6.0 பாட முன்னுரை இலக்கியத்தின் தோற்றத்திற்கும், பாடுபொருள் மாற்றத்திற்கும், சமூக நிலை, பொருளாதார நிலை, அரசியல் நிலை ஆகியவை அடிப்படையாக அமைகின்றன. பல்லவர் காலத்து அயலவர் ஆதிக்கம் தேய்ந்து, சோழர்கள் மீண்டும் தலைதூக்கிய இந்த நூற்றாண்டில் சோழ அரசர்கள் சைவ சமயக் காவலர்களாக இருந்தமையால், சைவ இலக்கியங்கள் மிகுதியாக வெளிவந்தன. ஆழ்வார்தம் பாசுரத் துதிகளாக வைணவத் தனியன்களும், சமண, பௌத்தம் முற்றிலும் ஒடுக்கப்படாததால் அச்சமயத்து ஆக்கங்களும், வடமொழியிலிருந்தும் தமிழிலிருந்தும் இலக்கணக் கருவி நூல்களும், மன்னர் புகழ்பாடும் மெய்க்கீர்த்திகளும் எழுந்தன. |