இலக்கியம் தரம் உள்ளதாக அமைய இலக்கண நூல்கள் பின்புலமாக உள்ளன. அந்த இலக்கண நூல்களுக்கு எழுதப்படும் உரைகள் சிறந்த விளக்கம் தருகின்றன. எழுத்து, சொல், பொருள் மூன்றையும் தொல்காப்பியம் விளக்குகிறது. இறையனார் களவியலில் யாப்பதிகாரம் என்ற ஒரு நூல் குறிப்பிடப்படுகிறது. அப்படி ஓர் இலக்கணப்பகுதி அதற்கு முந்திய காலத்தைச் சேர்ந்ததாகக் கிடைக்கவில்லை. இந்த நூற்றாண்டு வரையில் இருந்து இறந்து போன எண்ணற்ற நூல்களில் ஐந்திலக்கணமும் இருந்ததா என்று அறிய வழியில்லை. ஆனால் யாப்பிலக்கண நூல்கள் பல இருந்தன என்று யாப்பருங்கல விருத்தியுரையால் அறியலாம். அணி இலக்கணநூல் ஒன்றும் (அணியியல்) இருந்தது என்று சிலப்பதிகார அடியார்க்கு நல்லார் உரையால் அறியலாம் என்று போராசியர் அருணாசலம் கூறுவார். இருந்த இலக்கண நூல்களுக்கு உரைநூல்கள் இயற்றப்பட்டுள்ளன. இலக்கணத் துறையில் குறிக்கத்தக்கது இறையனார் களவியல் உரை ஆகும். இந்நூலும் உரையும் ஒருகால் ஏழு, எட்டு நூற்றாண்டுகளில் செய்யப்பட்டு இருக்கலாம். ஆனால் பல தலைமுறைகள் இவ்வுரை வாய்மொழியாகவே கற்கப்பட்டு வந்தது. இக்காலக்கட்டத்தில் தான் முசிறி ஆசிரியர் நீலகண்டனார் என்பவரால் ஏட்டில் எழுதி வைக்கப்பட்டது. தோன்றிய காலம் தொடங்கி இவ்வுரை தனது நடையின் சிறப்பால் தமிழ் அறிஞர்களது மனங்களைப் பெரிதும் கவர்ந்திருக்கிறது. எளிமையாகவும், வருணனை நிறைந்ததாகவும், பெரும்பகுதி செய்யுள் ஓசை பெற்றதாகவும் இவ்வுரை உள்ளது. இவ்வுரையை நக்கீரர் இயற்றினார் என்பர். உரை செய்த நக்கீரர், அதை எழுதிய நீலகண்டனார் ஆகிய இருவரும் சைவர்கள் என்பது குறிக்கத்தக்கது. உரைநடையாக எழுதப்பட்ட போதிலும், செய்யுள் போலவே சீர்களின் அமைப்பும், எதுகை, மோனை அடுக்கும், சொற்களின் செறிவும், அடைகளும் கொண்டு புலவர்கள் கையாண்ட செறிவான உரைநடைக்குச் சான்றாக களவியல் உரை உள்ளது. ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் புலவர்கள் விரும்பி எழுதிய தமிழ்நடையை அறிய விரும்புபவர்களுக்கு அந்த ஒரு நூலே சான்றாக உள்ளது. அவ்வகையில் நமக்குக் கிடைத்த உரைநூலில் இவ்வுரையே பழமையானது. ஏறத்தாழ இரண்டு நூற்றாண்டுகள் வாய்மொழியாக வழங்கப்பட்டுப் பின்னர் எழுதப்பட்டது என்பர். உரைச் சிறப்பிற்கு ஒரு சான்று இதோ : ‘பரத்தையில் பிரிவு' என்று தலைவன் தலைவியை விட்டுப் பிரிந்து வேறொரு பெண்ணை-பரத்தையை- நாடிப் பிரிந்து செல்லும் பிரிவு பற்றிக் கூறுகையில் உரைகாரர் தலைவனுடைய அன்றாடப் பணிகளை அடுக்கிக் கூறுவது போல எழுதுகிறார். இவன் கண்டாரை எல்லாம் காமுறுவானோ
எனின்,
உரையில் பல உவமைகள் நடைச் சிறப்புடன் அமைந்துள்ளன. பல வடசொற்கள் இவ்வுரையினுள் காணப்படுகின்றன. இருபதுக்கும் மேற்பட்ட தொல்காப்பியச் சூத்திரங்கள், குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை, திருக்குறள், சிலப்பதிகாரம் ஆகியவற்றிலிருந்து மேற்கோள்கள் உரையில் காட்டப்பட்டுள்ளன. ஆத்திரையன் பேராசிரியன் என்பவர் ஓர் உரையாசிரியர். இவரைப் பற்றி இரு குறிப்புகள் கிடைத்துள்ளன. தொல்காப்பியத்துக்குப் பொதுப்பாயிரம் ஒன்றும், சிறப்புப்பாயிரம் ஒன்றுமாக இரண்டு பாயிரங்கள் உள்ளன. (பாயிரம் - நூலுக்குத் தரப்படும் அணிந்துரை போன்றது. இது பொதுப்பாயிரம் என்றும், சிறப்புப் பாயிரம் என்றும் இருவகைப்படும்.) ‘வலம்புரி முத்தின் குலம்புரி பிறப்பும்' என்பது பொதுப்பாயிரம். ‘வடவேங்கடம் தென்குமரி' என்பது சிறப்புப்பாயிரம். தொல்காப்பிய மரபியல் (நூற்பா 98) உரையில், பேராசிரியர், வடவேங்கடம் தென்குமரி என்னும் சிறப்புப்பாயிரம்
என்று எழுதுகிறார். இப்பொதுப்பாயிரம் 33 அடிகளைக் கொண்ட ஆசிரியப்பாவால் ஆனது. சிவஞான சுவாமிகள் (18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்) சங்கர நமசிவாயர் உரையைத் திருத்திய இடத்துச் சிறப்புப் பாயிரத்தை அடுத்து அதே பொதுப்பாயிரத்தையும், அதன் ஆசிரியர் பெயரையும் தந்துள்ளார். இவ்வாறு இரு குறிப்புகள் கிடைத்துள்ளன. பொதுப்பாயிரம் உரையுடன் 1923 இல் தி.வை.சதாசிவப் பண்டாரத்தாரால் அச்சிடப்பட்டது. பொதுப்பாயிரம் செய்தாரே உரையும் செய்திருக்கிறார் என்ற கருத்தை அவர் குறிப்பிட்டுள்ளார். இது பொருந்துவதே ஆகும். இப்பாயிரம் இளம்பூரணருக்கு முன்னரே தோன்றியது ஆகலாம். முதல் சில உரைகளுள் ஒன்று என்று தெரிவதாகவும் கூறுவார், பேராசிரியர் அருணாசலம் அவர்கள். |