1.0 பாட முன்னுரை
பதினான்காம் நூற்றாண்டின்
முற்பகுதியில் வடநாட்டை ஆண்டு வந்த அலாவுதீன் கில்ஜி அனுப்பிய படைத்தலைவனான
மாலிக்காபூர், தெற்கே நிலவிய பாண்டியர் ஆட்சியை வென்று அமைதியைக்
கெடுத்தான். மதுரையில் அவன் படைகள் நுழைந்து குழப்பம் உண்டாக்கின.
ஐம்பதாண்டுக் காலம் பாண்டிய நாடு முகமதியர் ஆட்சியில் இருந்தது.
ஆந்திராவில் விஜயநகர ஆட்சி ஏற்படும் வரையில் தமிழ்நாட்டில் அமைதி
இல்லை. அப்போது மதுரையில் விஜயநகரத்தாரின் செல்வாக்குப் பெற்ற நாயக்கர்கள்
ஆட்சியை எற்படுத்தினர். நானூறு ஆண்டுகள் அந்தப் பேரரசு மதுரையில்
நிலவியது. முகமதியர், ஐரோப்பியர் பிடியிலிருந்து தென்னாட்டை ஓரளவு
விடுவித்தவர்கள் நாயக்க மன்னர்களே!
நாயக்க
மன்னர்கள் வைணவர்கள் ஆனாலும் பிற மதங்களையும் ஆதரித்தனர். கம்பர்,
சேக்கிழார் போன்ற பெரும்புலவர்கள் இந்நூற்றாண்டில் தோன்றவில்லை.
புராண காலம் என்று கூறுமளவுக்குத் தலபுராணங்களும், மொழியாக்கப் புராணங்களும்
தோன்றின. சைவ சமய நூல்கள், உரைகள் தோன்றச் சைவ மடங்கள் காரணமாயின.
இலக்கண நூல்கள், சிற்றிலக்கியங்கள், நீதி நூல்கள் என்பன இக்காலத்தில்
தோன்றின.
திருவிளையாடற் புராணம்,
நைடதம் என இரண்டு காப்பியங்கள் தோன்றிய நூற்றாண்டு இது. வரதுங்கராம
பாண்டியர், அதிவீரராம பாண்டியர் என்ற இரு அரசர்களும், குருஞான சம்பந்தர்,
ஞானப் பிரகாசர், மறைஞான சம்பந்தர் போன்றோர் சைவத்திலும் செவ்வைச்
சூடுவார், திருக்குருகைப் பெருமாள் கவிராயர், பிள்ளைலோகம் ஜீயர்
போன்றோர் வைணவத்திலும் மண்டலபுருடர் சமணத்திலும், சித்தர் மரபில்
இரேவண சித்தரும் தோன்றிய காலம் இதுவே. நீதிநூல் பாடிய உலகநாதர் இந்தக்
காலத்தில் தோன்றியவரே! இவை பற்றிய செய்திகள் இப்பாடத்தில் தொகுத்துக்
கூறப்பட்டுள்ளன.
|