2.6 கிறித்தவர்களின் தமிழ்த்தொண்டு


இயேசுநாதர்

(1) சிறுவர் சிறுமியர்க்கான பாடசாலைகளைத் திறந்தனர்.
(2) தமிழ்க் கருவூலங்களை எல்லாம் பயிலும் ஆர்வத்தை ஏற்படுத்தினர்.
(3) ஏட்டுச் சுவடியிலிருந்த தமிழை, இந்தியாவிலே முதன்முதலில் அச்சேற்றினர்.
(4) உரைநடை இலக்கியத்தை வளர்த்ததன் மூலம் நாவல், சிறுகதை, நாடகம், மொழியியல் துறைகள் தோன்றச் செய்தனர்.
(5) தமிழ் எழுத்தில் சில மாற்றங்கள் செய்து சிக்கலை நீக்கினர்.
(6) பிற நாட்டவர் தமிழ் கற்பதற்கு உதவியாக அகராதிகள் வெளியிட்டனர்.
(7) மேலைநாட்டு இலக்கியங்களைத் தமிழுக்கும், தமிழிலக்கியங்களைப் பிற மொழிகளிலும் மொழிபெயர்ப்புச் செய்தனர்.
(8) இலக்கிய, இலக்கண நூல்களைப் படைத்தனர்.
(9) தமிழில் திறனாய்வு முறையைப் புகுத்தினர்.
(10) கல்வெட்டு, சாசனம் போன்றவற்றைப் படியெடுத்துப் போற்றினர்.
(11) ஆவணக் காப்பகம் அமைத்தும் கீழ்த்திசை ஏட்டுப் பிரதி நூலகம் அமைத்தும் தமிழைப் போற்றினர்.
(12) நூற்பட்டியல் கண்டனர்.
(13) பழமொழிகள், நாட்டுப்புறப் பாடல்கள், சடங்குகள், குலங்கள் என்பவற்றைப் பற்றியெல்லாம் தொகுத்தனர்.
(14) கிறிஸ்தவத் தமிழ் இலக்கியம் என்ற வகையைத் தோற்றுவித்தனர்.
(15) உயர்தமிழை உலகத் தமிழ் ஆக்கினர்.

2.6.1 ராபர்ட் -டி-நொபிலி

இத்தாலி நாட்டில் பிறந்து, 1606இல் தமிழ்நாடு வந்து தமிழும் வடமொழியும் கற்றார் நொபிலி. காவியும் பூணூலும் அணிந்து மரக்கறி உணவுண்டு, தத்துவ போதகர் என்று தம் பெயரை மாற்றி, தம்மை இத்தாலியப் பிராமணர் என்று கூறிக் கொண்டார். நூற்றுக்கணக்கான உயர் சாதி இந்துக்களைக் கிறித்தவராக்கினார். திருமலை நாயக்கரின் நண்பரான பின், சில ஆண்டுகள் கழித்து இலங்கையும் சென்று வந்தார். 1647இல் மயிலாப்பூரில் மறைந்தார்.

‘முதல் உரைநடை நூலை’த் தமிழில் எழுதிய பெருமை இவரையே சாரும். சமயச் சார்புடைய, வடசொல் கலந்த மேனாட்டு மொழி கலந்த ஒரு கொச்சை மொழியில் பல நூல்கள் எழுதினார். அச்சேறாத காரணத்தால் அவை அழிந்தன. பிற மதங்களைக் கண்டிப்பது இவர் காலத்தில் நிலவியதை அறிகிறோம். ஞானோபதேச காண்டம், மந்திர மாலை, ஆத்தும நிர்ணயம், தூஷணதிக்காரம், சத்திய வேத இலட்சணம், சகுண நிவாரணம், பரமசூட்சும அபிப்ராயம், கடவுள் நிர்ணயம், புனர்ஜென்ம ஆட்சேபம், நித்ய ஜீவன சல்லாபம், தத்துவக் கண்ணாடி, ஏசுநாதர் சரித்திரம், தவசுச் சதகம், ஞானதீபிகை, நீதிச்சொல், அநித்திய நித்திய வித்யாசம், பிரபஞ்ச விரோத வித்யாசம் முதலிய 17 நூல்களை இயற்றியுள்ளார்.

2.6.2 ஹென்றிக் பாதிரியார் (1520-1600)

போர்ச்சுகீசிய நாட்டிலிருந்து தமிழகக் கடற்கரை மக்களுக்குத் தொண்டு புரிய வந்தவர். முதன்முதலில் தமிழ் எழுத்துக்களால் விவிலியத்தை அச்சேற்றியதால் இவர் ‘தமிழ் அச்சின் தந்தை’ என்று போற்றப்படுகிறார். இவர் எழுதியவற்றுள் பதினாறு பக்கம் கொண்ட தம்பிரான் வணக்கம், 132 பக்கம் கொண்ட கிரீசித்தாணி வணக்கம், 669 பக்கம் உடைய Hos sanctorum என்ற மூன்று நூல்கள் மட்டும் கிடைக்கின்றன. இவர் எழுதிய இலக்கணம், அகராதி என்பன கிடைக்கவில்லை. பல்வேறு இடங்களிலிருந்து பல சமயம் இவரெழுதிய 70 மடல்களின் தொகுதியான ‘Documenta Indica’ என்பது ஒரு வரலாற்றுச் சுரங்கமாக விளங்குகிறது. ஐரோப்பியருள் முதன் முதலில் தமிழ் கற்றுத் தமிழ் நூலை அச்சேற்றிய பெருமைக்குரியவர்.

2.6.3 சீகன்பால்கு ஐயர் (Ziegenbalg)

பிராட்டஸ்டண்ட் மதத்தைப் போதிக்க ஜெர்மனி நாட்டிலிருந்து தமிழகத்திற்கு சீகன்பால்கு 1705இல் வந்தார். தரங்கம்பாடியில் தமிழ் கற்று, அங்கேயே தங்கினார். அங்கே ஓர் அச்சுக் கூடமும் காகிதத் தொழிற் சாலையும் அமைத்து, பைபிளைத் தமிழில் மொழிபெயர்த்து அச்சடித்தார். தமிழ் - லத்தீன் ஒப்பிலக்கணமும், தமிழ் - இலத்தீன் அகராதியும் படைத்தார். கிறித்தவ சமய உண்மைகளை அச்சடித்து, பண்டிதரிடையே முடங்கிக் கிடந்த தமிழைப் பாமரரிடம் பரப்பினார். 1715-இல் பைபிளைத் தமிழில் மொழி பெயர்த்து அச்சிட்டார். ஐரோப்பா சென்ற பொழுது தமிழ் மறவாதிருக்க, மலையப்பர் என்ற தமிழரையும் உடன் அழைத்துச் சென்றார். முதன்முதலில் தமிழில் நூல்களை அச்சிட்ட பெருமை இவருக்கே உரியது.