6.7 பிறவகைப் பாடல்கள் - நூல்கள்
பத்தாம் நூற்றாண்டில்
கல்வெட்டில் எழுதிய பாடல்,
மெய்க்கீர்த்திகள், சாசனப் பாடல்கள், நிகண்டு போன்ற கருவி
நூல்கள், இலக்கண நூல்கள் தோன்றின.
6.7.1 சிராமலை அந்தாதி
திருச்சிராப்பள்ளி
அந்தாதிஎன்பது நூற்பெயர்.
கல்வெட்டிலிருந்து பிரதி செய்யப்பட்டுக் கிடைத்த நூல்
இது.
திருச்சிராமலைக் குன்றின்மேல் பல்லவ மன்னன் மகேந்திரவர்மன்
அமைத்த குடைவரைக் கோயில் மதிலில் பொறிக்கப்பட்டு
கல்வெட்டுத் துறையினரால் 1888இல் படிசெய்து
1923இல்
வெளியிடப்பட்டது. அது தவிர வேறுவகையில் இந்த நூலோ, இதன்
வரலாறோ தெரியவில்லை.
இதைப் பாடியவர் வேம்பையர் கோன் நாராயணன்
ஆவார். ஊர்
வேம்பை. நூலின் இறுதி, பாயிரச் செய்யுட்கள் மற்றும்
பாட்டுள்
வரும் குறிப்புகள் கொண்டு, இவர் மணியன் என்பவரது புதல்வர்;
வணிகர்; வணிகத்தின் பொருட்டுத் தெற்கும் வடக்கும் சுற்றிவந்தவர்; சோழநாட்டினர்; பொருள் ஈட்டியும், மகப்பேறின்றி, சிராமலை
வழிபட்டு, பெருமான் அருளால் புதல்வரைப் பெற்று, அந்த அருளை
வியந்து, புலமையாலும், பக்திப் பெருக்காலும் நன்றி தெரிவித்து
இவ்வந்தாதியைப் பாடினார் என்று கருத இடம் உண்டு.
102
கட்டளைக் கலித்துறைப் பாக்களைக் கொண்டது இந்த
நூல்.
அந்தாதி அமைப்பினது நூலாசிரியர் சிவபக்தி உடையவர். சைவ
தத்துவங்களை உணர்ந்தவர். பாடல்தோறும்
இச்சிவபக்தி
புலப்படுகிறது. 40 அகத்துறைப் பாடல்கள் உள்ளன. இவை அரிய
சொல்லாட்சிகளைப் பெற்றவை. திருக்கோவையாரில் இருந்து ஒரு
அடி எடுத்தாளப்பட்டுள்ளது. திருக் கோவையாரின் காலம் 9ஆம்
நூற்றாண்டு, எனவே இந்த நூல் அதன் பின்னர்
பத்தாம்
நூற்றாண்டில் செய்யப்பட்டிருக்கலாம் என்று மு.அருணாசலம்
கூறுவார்.
6.7.2 மெய்க்கீர்த்திப் பாடல்கள்
பேரரசனது பெரும்புகழை - கீர்த்தியை,
எடுத்துக் கூறும் பாடல்
மெய்க்கீர்த்திகள். சோழர் காலத்துச்
செய்யப்பட்டன.
பன்னிருபாட்டியல் மெய்க்கீர்த்தி பற்றி இரு
நூற்பாக்களைத்
தருகிறது. சோழ மன்னர் தம் பரம்பரையில் மெய்க்கீர்த்தியோடு
சாசனங்களைப் பொறிக்கும் வழக்கம் தோன்றியது.
யாப்பருங்கல உரை, வீரசோழிய உரைகளில் சுந்தர
சோழனைப் போற்றும் நீண்ட கலிப்பாடல்
தனிப்பாடலாகத்
தரப்பட்டுள்ளது. படர்க்கைப் பன்மையில் மற்றொரு
பாடலும்
வீரசோழிய உரையில் இடம் பெற்றுள்ளது.
அது இந்த
நூற்றாண்டைச் சேர்ந்தது.
சாசனப்
பாடல்கள்
அரசர்களாலும், அரசு
அதிகாரிகளாலும் பொறிக்கப்பட்ட
சாசனங்களில் கல்வெட்டுகளில் பல சமயப் பாடல்கள் உள்ளன.
அவை தனிப்பாடல்கள்.
6.7.3 பிங்கல நிகண்டு - கருவிநூல்
நிகண்டு என்ற பிரிவில்
திவாகரத்துக்குப் பின் தோன்றியது
பிங்கலந்தை நிகண்டு. பிங்கல முனிவர் செய்தது பிங்கலந்தை
நிகண்டு ஆகும். திவாகரத்தைக்
காட்டிலும் விரிவானது.
கி.பி.பத்தாம் நூற்றாண்டில் தோன்றியது.
நிகண்டுகள் பத்துத் தொகுதிகளாக இருப்பது
வழக்கம். இறுதியில்
மேலும் இரு தொகுதிகள் உள்ளன. அவற்றை, ஒரு சொல் பலபொருள் பெயர்த்தொகுதி என்றும், பல்பொருள் கூட்டத்து ஒரு பெயர்த் தொகுதி என்றும் கூறலாம். ஒரு சொல்
பல்பொருள் என்பதுதான் இன்றைய
அகராதி. அது ஒரு சொல்லுக்குரிய பலவகைப் பொருளையும் ஒரே
இடத்தில் தொகுத்துத் தருகிறது.
பிங்கல
நிகண்டு ஆசிரியர்
பிங்கல நிகண்டு செய்தவர்
பிங்கல முனிவர் ஆவார். அவரது
வரலாறு ஒன்றும் தெரியவில்லை. தம்மைக் குறித்த எச்செய்தியும்
இவரது நூலில் இடம்பெறவில்லை. திவாகரர் தம்மை ஆதரித்த
அம்பர்ச் சேந்தனை இயல்தோறும் சிறப்பாகப் போற்றியிருக்கிறார்.
பிங்கலர் சோழநாட்டினர். சைவர். சோழ நாட்டு ஊர்கள்
பல
இந்நூலில் இடம் பெற்றுள்ளன. கணபதி பெயரை
வைத்துத்
தொடங்கும் வானவர் வகைப் பகுதியில் சிவனுக்கு 96 பெயர்கள்
சொல்லப்பட்டுள்ளதால் இவர் சைவர் என்பர்.
இந்த நூலில்
அருகனுக்குச் சொல்லப்படும் பெயர்கள் 14 மட்டுமே. ஆனால்
பின்னால் வந்த சைன ஆசிரியர் செய்த சூடாமணி நிகண்டில்
அருகனுக்கு 96 பெயர்களும், சிவனுக்கு
61 பெயர்களுமே
சொல்லப்பட்டுள்ளன என்பார் அருணாசலம்.
தமிழ்ப் பிங்கல
நிகண்டு, பிங்கலந்தை எனப்படும். இது மிக
விரிந்த நூல். இதனுள் 14700 சொற்கள்
சொல்லப்பட்டுள்ளன.
தொல்காப்பியர் சொல்லும் இயற்சொல், திரிசொல், திசைச்சொல்,
வடசொல் என்ற நால்வகைச் சொற்கைளையும் இந்நூல் நன்கு
ஆராய்ந்து தொகுத்துச் சொல்கிறது. முழுவதும் நூற்பாக்களால்
ஆனது. பத்துப் பகுதிகளைக் கொண்டது. 4181 சூத்திரங்கள்
உள்ளன. நூற்பகுதி ஒவ்வொன்றும்
‘வகை' என்று
சொல்லப்பட்டுள்ளது. திவாகரத்தில்
‘பெயர்' என்று
அழைக்கப்பட்டு உள்ளது. பின்னால் வந்த நிகண்டு நூல்கள் யாவும்
திவாகர நிகண்டின் அமைப்பையே, பின்பற்ற, பிங்கல
நிகண்டு மட்டும் நூற்பகுதியின் பொருள்களைச் சற்றே மாற்றி வைத்துள்ளது.
(1) வான் வகை
(2) வானவர் வகை
(3) ஐயர் வகை
(4) அவனி வகை
(5) ஆடவர் வகை
(6) அனுபோக வகை
(7) பண்பில், செயலில் பகுதி வகை
(8) மாப்பெயர் வகை
(9) மரப்பெயர் வகை
(10) ஒரு பொருள் பல்பெயர் வகை என்பன.
ஆகிய நால்வகைச் சொற்களுக்கும் இந்நூல் இடமளித்துள்ளது.
6.7.4 பன்னிரு பாட்டியல்
தொடர்நிலைச் செய்யுளின்
இலக்கணம் கூறுவது பாட்டியல்
ஆகும். என்ன நெறியில் பிரபந்த இலக்கியம் செய்யலாம் என்று
வழிகாட்ட வந்ததே பாட்டியல் இலக்கணம் ஆகும்.
பாட்டியல் நூல்களில்
பழமையானது பன்னிரு பாட்டியல்
ஆகும். இதை இரா.ராகவ அய்யங்கார் 1912இல் வெளியிட்டார்.
இந்நூலில் பதினைந்து பாட்டியல்
புலவர் பெயர்கள்
சொல்லப்பட்டுள்ளன. பன்னிரெண்டு உறுப்புகளை/ பொருள்களைக்
கூறுகின்றமையால் இந்நூல், ‘பன்னிரு பாட்டியல்' எனப்படுகிறது.
அவை,
(1) மங்கலம் - நலம் தருவது
(2) சொல் - நலம் தரும் சொல்
(3) எழுத்து - எழுத்துகளின் பிறப்பு
(4) தானம் - பகை, நட்பு முதலியன
(5) பால் - ஆண் பெண் முதலியன
(6) உண்டி - அமுத எழுத்து, நச்செழுத்து
(7) வருணம் - நால்வகைச் சாதி
(8) நாள் - எழுத்துக்குரிய நட்சத்திரம்
(9) கதி - தேவர்
(10) கணம் - அசை, சீர் முதலியன
(11) கன்னல் - நாழிகை
(12) புள் - பறவைகள்
என்பன. பன்னிருபாட்டியல், எழுத்தியல், சொல்லியல்,
இனவியல்
என்ற மூன்று பாகுபாடுகளைக் கொண்டது.
பன்னிருபாட்டியல்
கூறும் பிரபந்தங்களின் எண்ணிக்கை 74
ஆகும். பிரபந்தங்கள் 96 என்பது பிற்கால
வழக்கு ஆகும்.
‘மெய்க்கீர்த்தி' என்ற சிறப்பான பிரபந்த வகை பற்றி இந்த நூலில்
குறிக்கப்பட்டுள்ளது. முதல் மெய்க்கீர்த்தி
சோழன்
இராசராசனுடையது. அவனது ஆட்சி கி.பி.985இல் தொடங்கியது.
அரசவைப் புலவர்கள் அவனைப் போற்றி
மெய்க்கீர்த்தி
பாடியிருப்பார்கள். அவற்றை உணர்ந்து இப்பாட்டியல் இலக்கணம்
கூறுவதால் 985-1000க்குள், பத்தாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில்
இந்நூல் தோன்றியிருக்கக் கூடும் என்பர்.
6.7.5 புறப்பொருள் வெண்பா மாலை
இது ஐயனாரிதனார் செய்த நூல்.
பன்னிரு படலத்தின் வழி தன் நூலைச் செய்தார்.
புறப்பொருள் பற்றியது. இவர் பாடலை
மேற்கோள் காட்டாத உரையாசிரியர்களே இல்லை
எனலாம்.
புறப்பொருள் வெண்பாமாலை வெட்சித்திணை
முதல்
பெருந்திணை வரை 12 படலங்களைக் கொண்டது. வெட்சி மலர்
அணிந்து பகைவரின் ஆன்நிரைகளைக் கவர்தல். இவ்வாறே
ஒவ்வொரு திணைக்கும் அவ்வம் மலர் சூடிச் செயல் மேற்கொள்ளல்.
பாடாண் திணை:
பிற திணைகளைப் போல இப்பகுதிக்கு
மலர் சொல்வது இல்லை. அரசரது புகழ்,
வீரம், கொடை
என்பவற்றைப் போற்றிப் பாடுதல்.
பொதுவியல்
: வேந்தர் சிறப்பு, நடுகல்
என்பன சொல்லப்படும்.
கைக்கிளை
: ஒருதலைக் காமம் -
ஆண்பால் - பெண்பால்
கூற்று.
பெருந்திணை
: பொருந்தாக் காமம்
ஒழிவு
: இதுவரை சொல்லாதவற்றைச்
சொல்லுதல் என்று
அமைந்துள்ளது.
தேசிக
மாலை
யாப்பருங்கலக் காரிகை
உரை யில் குணசாகரர் ‘ஏழடியின்
மிக்க பஃறொடை வெண்பாக்களை யாப்பருங்கலவிருத்தி உரைக்கும்
தேசிகமாலை முதலியவற்றுள்ளும் கண்டுகொள்க'
என்று
எழுதுகிறார். அக்குறிப்பிலிருந்து பஃறொடை வெண்பாக்களைக்
கொண்ட நூல் என்பது தெரிகிறது. ஆனால் அத்தகு நூல் எதுவும்
கிடைக்கவில்லை. நூலின் பெயரைத் தவிர வேறு எதுவும் அறிந்து
கொள்ள இயலவில்லை.
6.7.6 மணக்குடவர் உரை
திருக்குறளுக்கு
உரை செய்த பதின்மரில் மணக்குடவரும்
ஒருவர். ‘தருமர் மணக்குடவர்' என்று இவரது பெயர் இரண்டாவதாக உள்ளது. இப்பெயருக்கு
எவ்வித விளக்கமும் கிடைக்கவில்லை.
உரைக்குச் சிறப்புப்பாயிரம் இல்லை. எனவே அவரது வரலாறு
விளங்கவில்லை. தேவருரை என்றும் இவ்வுரை கூறப்படுகிறது.
இவரது சமயமும் விளங்கவில்லை. பரிப்பெருமாள் உரை கி.பி.11ஆம்
நூற்றாண்டைச் சேர்ந்தது. அவர் மணக்குடவர் உரையைத் தழுவியே
தமது உரையை எழுதி உள்ளார். அவ்வகையில் இவரது
உரை
பரிப்பெருமாள் உரைக்கு முந்தையது என்பது தெளிவு. இவரது உரை
950-1000க்குள் செய்யப்பட்டிருத்தல் வேண்டும்
என்பார்
மு.அருணாசலம்.
இவரது உரை
குறளின் கருத்துகளை மட்டுமே நேரே
விளக்குவதாக உள்ளது. ஒவ்வோர் அதிகாரத் தலைப்பிலும்,
அதிகாரப் பொருளைச் சில சொற்களால் விளக்குகிறார். அதிகாரப்
பொருள் யாவற்றுக்கும் ஒரு தொடர்பு இருக்குமாறு கருத்துரை
கூறுவது இவரது இயல்பு ஆகும்.
ஒவ்வொரு குறளின்
கருத்தையும் இரண்டே சொற்களில்
உணர்த்த எண்ணுவது தெரிகிறது. ‘நோற்றலால் மார்க்கண்டேயன்
கூற்றத்தைத் தப்பினான்' போன்ற புராணக் கதையையும் சொல்கிறார்.
அருஞ்சொற்கள் மிகவும் குறைவு. இவரே முதலில் உரை எழுதும்
உரை மரபைத் தோற்றுவிக்கிறார்
|