6.6 பௌத்த இலக்கியம்

சைவ, வைணவ சமயங்களின் எழுச்சியும், தேவார, திருவாசக, திவ்வியப் பிரபந்தப் பாடல்கள் ஆலயங்களில் கூட்டு வழிபாட்டு முறையில் துதிக்கப்படும் பாடல்களாக மாறிய நிலையும், பௌத்த, சமண சமயங்களின் செல்வாக்கை இழக்கச் செய்தன. நாகைப்பட்டினம் இக்காலத்தில் பௌத்தர்களின் இருக்கையாக நீடித்தது. தமிழகத்து மக்கள் மத்தியில் முற்றாகப் பௌத்தக் கொள்கைகள் அகற்றப்படவில்லை என்பதை இக்கால இலக்கியங்கள் புலப்படுத்துகின்றன.

6.6.1 குண்டலகேசி

குண்டலகேசி ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று. பௌத்த சமயத்தைச் சார்ந்த நூல். பௌத்தர்கள் செல்வாக்கு இந்தியாவில் பின்னாளில் குறைந்துமறைந்தது போலவே இந்த நூலும் இறந்து போயிற்று. கேசி என்றால் கேசம் ; கூந்தல் ; சுருண்ட கூந்தல் உடைய கதைத்தலைவி குண்டலகேசியின் பெயரால் இக்காப்பியம் அமைந்துள்ளது. இதன் பாடல்கள் 19 புறத்திரட்டு எனும் நூலில் எடுத்தாளப்பட்டுள்ளன.

சொற்சுவை, பொருள்சுவை நிறைந்து உலக நீதிகளை உணர்த்தும் பாடல்களாகக் கிடைத்திருக்கும் பாடல்கள் உள்ளன. சான்றுக்கு ஒரு பாடலைப் பார்க்கலாம்.

பாளையாம் தன்மை செத்தும் பாலனாம் தன்மை செத்தும்
காளையாம் தன்மை செத்தும் காமுறும் இளமை செத்தும்
மீளும் இவ்வியல்பும், இன்னே மேல்வரும் மூப்புமாகி
நாளும்நாள் சாகின்றோமால் நமக்குநாம் அழாதது என்னே.

குண்டலகேசி தமிழில் இறந்து போன நூல். நீலகேசி நூலின் இரண்டாவது சருக்கம், குண்டலகேசி வாதச் சருக்கம் என்று உள்ளது. அதில் ஏறக்குறைய 100 குண்டலகேசிப் பாடல்களது முதல் குறிப்பை எடுத்துத் தந்து மறுக்கிறது. அவற்றில் 4 பாடல்கள் மட்டுமே முழுப்பாடல்கள். நீலகேசியின் உரை (பதினைந்தாம் நூற்றாண்டையது) தமிழில் குண்டலகேசியின் வரலாற்றைச் சொல்லும் நூல் ஆகும். இதில் முழுவடிவத்துடன் 24 பாடல்கள் உள்ளன. குண்டலகேசியை ‘நாதகுத்தனார்' செய்தார் என்று நீலகேசி உரையில் குறிப்பு உள்ளது. நாத குப்தனார் என்றும் வழங்கப்படும். அவரைக் குறித்த எந்த வரலாறும் விளங்கவில்லை.

குண்டலகேசி - நீலகேசி தொடர்பு

நீலகேசியின் மொக்கலவாதச் சருக்கத்தில் (286) சமய திவாகர முனிவர் தம் உரையில் குண்டலகேசி வரலாற்றைக் கூறுகிறார். ‘குண்டலகேசி என்பவள் ஒரு வைசிய கன்னிகை. அவள் ஒருநாள் விளையாடும் போது அவ்வழியே திருடனாகிய ‘காளன்' என்பவனைக் கொலைத் தண்டனையை நிறைவேற்றும்பொருட்டுக் காவலர் அழைத்துச் செல்கின்றனர். குண்டலகேசி அவனைக் கண்டு காதல் கொள்கிறாள். அவளது தந்தை அரசனைக் கண்டு காளனை மீட்டு அவளுக்கு மணமுடித்து வைக்கிறான். ஒரு நாள், நீ கள்வன் அன்றோ என்று சொல்லிவிடுகிறாள். சினமுற்ற அவன் அவளைத் தனியே அழைத்துக் கொண்டு மலையுச்சியை அடைந்ததும், நீ இவ்வாறு சொன்னதால் யான் உன்னைக் கொல்லத் துணிந்தேன்' என்கிறான். இவளும் ‘தற்கொல்லியை முற்கொல்லிய' எனவே நான் உன்னைக் கொல்வேன் என எண்ணுகிறாள். நான் சாவதானால் உன்னை வலம் வந்து சாவேன் என்கிறாள். அதற்கு இசைந்த காளனை வலம் வந்து அவனை மலையில் இருந்து கீழே தள்ளிவிடுகிறாள். அவன் இறக்கிறான். குண்டலகேசியோ, பிற சமயங்களை எல்லாம் அறைகூவி வென்று பௌத்த தரிசனம் கொண்டு முக்தி அடைகிறாள். குண்டலகேசி கதை வடமொழியில் பல இடங்களில் சொல்லப்பட்டு உள்ளது.

நீலகேசியின் காலம் பத்தாம் நூற்றாண்டு ஆகும். குண்டலகேசியின் காலம் பற்றிச் சொல்லுவதற்குரிய எந்தக் குறிப்பும் கிடைக்கவில்லை. ஆனால் குண்டலகேசியின் பாடலை எடுத்து ஒவ்வொன்றாக நீலகேசி மறுப்பதால் இது நீலகேசிக்கு முந்தியது என்பது விளங்கும். எனவே, இரண்டு நூல்களும் ஒரே நூற்றாண்டில் சற்று முன்பின்னாகத் தோன்றின என்று கொள்ளலாம்.

6.6.2 பெரும்பொருள் விளக்கம்

எட்டாம் நூற்றாண்டில் தோன்றி இன்று இல்லாது போன சிற்றட்டகம் என்ற நூல் ஆசிரியப்பாவால் செய்யப்பட்ட சிறு அகப்பொருள் இலக்கிய நூலாகும். அதுபோலப் புறப்பொருளுக்குச் செய்யப்பட்டு இன்று கிடைக்காமல் போன நூல் பெரும்பொருள் விளக்கம் என்பது. இதன் பல பாடல்கள் தொல்காப்பியப் புறத்திணை உரையில் உள்ளன. எனினும் 15 ஆம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்ட, புறத்திரட்டு என்ற நூல் 41 பாடல்களைத் தொகுத்து ஒவ்வொரு இடத்திலும் கூறுகிறது. எல்லாப் பாடல்களும் வெண்பாப் பாடல்கள். புறத்துறைகளால் அமைந்தவை. இது பற்றியே, இது தனித்த புறப்பொருள் இலக்கியம் என்று கருத இடம் உள்ளது.