல) குணங்கள் பற்றிய புகழ்ச்சியும், அவருடைய அருட்செயல்களும் நிரம்பிய நூல் இது.

  • ஞானச்சுடர் விளக்கு
     
  • அன்பே விளக்காகவும், ஆர்வமே நெய்யாகவும், சிந்தையே திரியாகவும் கொண்டு ஞான விளக்கை ஏற்றி நாராயணனைத் துதித்தவர் பூதத்தாழ்வார்.

    அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
    இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புருகி
    ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
    ஞானத் தமிழ் புரிந்த நான்      (1)

    (சிந்தை = உள்ளம்; நன்பு = நன்மை)

    6.3.2 கைதொழுவார் கண்ட பயன்
     

    திருமாலைக் கைதொழுதால், அதன்பிறகு ஒருவனுக்கு மண்ணுலகை ஆளும் பெருவளமும், வானவர்க்கு வானவனாய் வாழும் வாழ்க்கையும், விண்ணுலகப் பேறும் ஒரு பொருளாதல் இல்லை என்கின்றார் பூதத்தாழ்வார்.

    பூதத்தாழ்வாரின் இக் கூற்றினை, ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ வானாளும் செல்வமும் மண்ணரசும் யான் வேண்டேன் என்ற குலசேகர ஆழ்வாரின் கூற்றோடு ஒப்பிடலாம்.

  • கற்பனை வளம்
     
  • திருவேங்கட மலையின் வளத்தைக் கூறவந்த ஆழ்வார், மதம் பெருகும் களிறு ஒன்று, இளமூங்கிலைத் தன் துதிக்கையால் வளைத்து, அருகிலுள்ள தேனடையில் இருந்த தேனில் தோய்த்துத் தன் காதல் பிடிக்கு ஊட்டும் சிறப்புடையது என்று கூறுவது சிறப்பாகும். (75)

    6.3.3 பெருந்தமிழன்
     

    தம்மைப் போல் தவம் செய்தவர் யாரும் இல்லையென்றும், தாமே ஏழு பிறவிகளிலும் தவமுடையவர் என்றும் இறுமாப்புக் கொள்கின்றார் இவ் ஆழ்வார். இதற்குக் காரணம் கூறுவாராய், யானே, இருந்தமிழ் நன்மாலை இணைடியக்கே சொன்னேன் என்றார். பெருமானின் இணையடிகளுக்குப் பெருமை வாய்ந்த தமிழால் தொடுத்த மாலையை அணிவித்தமையால் தாம் பெருந்தமிழனான பெருமையினை, பெருந்தமிழன் நல்லேன் பெரிது (74) என்று கூறிப் பெருமிதம் அடைகின்றார்.