2.7 பல்துறை நூல்கள்
பதினேழாம் நூற்றாண்டின் இறுதியிலும், 18ஆம்
நூற்றாண்டின் தொடக்கத்திலும் சோதிடம், மருத்துவம் ஆகிய
துறைகளில் சித்தர்கள் பேரால் பல நூல்கள் இயற்றப்
பெற்றுள்ளன. அவற்றில் மருத்துவ நூல்களும் வாத நூல்களும்
காயகற்ப மருந்துகளைப் பற்றி விரிவாகப் பேசுகின்றன.
இரசவாதக் கலை ஏற்றம் பெற்றிருந்ததைத் தாயுமானவர்,
திரிகூட ராசப்பக் கவிராயர், மஸ்தான் சாகிபு ஆகியோர்
பாடல்களால் அறிகின்றோம்.
சோதிட நூல்களில் நாடிகள் என்னும் பெயருடைய
நூல்கள் பல தமிழகத்தில் காணப்படுகின்றன. கௌசிக நாடி,
கௌமார நாடி, சுக்கிர நாடி, காகபுசுண்டர் நாடி, துருவ நாடி,
சப்தரிஷி நாடி, நந்தி நாடி, மார்க்கண்ட நாடி என்பன
அவற்றுள் சில. ஒருவருடைய சாதகக் குறிப்பு அல்லது
கைரேகை என்பதைக் கொண்டு அவரைப் பற்றிய முக்கால
நிகழ்ச்சிகளையும் 1/300 அல்லது 1/600 வரையில் மிகவும்
நுட்பமாக நாடிகள் பலன் தருகின்றன என்கிறார்
கே.கே.பிள்ளை.
தமிழகத்தில் வாழ்ந்த
ஆபி டூபாய் (Abbe Dubois) என்ற பாதிரியார்
இந்துக்களின் பழக்க வழக்கங்களும் சடங்குகளும் என்ற நூலை எழுதியுள்ளார்.
இதிலுள்ள ஒரு சில செய்திகளைத் தவிரப் பிற தமிழகத்தைப் பற்றியன அல்ல.
சென்ற நூற்றாண்டைப் போலவே வடமொழியில் இருந்து
நூல்களை மொழிபெயர்ப்பு செய்யும் பணி நடைபெற்றது.
பிரபோத சந்திரோதயம் என்ற வடமொழி நாடகத்தை மாதை
திருவேங்கட நாதர் தமிழில் மொழி பெயர்த்தார். வேம்பத்தூர்
ஆளவந்தார் வடமொழி யோக வாசிட்டத்தைத் தமிழில்
மொழி பெயர்த்தார். சிவப்பிரகாசர் பிரபுலிங்க லீலை என்ற
நூலை கன்னடத்திலிருந்து தமிழுக்கு மொழி பெயர்த்தார்.
|