2.5 வைணவ இலக்கியங்கள்
திருமால் பக்தியில் ஆழ்பவர் ஆழ்வார்கள். கி.பி.ஆறாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம்
நூற்றாண்டு வரை பன்னிரு ஆழ்வார்கள் வாழ்ந்தனர். திருமாலின்பால் நெஞ்சைக்
கவரும் தமிழ்ப் பாக்களை இசையுடன் பாடித் தமிழகத்தில் பக்தி வெள்ளம் பெருக்கெடுத்து
ஓடச் செய்தவர்கள் ஆழ்வார்கள் ஆவர். பாகவத புராணம் திருமாலின் அவதாரங்களைக்
கூறித் திருமால் அடியார்கள் திராவிட நாட்டில், தாமிரபரணிக் கரையிலும், வைகைக்
கரையிலும், காவிரிக் கரையிலும், பாலாற்றின் கரையிலும், பேரியாற்றங்களையிலும்
தோன்றி முக்தியடைவர் (Bhagavathapurana, Book IX, Chapter-5) என்கிறது. தாமிரபரணி
ஆற்றங்கரையில் நம்மாழ்வாரும், மதுரகவியாழ்வாரும்
தோன்றினர். வையை ஆற்றங்கரையில் பெரியாழ்வாரும், அவரது புதல்வி
ஆண்டாளும் தோன்றினர். பாலாற்றங்கரையில் பொய்கை
ஆழ்வாரும், பூதத்தாழ்வாரும்,
பேயாழ்வாரும், திருமழிசையாழ்வாரும் தோன்றினர்.
காவிரிக்கரையில் தொண்டரடிப் பொடியாழ்வாரும்,
திருப்பாணாழ்வாரும், திருமங்கை ஆழ்வாரும் தோன்றினர்.
பேரியாற்றங்கரையில் திருவஞ்சைக் களத்தில் குலசேகராழ்வார்
தோன்றினார் என்பர்.
"மலையிலே
போய் நின்றும், நீரின் நடுவே மூழ்கியும், நெருப்புகளின் நடுவே நின்றும் தவம்
செய்யத் தேவை இல்லை. கடவுளை உண்மையான அன்புடன் மலர் தூவி வழிபடுதல் போதும்’
என்பதே வைணவ இலக்கியத்தின் அடிநாதக் கருத்து ஆகும். திருமாலை அன்புவழியில்
அணுகச் செய்தவர்கள் ஆழ்வார்கள். இறைவனிடம் ஈடுபாடு உடையவர்கள். மக்களிடையே
வாழ்ந்து ஒழுக்கத்தை வளர்த்தவர்கள். பாசுரங்களாலும், வழிபாட்டாலும் பத்தியைப்
பெருக்கினர். வைணவத்தை வளர்த்தனர். வைணவம் பல்லவ நாட்டில் இருந்து சோழ நாட்டில்
பரவி, பாண்டிய நாட்டிலும் மலர்ந்து மணம் பரப்பியது. இனி, இக்காலக்கட்டத்தில்
தோன்றிய வைணவ இலக்கியங்களைக் காண்போம்.
2.5.1 நான்முகன் திருவந்தாதி
ஆழ்வார்களின்
பக்திப் பாசுரங்கள் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் எனும்
பெயரில் தொகுக்கப்பட்டுள்ளன. நான்முகன் திருவந்தாதி இத்தொகுப்பில்
இயற்பா என்னும் பகுதியில் சேர்க்கப்பட்டுள்ளது. இதில் 96 பாடல்கள் உள்ளன.
திருமழிசை ஆழ்வார் பாடியது. திருமழிசை ஆழ்வார் பாடல்களுக்கும், திருநாவுக்கரசர்
பாடல்களுக்கும் ஒற்றுமை உள்ளது. திருமழிசை ஆழ்வார் தாம் சமணத்தைக் கற்றதாகக்
கூறுகிறார். இவர் வைணவராதற்கு முன்பு சமணராக இருந்ததாகக் கதை உண்டு. இவருடைய
பாடல்களில் நிலையாமைக் கருத்து சிறப்பிடம் பெறுகிறது. இவர் தாம் பௌத்தத்தையும்
கற்றதாகக் கூறியுள்ளார். பௌத்தமும் நிலையாமையைச் சிறப்பாக எடுத்தியம்பும்
சமயமே. இவரை, ‘வீரவைணவர்’ என்பர். பிற சமயங்களிடம் அதிக காழ்ப்புக் கொண்டவராகவும்
உள்ளார். சமணம், பௌத்தம், சைவம் ஆகியன இவரால் இழித்துக் கூறப்பட்டுள்ளன.
2.5.2 திருச்சந்த விருத்தம்
திருச்சந்த
விருத்தம் திவ்விய பிரபந்தத்தில் முதலாவது ஆயிரத்தில் உள்ளது. இதில்
120 பாக்கள் உள்ளன. ‘கண்ணனே என்றிருப்பேன்’ என்று கூறும் இவர் குணபரனைக்
கூறுகிறார். அது மகேந்திரவர்ம பல்லவனது பெயர். எனவே, ‘திருச்சந்த விருத்தம்’
பாடிய திருமழிசை ஆழ்வார் மகேந்திரவர்ம பல்லவன் காலத்தவர் என்பர். ஆழ்வார்
சென்னையை அடுத்த திருமழிசையில் தோன்றியவர். சந்தப்பா பாடுவதில் வல்லவர்.
‘விதையாக நற்றமிழை வித்தி என் உள்ளத்தை நீ விளைத்தாய்’ எனத் தமிழ்ப் பற்றைச்
சமய அன்பில் வெளிப்படுத்தியவர். காஞ்சி மன்னன் துன்புறுத்த அதனால் இவரது
சீடன் கணிகண்ணன் காஞ்சியை விட்டுச் செல்ல, ஆழ்வாரும் திருமாலும் கணிகண்ணனின்
பின் சென்றனர் என்ற வரலாறும் உண்டு.
‘மாயோன் மேய காடுறை
உலகம்’ என்று தொல்காப்பியம்
திருமாலைக் கூறுகிறது. சிலப்பதிகாரத்தில் திருமால் வழிபாடு பற்றிய
குறிப்புகள் உள்ளன. எனினும் பல்லவர் காலத்தில் வைணவ சமயம்
பௌத்த சமயத்துடனும், சமண சமயத்துடனும் போராட வேண்டிய
நிலை இருந்ததைத் திருமழிசை ஆழ்வார்,
கணிகண்ணன்
பாடல்களும் தொண்டரடிப் பொடியாழ்வார் பாசுரங்களும் உரைக்கும்.
பல்லவ அரசருள், விஷ்ணுகோபன், இரண்டாம்
சிம்மவர்மன்,
விஷ்ணுகோப வர்மன் முதலியோர் தம்மைப் ‘பரம பாகவதர்’ என்றே
கூறிக் கொள்கின்றனர். சிம்மவிஷ்ணு, நரசிம்மவர்மன், இரண்டாம்
நந்திவர்மன் முதலியோர் சிறந்த வைணவப் பற்று உடையவர்கள்.
அவர்களால்தான் பல்லவ நாட்டில் பெருமாள்
கோயில்கள்
தோன்றின. குகைக் கோயில்கள் குடையப்பட்டன.
2.5.3 திருமாலை, திருப்பள்ளி எழுச்சி
முதலாவது
ஆயிரத்தில், திருமாலை உள்ளது. இதில் 45 பாடல்கள் உள்ளன.
இதைப் பாடியவர் தொண்டரடிப் பொடியாழ்வார் ஆவார். சோழ நாட்டைச் சேர்ந்தவர்.
‘விப்ர நாராயணர்’ என்பது இவரது இயற்பெயர். திருவரங்கத்தே கோயில் கொண்டுள்ள
திருவரங்கனைத் துயில் எழுப்புவது போல் பாடுவது, திருப்பள்ளி எழுச்சி
ஆகும். இதைப் பாடியவரும் தொண்டரடிப் பொடியாழ்வாரே ஆவார். திருப்பள்ளி
எழுச்சியில் பத்துப் பாசுரங்கள் உள்ளன. இந்நூலும் நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில்
‘முதலாவது ஆயிரம்’ பகுதியில் உள்ளது. தொண்டரடிப் பொடியாழ்வார் சமண - பௌத்தர்களை
அறவே வெறுத்தவர்.
'இரண்டாம் நந்திவர்மன்
தரும சாத்திரமுறைப்படி நடவாத
மக்களை அழித்து, நிலத்தைக் காப்பாற்றி,
வரியிலியாகப்
பிராமணர்க்கு அளித்தான்’ என்று உதயேந்திரப் பட்டயத்தில்
உள்ளது. இக்குறிப்பு, ‘வைணவனான பல்லவமல்லன் தன் முன்னோர்
சமணர்க்கு விட்டிருந்த நிலத்தைக்
கவர்ந்து வைணவர்க்கு
உரியதாக்கினான்’ என்ற செய்தியைத் தருவதாக வரலாற்றாசிரியர்
கூறுவர்.
திருமால் அடியவரது
திருவடி தூசி என்று தன்னைக் கருதிக் கொண்ட தொண்டரடிப் பொடியாழ்வாரது பாடல்களில்
திருமாலின் மீது கொண்ட பக்தி வெளிப்படுகிறது. திருமாலின் மேனி அழகில் மனத்தைப்
பறிகொடுத்த தன்மை புலப்படுகிறது.
பச்சை மாமலைபோல் மேனிப் பவளவாய்க் கமலச்செங்கண்
அச்சுதா அமரரேறே ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய் இந்திரலோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே
(திவ்வியப் பிரபந்தம், 8)
என்று இறைவனைத் தரிசித்து வாழும் வாழ்வே
தேவை என்கிறார்.
திருவுருவ வழிபாடு செல்வாக்குப் பெற்ற நிலையை
இப்பாடல்
புலப்படுத்துவதாகக் கொள்ளலாம்.
2.5.4 அமலனாதிபிரான்
நாலாயிரத்
திவ்வியப் பிரபந்தத்தில் முதலாவது ஆயிரத்தில் இடம் பெற்றுள்ள பாசுரம் இது.
‘அமலன் ஆதிபிரான்’ என்று தொடங்கும் இப்பாசுரத்தில் உள்ள பத்துப் பாடல்களும்
திருமாலின் மேனி அழகை அப்படியே ஓவியமாகச் சித்தரிக்கின்றன. இப்பாசுரத்தைப்
பாடியவர் திருப்பாணாழ்வார். “மேகம் போன்ற கருமையான நிறத்தினன். கோவலனாய்
மாடு மேய்த்தவன். வெண்ணெய் உண்ட மாயன். என் உள்ளம் கவர்ந்தவன், தேவர்களின்
தலைவன், அணிகள் அணிந்த அரங்கன், என் அமுது, அவனைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக்
காணாது” என்று உறுதியாகக் கூறுகிறார் திருப்பாணாழ்வார்.
உறையூரில் பிறந்தவர்
திருப்பாணாழ்வார். பாணர் மரபிலே
பிறந்தவர் என்பர். ஆலயத்துள் வரமுடியாத எளிய
குலத்தில்
பிறந்தவர். எனினும் இவரைத் தோளில் இருத்தித் தன்முன் கொண்டு
வரும்படி இறைவன் உலோக சாரங்க முனிவருக்குக் கட்டளை
இடுகிறான். அந்தணக் குருக்களாகிய அவர் அழைத்து
வர,
ஆலயத்தில் இறைவனோடு இரண்டறக் கலந்துவிட்டார் என்பர்.
திருமாலின்
பாதம், சிவந்த ஆடை, வயிறு, மார்பு, தோள், கழுத்து, வாய், கண்கள், நீலமேனி
என்று ஒவ்வோர் பகுதியாக அடிமுதல் முடிவரை ஆழ்வார் அனுபவித்துப் பாடிய பாடல்கள்,
‘பாண பெருமாள் அருள் செய்த பாடல் பத்தும் பழமறையின் பொருள்' என்று வேதத்தின்
சாரமாகக் கருதப்படுகின்றன.
|