2.0 பாட முன்னுரை
கி.பி. 600 முதல் 900 வரையிலான காலம் பல்லவர் காலம் எனப்படுகிறது. தமிழகத்தின் வடக்கில் பல்லவர்கள் ஆண்டனர். தெற்கில் பாண்டியர்கள் ஆண்டனர். இவ்விரு பேரரசினரின் கீழ்ச் சிற்றரசர்கள் இருந்தனர். கங்கர்கள், முத்தரையர்கள், சோழர்கள் முதலியவர்கள் பல்லவர்களுக்குட்பட்ட சிற்றரசர்களில் சிலர். அதியமான், ஆய் மன்னர், மலை நாட்டரசர் போன்றோர் பாண்டியர்களுக்கு உட்பட்டிருந்தனர். இக்காலத்தைய தமிழகம் மூவகைக் கல்வி நிலையங்களைக் கண்டது. அவை என்பன. இவற்றில் சமய உண்மைகள், சமயக் கோட்பாடுகள், தத்துவம் முதலியன கற்பிக்கப்பட்டன. சமஸ்கிருத மொழிக்குப் பல்லவ மன்னர்கள் ஆதரவளித்தனர். அவ்வகையில் சமஸ்கிருதம், தமிழ் எனும் இருமொழி மக்கள் நாவில் புழங்கியது. சமஸ்கிருதம் - தமிழ் கலந்த மணிப்பிரவாளம் எனும் கலப்பு நடையும் இருந்தது. இக்காலத்துத் தோன்றிய இலக்கியங்கள் சமயச் சார்பினவாகவும், அறம் உரைப்பனவாகவும், மன்னரது வெற்றிச் சிறப்பை விதந்தோதுவனவாகவும் திகழ்கின்றன. பல்லவர் ஆட்சி வலுப்பெற்றுக்
கொண்டிருந்த இந்நூற்றாண்டில்
சமஸ்கிருதம் எனும் வடமொழி
ஆதிக்கமும், வைதிகக்
கோட்பாடுகளும் புகுந்தன. இந்து சமயத்தின் இரு கண்களாகிய
சைவமும், வைணவமும் தழைக்கத் தொடங்கின.
கோயில்கள்
எழுந்தன. பக்தி தவழும் பதிகங்கள், பாசுரங்கள் உருவாயின. பக்தி
இயக்கமும், பக்தி இலக்கியமும் தமிழகம் பெற்ற அருங்கொடையாகும். கி.பி.650 முதல் 860 வரை தஞ்சை, திருச்சி மாவட்டங்களை முத்தரையர்கள் எனும் சிற்றரசு வம்சத்தவர்கள் ஆட்சி செய்தனர். தமிழும் வடமொழியும் கலந்து எழுதும் மணிபிரவாளம் எனும் மொழி நிலவியதும் இக்கால கட்டமே. இவை பற்றிய செய்திகள் பாடத்தில் தொகுத்து கூறப்பட்டுள்ளன. |