6.2
சைவ இலக்கியம்
இந்த நூற்றாண்டில் ஐந்து
சைவப் பெரியோர் வாழ்ந்து
நூல்களைச் செய்துள்ளனர். நக்கீர தேவ நாயனார், கபில தேவர்,
பரண தேவர், கல்லாட தேவர், பட்டினத்துப்
பிள்ளையார்
ஆகியோர் இக்காலத்தவர் ஆவர்.
பல்லவர் காலம் வரை
தமிழகத்தில் விநாயகர் வழிபாடு
நடைபெற வில்லை. நரசிம்மவர்ம பல்லவனின் வாதாபி வெற்றிக்குப்
பின் வெற்றிச் சின்னமாக வாதாபி
கணபதி சிலையைத்
தமிழகத்துக்குக் கொண்டு வந்தான். இராசசிம்ம பல்லவன் காலம்
வரை தமிழகத்துக் கோவில்களில் விநாயகர்
சிலைக்கு
இடமளிக்கவில்லை. சோழர் காலத்தில் தமிழகத்துக் கோயில்களில்
இடம்பெறத் தொடங்கியது. பனங்குடி, திருப்பல்லாந்துறை,
திருக்கட்டளை முதலிய ஆலயங்களில் கணபதி
சிலைக்கு
இடமளித்தனர். நவக்கிரக வழிபாடும் தமிழகத்தில் பரவியது. நாளும்
கோளும் பற்றித் தமிழர் முன்பே அறிந்திருந்தனர்.
சங்க
இலக்கியத்தில் காணும் கணியன் எனும் சொல்
வானவியல்
வல்லுநரைக் குறிக்கும். நாளும் கோளும் மக்களை வாட்டும் என்ற
நம்பிக்கை ஏழாம் நூற்றாண்டில் இருந்தது. ஆகவேதான், ‘நாளும்
கோளும் அடியார்களை நலிவுறச் செய்யமாட்டா'
என்று
திருஞானசம்பந்தர் தமது ‘வேயுறுதோளி பங்கன்'
என்னும்
பதிகத்தில் வலியுறுத்திக் கூறுகிறார். சமயஞ் சார்ந்த
நூல்கள்
தோன்றிட இவ்வழிபாடுகள் உதவின.
நம்பியாண்டார் நம்பி
சைவத் திருமுறைகளைத் தொகுத்தார்
என்பதை நீங்கள் அறிவீர்கள். பதினோராம்
திருமுறையில்
நம்பியாண்டார் நம்பியின் நூல்களும் இடம்
பெற்றிருப்பதால்,
இத்திருமுறை அவர் காலத்திலேயோ அல்லது
அவருக்குப்
பின்னரோ தொகுக்கப்பட்டிருக்க வேண்டும். நக்கீரர்,
கபிலர்,
பாணர் முதலிய சங்க காலப் புலவர்களின் பெயர்களைத் தாங்கிய
அடியார்கள் இருந்திருக்கிறார்கள். அவர்களைக்
கபிலதேவ
நாயனார், நக்கீரதேவ நாயனார் என்றே இத்திருமுறை குறிப்பிடுகிறது.
சங்க இலக்கியமாகிய திருமுருகாற்றுப்படை
இத்திருமுறையில்
இடம் பெற்றுள்ளது.
6.2.1 நக்கீரதேவ நாயனார் இயற்றிய நூல்கள்
கயிலைபாதி
காளத்திபாதி அந்தாதி
இந்நூல் ‘அந்தாதி'யாக
வரும் நூறு பாடல்களை உடையது.
திருக்கைலை மலையும், திருக்காளத்தி மலையையும் மாறி மாறித்
துதிக்கின்ற பாடல்களின் தொகுப்பாகும்.
முதல் பாடல்
கைலையையும், இரண்டாம் பாடல் காளத்தியையும் குறிப்பதாலேயே
இப்பெயர் பெற்றது.
பதினொராம் திருமுறையில்
இந்நூல் சேர்க்கப்பட்டுள்ளது.
இதில் அகத்துறைப் பாடல்கள் 25
உள்ளன. அஃறிணைப்
பொருட்களை விளித்துத் தலைவி தூது விடுவதாக உள்ள பாடல்கள்
பல. இயற்கை வர்ணனை மிகவும் குறைவு. சமயக் கருத்துகள்
சிறப்பாகச் சொல்லப்பட்டுள்ளன.
திருஎழு
கூற்றிருக்கை
பதினொராம் திருமுறையில்
உள்ளது. நக்கீரதேவர் பாடியது.
‘ஏழு கூறுகள் முறையாக அமையும்படி செய்யப்படும் சித்திரக் கவி
வகை' என்று திருஎழு கூற்றிருக்கைக்குப் பொருள். மிக முயன்று
செய்கின்ற கவி எனவே, ‘மிறைக் கவி' (சித்திரகவி)
எனவும்
அழைக்கப்படும். ஆசிரியப்பாவில் அமைவது. ஒன்று
எனும்
எண்ணுப்பெயரில் தொடங்கி, ஒவ்வொன்றாய்ப் படிப்படியாய் ஏறியும்
இறங்கியும், ஒன்று முதல் ஏழு வரையில் எண்ணுப்பெயர்கள்
அமையுமாறு பாடப்படும் செய்யுள் வகை. ஏழு எண்களும் ஏறியும்,
இறங்கியும் பாடலுள் அமைக்கப்படும் முறையை ஒரு படமாகப்
பின்வருமாறு காட்டலாம்.
1
1 2 1
1 2 3 2 1
1 2 3 4 3 2 1
1 2 3 4 5 4 3 2 1
1 2 3 4 5 6 5 4 3 2 1
1 2 3 4 5 6 7 6 5 4 3 2 1
பாடலில் எண் ஏறிவரும் தன்மைக்குச்
சான்றாக ஐந்துக்குரிய பின்வரும் பாடல் :
அந்நெறி
ஒன்று மனம்வைத்து இரண்டு நினைவிலோர்க்கு
முன்னெறி உலகம் காட்டினை ; அந்நெறி
நான்கென ஊழி தோற்றினை ; சொல்லும்
ஐந்தலை அரவசை கசைந்தனை ; நான்முகன்
மேன்முகக் கபாலம் ஏந்தினை ;
நூன்முக முப்புரி மார்பில் ;
இருவர் அங்கம் ஒருங்குடன் ஏந்திய ஒருவ...
இங்கு எண்ணுப்பெயர்
1 2 3 4 5 4 3 2 1 என வருவது
காணலாம். தமிழில் முதல் எழு கூற்றிருக்கை
இலக்கியம்
திருஞானசம்பந்தர் பாடியது. முதல் திருமுறையில் உள்ளது. இது
சீர்காழி பற்றிய பாடல் ஆகும். அடுத்துத் தோன்றியது திருமங்கை
ஆழ்வார் பாடியது. திருமால் பற்றியது. அதன்பின் நக்கீர தேவநாயனார் பாடிய இத் திருவெழுகூற்றிருக்கை சிறப்பிடம் பெற்றுத்
திகழ்கிறது.
பெருந்தேவ
பாணி
பதினொராம் திருமுறையில்
உள்ளது. நக்கீர தேவ நாயனார்
பாடியது. பாணி என்பது இசையோடு கூடிய பாட்டு.
அது
தெய்வத்தை முன்னிறுத்திப் பாடுவது. நக்கீரர் பாடிய இந்நூலில்
‘கூடல் ஆலவாய்க் குழகன்' என்று வருவதால் ‘கூடல் ஆலவாய்
அகவல்' என்றே இதன் பெயர் இருக்கலாம். ஆசிரியப்பாவில்
உள்ளது. தேவபாணி என்ற பெயர் தரப்பட்டுள்ளதே அல்லாது பிற
பொருத்தம் இல்லை என்பார் மு.அருணாச்சலம்.
கோபப்
பிரசாதம்
இறைவனது கோபமும் பிரசாதமுமாகிய
(பிரசாதம் - அருள்)
தன்மைகளை மாறிமாறிச் சொல்லுகின்ற சிறுபாடல். குற்றம் கூறிய
தன்னைக் கோபித்துவிட்டுப் பின் தனது பாடல் கேட்டு (கைலை
பாதி காளத்தி பாதி அந்தாதி) உவந்து கருணை செய்ததால்
(பிரசாதம்) இப்பெயர் பெற்றது என்பர். நக்கீர தேவ
நாயனார்
பாடியது. பதினொராம் திருமுறையில் உள்ளது. ஆசிரியப்பாவில்
அமைந்தது. 100 அடிகளைக் கொண்டது. ‘இன்னவை
பிறவும்
எங்கள் ஈசன் கோபப் பிரசாதம்' என்று பாடலே கூறுகிறது. (அடி :
41-42) திருமாலுக்கு அருளியது தொடங்கிக் கருடனைக் காய்ந்தது
வரையில் பிரசாதம், கோபம் ஒவ்வொன்றிலும் பதின்மூன்று
தன்மைகள் மாறிமாறிச் சொல்லப்பட்டுள்ளன. அப்பர்
தம்
தேவாரத்தில் பயன்படுத்திய பழமொழிகள் எடுத்தாளப்பட்டுள்ளன.
போற்றிக்
கலிவெண்பா
சிவனது வீரச்செயல்களையும்,
அருள் செயல்களையும்
முறையாகக் கூறி, போற்றி என்ற சொல்லை இறுதியாக வைத்துத்
துதிக்கின்ற பாடல்கள் ‘போற்றி' என்ற பெயரிலேயே வழங்குவது
மரபு. அப்பர் பாடிய ஒரு திருத்தாண்டகம்,
‘போற்றித்
திருத்தாண்டகம்' என்பது. மாணிக்கவாசகர் பாடிய
நான்காம்
அகவல், ‘போற்றித் திருவகவல்'. அதே போல் நக்கீரர் பாடிய நூல்,
‘போற்றிக்கலிவெண்பா' ஆகும். பதினொராம் திருமுறையில்
உள்ளது. 45 கண்ணிகளைக் கொண்டது. திருமால்
சிவனது
அடியையும், பிரமன் திருமுடியையும் காணாமை, காலனைக் காலால்
உதைத்தமை என்று சிவபெருமானின் வீரச் செயல்களும், அருள்
செயல்களும் முறையாகச் சொல்லிப் போற்றுகிறார். இறுதி வரிகளில்
கண்ணப்பருக்கு அருள் செய்த திறத்தைத் துதித்துக் காளத்தியைப்
போற்றுபவர்கள் சிவபெருமான் திருவடி நிழலைச் சேர்வர் என்று
முடிப்பதையும் காணலாம்.
திருஈங்கோய்மாலை
எழுபது
ஈங்கோய்மலை என்ற
சிவதலத்தின் புகழைப் பாடும் 70
வெண்பாக்களைக் கொண்டது. பாடல் ஒவ்வொன்றும், “இத்தகைய
பெருமை வாய்ந்த ஈங்கோய் சிவபெருமான் மலை” ஆகும் என்று
பொருள்பட அமைந்துள்ளது. பாடல்தோறும் மலை, குன்று, சிலம்பு,
வெற்பு, கடறு, பொருப்பு என்ற முடிவை உடையது. பாடல்களின்
முதல் எழுத்துகள் அகரவரிசையில் உள்ளன. தலம் மலை ஆதலின்,
மலைவாழ் குறவர் குல மக்கள் வாழ்க்கை சொல்லப்படுகிறது.
நயமான வர்ணனைகள் உள்ளன. ஒரு வேடன் வில்லில் அம்பு
பூட்டி மானைக் குறி வைக்கிறான். அப்பெண் மானின் கண் தனது
குறத்தியின் கண்ணை ஒத்து இருப்பதை உணர்ந்து
கையில்
கணையை நழுவ விட்டு, ‘மெதுவாகப் போ' என்று அம்மானை
எய்யாது அனுப்புகிறான்.
எய்யத் தொடுத்தான் குறத்திநோக்
கேற்றதெனக்
கையில் கணைகளைந்து “கன்னிமான் -
பையப்போ”
என்கின்ற பாவனைசெய் ஈங்கோயே !
தூங்கெயில்கள்
சென்றன்று வென்றான் சிலம்பு
(பாடல் - 12)
திருவலஞ்சுழி
மும்மணிக் கோவை
பதினோராம் திருமுறை. சோழநாட்டுத்
திருவலஞ்சுழி என்ற
தலத்தில் எழுந்தருளிய சிவன் மீது ஆசிரியப்பா,
வெண்பா,
கட்டளைக் கலித்துறை எனும் மூவகைப் பாக்களால் ஆக்கப்பட்ட
நூல். அந்தாதியாக உள்ளது. 30 பாடல்களைக்
கொண்டது
மும்மணிக்கோவை என்று பாட்டியல் நூல் இலக்கணம் கூறும்.
ஆனால் இந்நூலில் 15 பாடல்கள் மட்டுமே அந்தாதி அமைப்பைப்
பெற்றுள்ளன. இந்நூல் இனியது, குறைந்த
சொற்களால்
ஆக்கப்பட்டது. பொருள் செறிவு மிக்கது.
கார்
எட்டு
‘கார்' என்று முடியும் 8 வெண்பாப் பாடல்களைக்
கொண்ட சிறு
நூல். பிரிவால் வருந்தும் தலைவியிடம் தோழி,
‘கார்ப்பருவம்
வந்தது. தலைவனும் வருவான். கவலைப்படாதே' என்று கூறுவதாக
உள்ளது. தலப்பெயர் இல்லை. பொதுவாகச் சிவபெருமானைப்
போற்றிப் பாடப்பெற்றது.
திருக்கண்ணப்ப
தேவர் திருமறம்
58 வரிகளைக் கொண்ட நீண்ட
ஆசிரியப்பா. இதன் இறுதியில்
ஒரு வெண்பா உள்ளது. மறம் என்றால் வீரம் என்று பொருள்.
சிவலிங்கத்தின் கண்ணில் வழிந்த இரத்தத்தை நிறுத்தத்
தனது
கண்ணை இடந்து அப்பிய கண்ணப்பரின் அருஞ்செயல்
‘மறம்'
எனப்படுகிறது. அது அவருக்கு வீடுபேறு தந்ததால், ‘திருமறம்'
ஆயிற்று. கண்ணப்பரின் வரலாற்றைச் சொல்லும் நூல் இது. சொல்
செட்டு உடையது. வருணனை கலவாதது, உணர்ச்சி மிக்கது; சுவை
உடையது. இதற்குப் பின் இரண்டு நூற்றாண்டுகள்
கழித்துச்
சேக்கிழார் தமது பெரியபுராணத்தில் 186
விருத்தப்பாக்களில்
கண்ணப்பரது வரலாற்றைக் கூறுகிறார். அதற்கு மூலமாக அமைந்தது
இந்த நூலே ஆகும். திருவெழுகூற்றிருக்கை யாப்பருங்கல விருத்தியில் சொல்லப்பட்டுள்ளது. அந்த நூல் 11ஆம் நூற்றாண்டைச்
சேர்ந்தது. எனவே நக்கீரர் எழுதிய நூல்கள் அதற்கு முன்னரே
எழுதப்பட்டிருத்தல் வேண்டும்.
|