3.6 புராணங்கள்

    மடத்தின்     தலைவர்களும்     மடத்தின் ஆதரவில்
வாழ்ந்தவர்களும்     செல்வர்களும்     வள்ளல்களும்
ஆதரிக்கப்பட்டவர்களும் பிற இலக்கிய வகைகளைப் போலவே
பல புராணங்களையும் இயற்றினர். தமிழில் பிற மதம் சார்ந்த
காப்பியங்களும் இந்நூற்றாண்டில் இயற்றப்பட்டன.

3.6.1 புராணங்களும் மொழிபெயர்ப்பும்

    சிவஞான முனிவரின் காஞ்சிப் புராணம், கச்சியப்ப
முனிவரின் 6 புராணங்கள், சிதம்பர சுவாமிகளின்
திருப்பாதிரிப் புலியூர்ப் புராணம், கூழங்கைத் தம்பிரான்
இயற்றிய ஏசு புராணம், வடமலையப்ப பிள்ளையின் மச்ச
புராணம்
,     நீடுர்ப்     புராணம், நல்லாப்பிள்ளையின்
தெய்வயானை புராணம், கவிராஜ பண்டிதரின் நாககிரி
புராணம்
, திருப்பூவணம் கந்தசாமிப் புலவர் இயற்றிய
திருப்பூவணநாதர் உலா, திருப்பூவணப் புராணம்,
ஆப்பனூர்ப் புராணம் என்பன இந்நூற்றாண்டில் தோன்றிய
புராணங்கள். இவற்றுள் தல புராணங்களாக அமைந்தவை தவிர,
பிற வடமொழிப் புராணங்களை மொழி பெயர்த்துத் தமிழில்
இயற்றப்பட்டவையே.

3.6.2 சீறாப்புராணம்

    எட்டையபுர சமீன் ஆஸ்தானப் புலவராகத் திகழ்ந்த
உமறுப்புலவர் இளவயதிலேயே தம் குருவின் எதிரியை வெற்றி
கண்டவர். நபிகள் நாயகத்தின் வரலாற்றையும் அறிவுரையையும்
சமயத் தொண்டையும் விளக்கி 5027 பாடல்கள் கொண்ட
சீறாப் புராணத்தை இயற்றியதால் ‘இசுலாமியக் கம்பர்’ என்று
போற்றப்படுபவர். தலைப்பாகை, முறுக்கு மீசை, கையில்
தங்கக்காப்புப் பூண்டு இந்து போல விளங்கிய இவரை எட்டப்ப
பூபதியும் சீதக்காதியின் பொருளாளரான அபுல்காசிமும்
ஆதரித்து உள்ளனர்.

    இசுலாமியத் தமிழ் இலக்கியங்களில் முதன்மையானது
சீறாப் புராணம். ‘சீறத்’ என்னும் அரபுச் சொல்லில் இருந்தே
‘சீறா’ என்ற சொல் தோன்றியது. சீறத் - என்ற சொல்லுக்கு
வாழ்க்கை வரலாறு என்றும் புராணம் என்றால் புனிதக் கதை
என்றும் பொருள். அவ்வகையில் இஸ்லாமியத்தை உலகிற்குப்
போதித்து நல்வாழ்வு வாழ்ந்த முகமதுநபி ஸல் அவர்களே
இக்காப்பியத் தலைவர்.விருத்தப்பாக்களிலான இப்புராணம்,

விலாதத்து காண்டம் - நபியின் பிறப்பு, இளமை
வாழ்வு கூறுவது.
நுபுவ்வத்துக் காண்டம் - இஸ்லாமிய சமயம்,
வானவர் மூலம் நபிக்கு
அருளப்பட்டதைக் கூறுவது.
ஹிஜ்றத்துக் காண்டம் - நபி மக்காவிலிருந்து
மதினா ஓடியதைக் கூறுவது

என மூன்று காண்டங்களாக உள்ளது. புராணத்தில் நபியின்
வரலாறு சிறப்பாக அமைந்தாலும் முழுமை பெறவில்லை. பனீ
அகமது மரைக்காயர் என்பவர் 2145 பாக்களை ‘சின்ன சீறா’
வாகப் பாடிச் சீறாப் புராணத்தை நிறைவு செய்தார்.

    நபி இப்பூமியில் தோன்றியதை, உமறுப்புலவர்,

கோதறப் பழுத்து மதுரமே கனிந்த கொவ்வைவா
        யரம்பையர் வாழ்த்தித்
தீதற நெருங்கி யேவல்செய் திருப்பச்
        செழுங்கமலாசனத் திருந்த
தருக் கரசி யாமினா வுதர மனையிடத்
        திருந்துமா நிலத்தில்
ஆதரம் பெருக நல்வழிப் பொருளாய் அகுமது
        தோன்றினா ரன்றே

     (சீறாப் புராணம், நபியவதாரப் படலம் - 86)

(கோது = குற்றம் ; மதுரம் = இனிமை;
அரம்பையர் = தேவலோக மகளிர்;
உதரம் = வயிறு ; ஆதரம் = அறம்)

என்ற பாடலின் மூலம் ஆமினா வயிற்றில் அகமது நபி
இவ்வுலகில் அறம் பெருக, நல்வழிப் பொருளாய்ப் பிறந்தார்
என்கிறார்.