1.3 சைவ சமய இலக்கியங்கள்

சிவனை முழுமுதல் தெய்வமாகப் போற்றுவது சைவ சமயம். சைவசமயப் பெரியோர்கள் பாடிய பாடல்கள் சைவத் திருமுறைகள் ஆகும். பக்தியுணர்வு மிக்க பாடல்கள் நிறைந்தவை. சிறந்த பக்தி வைராக்கியம் கொண்டு, இறைவன் உருவைக் கண்டு அனுபவித்தல், அவன் புகழ் பாடுதல் இவற்றையே தம் வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்த காரைக்காலம்மையார் போன்றோரது பாடல்கள் இந்த நூற்றாண்டில் தோன்றியவை ஆகும்.

சைவ அடியார் படைத்த பாடல்கள் பன்னிரண்டு திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் காரைக்காலம்மையார் பாடிய அற்புதத் திருவந்தாதி, திருவிரட்டை மணிமாலை, திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் I, திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் II ஆகிய நான்கு நூல்களும் பதினோராம் திருமுறையில் இடம் பெற்றுள்ளன.

1.3.1 அற்புதத் திருவந்தாதி

காரைக்காலம்மையாரின் வரலாறு பெரியபுராணத்தில் உள்ளது. காரைக்காலில் செல்வ வணிகனின் மகளாகப் பிறந்த இவரது இயற்பெயர் புனிதவதியார் என்பதாம். பரமதத்தன் என்ற வணிகனை இவர் மணந்தார். புனிதவதியார் இறைவன் திருவருள் பெற்றவர் என்பதை உணர்ந்து மருண்ட பரமதத்தன் அவரை விட்டுவிட்டுப் பாண்டிய நாடுசென்று வேறொரு பெண்ணை மணந்து வாழ்ந்தான். புனிதவதியாரைச் சந்திக்க நேர்ந்தபோது அவரைத் தெய்வம் எனக் கூறி அவர் திருவடிகளைத் தொழுதான். அதனால் நாணமுற்ற புனிதவதியார் துறவு பூண்டு, சிவனை வேண்டிப் பேய் உருவம் கொண்டார்; கயிலைக்குச் சென்றபோது சிவன் அவரை அம்மையே என அழைத்தான். அப்பெருமை காரணமாக அவர் காரைக்கால் அம்மையார் என்று அழைக்கப்பட்டார்.

காரைக்காலம்மையார் பாடிய அற்புதத் திருவந்தாதி நூற்றியொரு வெண்பாக்களைக் கொண்டது. அந்தாதித் தொடை அமையப் பெற்றது.

அற்புதம் என்றால் சிறப்பு என்று பொருள். சிவனின் சிறப்புகளை - அற்புதங்களைப் பாடும் நூல். திரு என்ற சிறப்பு அடைமொழியோடு, அற்புதத் திருவந்தாதி என்று குறிக்கப்பெறுகின்றது.

அந்தாதி என்பது ஒரு பாடலின் இறுதியில் உள்ள எழுத்தோ, அசையோ, சீரோ அடுத்த பாடலுக்கு முதலாக வருமாறு பாடல்களைப் பாடும் முறை ஆகும்.

சிவன் எலும்பு மாலை அணிந்து, கபாலத்தைக் (மண்டை ஓடு) கையில் ஏந்தி, இடுகாட்டில் இரவில் ஒளிப்பிழம்பாக ஆடும் காட்சியை அம்மையார் சிறப்பாக வர்ணிக்கிறார்.

பிறர்அறிய லாகாப் பெருமையரும் தாமே
பிறர்அறியும் பேருணர்வும் தாமே - பிறருடைய
என்பே அணிந்துஇரவில் தீயாடும் எம்மானோர்
வன்பேயும் தாமும் மகிழ்ந்து

(அற்புதத் திருவந்தாதி - 30)

(என்பு = எலும்பு)

என்று சிவன் தீ வடிவில் ஆடுவதைக் கூறுகிறார். அழல் (நெருப்பு) ஏந்தி ஆடுவதால் அங்கை (சிவனது உள்ளங்கை) சிவந்து போனதா? அல்லது சிவன் கையில் பிடித்து ஆடுவதால் தீ சிவந்த நிறத்தைப் பெற்றதா? என்று அம்மை வியக்கும் அழகைப் பாருங்கள்.

அழலாட அங்கை சிவந்ததோ அங்கை
அழகால் அழல்சிவந்த வாறோ - கழலாடப்
பேயோடு கானிற் பிறங்க அனல்ஏந்தித்
தீயாடு வாய் இதனைச் செப்பு

(அற்புதத் திருவந்தாதி - 98)

அறிபவனும், அறிவிப்பவனும், அறிவாய் இருந்து அறிகின்றவனும், அறிகின்ற மெய்ப்பொருளும் அவனே. அவனே ஐம்பூதங்களாகவும் விளங்குகின்றான் என்கின்றார்.

அறிவானும் தானே அறிவிப்பான் தானே
அறிவாய் அறிகின்றான் தானே - அறிகின்ற
மெய்ப்பொருளும் தானே விரிசுடர்பார் ஆகாயம்
அப்பொருளும் தானே அவன்

(அற்புதத் திருவந்தாதி 20)

சிவபெருமான், யார் எந்தக் கோலத்தில், எந்த உருவில் வணங்கினாலும், எத்தகைய தவத்தில் ஈடுபட்டாலும், அவர்அவர்க்கும் அவரவர் விரும்பிய கோலத்தில் வந்து அருள் புரிவார் என்கின்றார்.

எக்கோலத்து எவ்வுருவாய் எத்தவங்கள் செய்வார்க்கும்
அக்கோலத்து அவ்வுருவே ஆம்
(33)

1.3.2 திரு இரட்டை மணிமாலை

இருபது பாடல்களைக் கொண்ட இந்நூலும் அந்தாதித் தொடையில் அமைந்ததே. திரு என்னும் சிறப்பு அடைமொழி கொண்டது. வெண்பாவும், கட்டளைக் கலித்துறையுமாய் இந்நூல் அமைந்துள்ளது. இருவித மணிகளால் கோத்த மாலை கழுத்திற்கு அழகு தரும். அதுபோல இருவிதப் பாவகையால் தொடுக்கப்பெற்ற இந்நூல் சிவபெருமானின் அழகினைச் சொற்கோலங்களாக வெளிப்படுத்துகிறது. இரட்டைமணிமாலை என்னும் இலக்கிய வகைக்கு முன்னோடியாக அம்மையாரின் இப்பிரபந்தம் கருதப்படுகிறது. கட்டளைக் கலித்துறை யாப்பை முதன்முதல் கையாண்டவரும் அம்மையாராகவே கருதப்படுகிறார்.

தொல்லை வினைவந்து சூழாமுன் தாழாமே
ஒல்லை வணங்கி உமையென்னும் - மெல்லியல்ஓர்
கூற்றானைக் கூற்றுருவம் காய்ந்தானை வாய்ந்திலங்கு
நீற்றானை நெஞ்சே நினை

(திருவிரட்டை மணிமாலை - 12)

(தொல்லை = பழைய; தாழாமே = காலம் தாழ்த்தாமல் ஒல்லை= விரைவாக; கூற்று = எமன்)

பழைய வினை வந்து சூழ்ந்து கொள்வதற்கு முன்பாகவே உமைஒரு பாகத்தினனாய்த் திகழும் சிவனை நெஞ்சமே நீ நினைப்பாயாக என்று நெஞ்சுக்கு அறிவுரை கூறுகிறார்.

1.3.3 திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் I & II

பத்துப்பாடல்களின் தொகுதிக்குப் பதிகம் என்னும் பெயர் வழங்குகின்றது. அம்மையார் பாடிய பதிகங்களுக்கே முதலில் இப்பெயர் ஏற்பட்டது என்பர். இவை பழைமையானவை என்பதனைக் குறிக்க மூத்த என்ற அடைமொழி சேர்க்கப்பட்டது.

திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் ஒவ்வொன்றிலும் 11 பாடல்கள் உள்ளன. இறுதிச் செய்யுள் திருக்கடைக்காப்பு எனப்படும். அது அப்பதிகத்தைப் பாடுவார் பெறும் நன்மையைக் குறிக்கும். இப்பதிகங்களுள் அம்மையார் தம்மைக் காரைக்கால் பேய் என்று குறிப்பிடுகிறார்.

முதற்பதிகம் நைவளம் என்னும் பண்ணிலும் (இராகம்), இரண்டாம் பதிகம் இந்தளம் என்னும் பண்ணிலும் அமைக்கப்பட்டுள்ளன. இசையோடு இறைவனைப் பாடும் மரபை முதலில் தோற்றிய பெருமை அம்மையார்க்கு உரியது. எனவே தமிழிசையின் தாய் என்று இவரைப் போற்றுவது பொருந்தும்.

சிவபெருமான் சுடுகாட்டையே ஆடும் அரங்கமாகக் கொண்டு ஆடும் திருக்கூத்தினைக் கற்பனை நயம் தோன்ற அம்மையார் பாடியுள்ளார். சிவபெருமான் ஆடும்பொழுது நீண்ட அவர் திருச்சடை எட்டுத்திசையும் வீசுகிறது. அவர் ஊழின் வலியால் இறந்த உயிர்கள் உள்ளம் குளிரவும், அமைதி அடையவும் திருக்கூத்து நிகழ்த்துகின்றார்.

ஈமம் இடு சுடு காட்டகத்தே
ஆகம் குளிர்ந்து அனலாடும்
எங்கள் அப்பன்

(மூத்ததிருப்பதிகம் - 3)

(ஈமம் = விறகு ; ஆகம் = உடம்பு)

என்கிறார் அம்மையார்.

வடதிருவாலங்காடு எனும் ஊர் தொண்டை மண்டலத்தில் இன்றைய சென்னை மாநகரின் அருகில் உள்ளது. அவ்வூரில் சிவன் உலகு எங்கும் நிலைபெற்று ஆடுவது பற்றிப் பாடப்பட்டுள்ளது.

இப்பதிகங்களின் இறுதிப் பாடல்களிலும் அற்புதத் திருவந்தாதியின் கடைசிப் பாட்டிலும் காரைக்காலம்மையார் தம்மைக் காரைக்கால் பேய் என்று சொல்லிக் கொள்கிறார். “மற்றொருகண் நெற்றிமேல் வைத்தான்தன் பேயாய நற்கணத்தில் ஒன்றாய நாம்” (அற்புதத்திருவந்தாதி , 86)

திருவாலங்காட்டில் தலையால் நடந்து சென்று சிவனை அம்மையார் வழிபட்டார். அதைக் கேட்ட திருஞான சம்பந்தர் திருவாலங்காட்டில் காலால் மிதித்து நடக்க அஞ்சி ஊருக்கு வெளியிலேயே தங்கினார் என்று சேக்கிழார் கூறுகிறார். கி.பி. ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் திருஞானசம்பந்தர். அவருக்கு முன் வாழ்ந்தவர் காரைக்கால் அம்மையார் எனலாம். ஆகவே இவர் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டின் இறுதி அல்லது ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்திருக்க வேண்டும் என்பர்.

வைணவ சமயத்து முதலாழ்வார் மூவரின் இலக்கியங்கள் குறித்து முந்தைய பாடத்தில் ( A0 4116) படித்ததை நினைவிற் கொள்ளுங்கள்.

தன் மதிப்பீடு : வினாக்கள் - I
1. சமய இலக்கியங்கள் என்றால் என்ன என்பதை விளக்குக. [விடை]
2.

சமணர்கள் எழுதியதாக இப்பாடப்பகுதியில் சொல்லப்படும் மூன்று நூல்களின் பெயர்களை எழுதுக.

[விடை]
3.

காரைக்காலம்மையார் பாடிய நூல்களின் பெயர்களையும் அவற்றின் விளக்கத்தையும் தருக.

[விடை]