1.4 பௌத்த சமய இலக்கியம்


கௌதம புத்தர் புத்த மதத்தைத் தோற்றுவித்தவர். கி.மு. ஆறாம் நூற்றாண்டில் வடஇந்தியாவில் தோற்றுவிக்கப்பட்ட இம்மதம் அசோக மன்னரது காலத்தில் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் தமிழகத்தில் பரவிச் செல்வாக்குப் பெற்றது. காஞ்சிபுரம், உறையூர், வஞ்சி, மதுரை முதலிய நகரங்கள் புத்தப் பெருநிலையங்களாக விளங்கின. உயிர்களிடம் அன்பு காட்டுதல், குலவேறுபாடு பாராட்டாமை, அறநெறிவழி நிற்றல் போன்ற இதன் கொள்கைகள் தமிழரை ஈர்த்தன. பலர் பௌத்தர் ஆயினர். சிறப்பிடம் பெற்றனர். தமிழ் இலக்கண இலக்கியத் துறைகளில் ஈடுபட்டனர். கற்றுத் தேர்ந்தனர். பல தமிழ்ப் படைப்புகளைத் தந்தனர். அவை முழுதுமாக இப்போது நமக்குக் கிடைக்கவில்லை. அழிந்தவைபோக எஞ்சியவை சிலவே.

1.4.1 குண்டலகேசி

இது தமிழின் ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றாகக் கருதப்படுவது. இதனை இயற்றியவர் நாதகுத்தனார் என்று நீலகேசி உரை கூறுகிறது. இது தவறு என்றும், நாகசேனர் என்பதே அவரது பெயர் என்றும் ஆராய்ச்சிப்புலவர் மயிலை. சீனி வேங்கடசாமி கூறுகிறார். இக்காப்பியம் புத்தர் காலத்தில் வடநாட்டில் வாழ்ந்த சமயத்துறவி ஒருத்தியின் வரலாற்றைக் கூறுவது. இது காப்பியமாகவும், தருக்கநூலாகவும் இருந்தது. இந்நூல் முழுதும் கிடைக்கவில்லை. புறத்திரட்டு முதலிய நூல்களிலிருந்து 224  பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன. அவற்றின் வழி அறியவரும் இதன் கதை வருமாறு:

இராசகிருக நாட்டு மன்னனின் மகள் பத்திரை, இவள், காளன் என்னும் திருடனைக் காதலித்து மணந்து கொண்டாள். ஒருநாள் ஊடல் காரணமாக அவனைக் கள்வன் என்று கூறிவிட்டாள். அதனால் அவன் அவளைக் கொல்ல நினைத்து மலையின் உச்சிக்கு அழைத்துச் செல்கிறான். அவன் கொல்லப் போவதை அறிந்த அவள் அவனையே மலை உச்சியிலிருந்து தள்ளிக் கொன்று விடுகிறாள். பின்னர் உலக வாழ்வை வெறுத்துச் சமணத் துறவி ஆகிறாள். பலருடன் சமயவாதம் செய்கிறாள். இறுதியில் சமயவாதம் செய்ததில் சாரிபுத்தனிடம் தோற்றுப் பௌத்த சமயம் சார்கிறாள். குண்டலகேசி என்றால் சுருள் சுருளான முடியை உடையவள் என்பது பொருள்.

இந்நூலில் உலக வாழ்வு நிலையற்றது என்று கூறும் கருத்து வளமிக்க பாடல்கள் உள்ளன.

மனிதனின் வாழ்வு தோற்றம் முதல் இறந்து இறந்தே கழிகின்றது.கருவாக இருந்து குழந்தையாகப் பிறந்தபோது கருவுக்கு ஓர் இறப்பு; பாலகனாகும்போது குழந்தைப் பருவத்திற்கு இறப்பு; இளைஞனாகும் போது பால பருவத்துக்கு இறப்பு ; இப்படி நாளுக்கு நாள்செத்து நலிவடையும் நாம் முதலில் நமக்காக அழாமல் பிறருக்காக அழுவதன் பொருளற்ற நிலையைக் கேள்வி கேட்கும் பாடல் இதோ,

பாளையாம் தன்மை செத்தும்
பாலனாம் தன்மை செத்தும்
காளையாம் தன்மை செத்தும்
காமுறும் இளமை செத்தும்
மீளுமிவ் வியல்பும் இன்னே
மேல்வரும் மூப்பும் ஆகி
நாளும்நாள் சாகின் றோமால்
நமக்கு நாம் அழாதது என்னோ !

(குண்டலகேசி - 9)