2.3 தமிழ்ச் சொற்கள்

எழுத்துகள் இணைந்து சொல் உண்டாகும். சொல்லை நான்கு வகைகளாகத் தொல்காப்பியம் குறிப்பிடும். அவை பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என்பன. ஒன்றின் பெயரைக் குறிப்பது பெயர்ச்சொல் ஆகும். கந்தன், ஊர், கண் என்பவை பெயர்ச்சொற்கள்.

ஒரு செயல் நடைபெறுவதைக் குறிப்பது வினைச்சொல் ஆகும். செயல் நடைபெறும் காலம் நிகழ்காலம். செயல் முடிந்ததைக் கூறுவது இறந்த காலம். இனிமேல்தான் செயல் நடக்க உள்ளது என்பதைக் கூறுவது எதிர்காலம். வினைச்சொல் செயலைக் குறிக்கும், செயலின் காலத்தையும் குறிக்கும். படி, வா, போ, இரு, வாங்கு, கொடு, கொடுக்கிறான், கொடுத்தான், கொடுப்பான் என்பவை வினைச்சொற்கள்.

பெயர்ச்சொல்லையோ, வினைச்சொல்லையோ அடுத்து வருவது இடைச்சொல்லும், உரிச்சொல்லும் என்று தொல்காப்பியம் கூறும். இடைச்சொல் பெரும்பாலும் இடையில் வரும்; தானாகத் தனித்து வருவதில்லை. பெயரையும் வினையையும் சார்ந்தே வரும். உரிச்சொல் செய்யுளுக்கு உரியது. எல்லா இடங்களிலும் வராது. இசை, குறிப்பு, பண்பு என்னும் பொருளுக்கு உரியது உரிச்சொல் என்று தொல்காப்பியம் கூறுகிறது.

2.3.1 தமிழ்ச்சொல் அமைப்பு

ஓர் எழுத்து தனித்து நின்றோ ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துகள் சேர்ந்து நின்றோ பொருள் தந்தால் அது சொல் எனப்படும். தமிழில் ‘மொழி’, ‘கிளவி’, ‘சொல்’, ‘பதம்’ ஆகியவை சொல்லைக் குறிக்கும் வேறு சொற்கள் ஆகும். சொல்லுக்கு வடிவம் உண்டு. சொல் பொருளைக் குறிப்பது. சொல்லின் அமைப்பு இறுக்கம் ஆனது. கட்டுக்கோப்பு உடையது. சொல் அடிச்சொல்லையும் ஒட்டுகளையும் கொண்டது. சொற்களைக் கொண்டு தொடர் எனப்படும் வாக்கியம் அமைக்கலாம். ஆனால் வாக்கியம் அவ்வளவு இறுக்கம் உடையது அல்ல. ஒரு சொல்லின் பொருள் இடத்தை ஒட்டி அமையும். நான், நீ, அவன் என்பவை இடத்தை ஒட்டிப் பொருள் தருகின்றன.

நான் - தன்மைப் பெயர்
நீ - முன்னிலைப் பெயர்
அவன் - படர்க்கைப் பெயர்.

அதுபோலவே காலத்தை ஒட்டியும் வேறுபடும்.

பார்த்தாள் - இறந்தகாலம்
பார்க்கிறாள் - நிகழ்காலம்
பார்ப்பாள் - எதிர்காலம்

பெயர்ச்சொற்கள் திணை, பால் ஆகியவற்றை ஒட்டி அமையும்.

மனிதர், முருகன், வள்ளி, பெண் உயர்திணை
மாடு, புலி, புல், மரம், கல் அஃறிணை
அவன் ஆண்பால் சொல்
அவள் பெண்பால் சொல்
அவர்கள் பலர்பால் சொல்
அது ஒன்றன்பால் சொல்
அவை பலவின்பால் சொல்

பெயர்ச்சொல், வினைச்சொல் என்ற இருவகைச் சொற்களுக்கும் அடிப்படையாக இருப்பது வேர்ச்சொல் ஆகும். ‘மலர்’ என்பது அடிச்சொல். இதுவே மலர்கள், மலரை, மலர்க்கு என்று அமையும்போது பெயர்ச்சொல் ஆகின்றது. மலரும், மலர்ந்தது என்று வரும்போது வினைச்சொல் ஆகின்றது.

வினையை அல்லது செயலைக் குறிப்பது வினைச்சொல் ஆகும்.

நான் எழுதினேன்
அவன் கட்டினான்

என்று வினைச்சொல் மூலம் செயலை அறியலாம். ஒருவர் செயலைத் தானே செய்தாரா, அல்லது பிறரைக் கொண்டு செய்யச் சொன்னாரா என்பதையும் வினைச் சொல்லில் இருந்து அறிந்து கொள்ள முடியும்.

கோயில் கட்டினான் - செய் வினைச்சொல்
கோயில் கட்டப்பட்டது - செயப்பாட்டு வினைச்சொல்.

ஒரு செயல் முடிந்துவிட்டதா இன்னும் முடியவில்லையா என்பதையும் வினைச் சொல் உணர்த்தும்.

பெயர், வினைச்சொற்களோடு இணைந்து பொருள் வேறுபாடுகளை உண்டாக்கும் ஐ, ஆல், கு, இன், ஏ, ஓ, உம் போன்ற சொற்கள் உள்ளன. அவற்றை ‘இடைச்சொல்’ என்பர். இடைச்சொல் தனக்கு என்று பொருள் எதையும் பெற்றிருப்பதில்லை. பெயரையோ, வினையையோ சார்ந்துதான் இடைச்சொல் அமையும்.

கண்ணன் + ஐ = கண்ணனை - இடைச்சொல்
கத்தி + ஆல் = கத்தியால் - இடைச்சொல்
இராமன் + உடன் = இராமனுடன் - இடைச்சொல்
என் + ஓடு = என்னோடு - இடைச்சொல்
சீதை + கு = சீதைக்கு - இடைச்சொல்
அவள் + அது = அவளது - இடைச்சொல்

இவ்வாறு இடைச்சொற்கள் பொருள் வேறுபாட்டைத் தருவதால் ‘வேற்றுமை உருபுகள்’ என்று அழைக்கப்படுகின்றன. பண்பு, குறிப்பு, இசை, மிகுதி இவற்றைக் குறிக்கும் சொற்கள் உள்ளன. அத்தகைய சொல்லை ‘உரிச்சொல்’ என்று அழைப்பர். சால, உறு, தவ, நனி என்றெல்லாம் உரிச்சொற்கள் உள்ளன.

பீலிபெய் சாகாடு மச்சிறு மப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்

(திருக்குறள்-475)

சால - உரிச்சொல்; (பொருள் - மிகவும்)

உரிச்சொல்லின் பயன்பாடு பேச்சு வழக்கில் அதிகம் இல்லை. பண்டைக் கால இலக்கிய நூல்களில் உரிச்சொல் மிகுதியும் உள்ளது.

2.3.2 தமிழ்ச் சொல் வகைப்பாடு

சொற்களை உணர்வு நிலையில் இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என்று பகுக்கும் முறை தமிழ் இலக்கணங்களில் உள்ளது. தமிழகத்தில் இயல்பாக வழங்கும் சொல் இயற்சொல் ஆகும். நிலம், நீர், தீ, காற்று, சோறு, கூழ், பால், தயிர், கமுகு என்பவை எல்லாம் இயற்சொற்களாகும். சொல் முழுவதுமே மாறி ஒலித்தாலும் அது திரிசொல்தான். ஒரு எழுத்து மாறி ஒலித்தாலும் அது திரிசொல், திரிதல் என்றால் ‘மாறி அமைதல்’ என்று பொருள் தரும்.

மலை - விலங்கல், விண்டு என முழுச் சொல்லும் திரிந்து போதல்
கிளி - கிள்ளை என ஒரு பகுதி திரிந்து போதல்
மயில் - மஞ்ஞை

திரிசொல்லை இரண்டு வகையாகத் தொல்காப்பியம் பகுக்கிறது. ஒரு பொருளைப் பற்றி வரும் பல சொல், பல பொருளைக் குறிக்கும் ஒரு சொல் என்பனவே அவை.

மலை என்ற ஒரு பொருளைக் குறிப்பிட வெற்பு, வரை, கோடு, விலங்கல், விண்டு என்று பல சொற்கள் வருவதும்.

எகினம் என்ற ஒரே சொல் அன்னம், கவரிமான், நாய் என்று பல பொருளைக் குறிப்பதும் இந்த இருவகைத் திரிசொல்லுக்குச் சான்று.

அந்நாளைய தமிழகத்தைச் சுற்றிப் பன்னிரு நாடுகள் இருந்தனவாம். அவை செந்தமிழ் சேர்நிலம் எனப்பட்டன. அந்நாடுகளில் வழங்கப்படும் சொல் திசைச்சொல் என்பது. அச்சொல் இடத்துக்கு இடம் வேறுபடும். பொங்கர்நாடு, ஒளிநாடு, தென்பாண்டிநாடு, குட்டநாடு, குடநாடு, பன்றிநாடு, கற்காநாடு, சீதநாடு, பூழிநாடு, மலைநாடு, அருவாநாடு, அருவா வடதலை நாடு என்று பன்னிரு நாடுகளைச் சேனாவரையர் கூறுவார்.

ஆ, எருமை என்பவை ‘மாடு’களைக் குறிக்கும் சொற்கள். இவற்றைத் தென்பாண்டி நாட்டார் பெற்றம் என்ற சொல்லால் குறிப்பிடுகின்றனர்.

பெற்றம் என்பது திசைச்சொல். அது தென்பாண்டி நாட்டில் மட்டுமே இருப்பது. பிற இடங்களில் வழக்கில் இல்லாதது.

என்று திசைச்சொல்லுக்கும் சேனாவரையர் எடுத்துக்காட்டுத் தருகிறார்.

வடசொல் என்பது சம்ஸ்கிருத மொழிச் சொல்லைக் குறிக்கும். அதை அம்மொழி எழுத்தால் எழுதாமல், தமிழ், வடமொழி என்னும் இரண்டுக்கும் பொதுவான எழுத்தால் எழுதுவது வடசொல்.

தமிழ்ச் சொல் வடசொல்
கடல் - வாரி
மலை - மேரு

நாளடைவில் ‘கடல்’ என்ற தமிழ்ச் சொல்லும், ‘வாரி’ என்ற வடசொல்லும் கடலைக் குறிக்கப் பயன்படுவதாயின. தொல்காப்பியச் சொல் அதிகாரத்தில் இத்தகு பகுப்பு உள்ளது.

2.3.3 சொற்கள் - மேலும் சில வகைகள்

சொற்கள் மரபுச் சொற்கள், பொதுச் சொற்கள், ஆண் - பெண் பெயர்ச் சொற்கள், எதிர்ச்சொல், அருஞ்சொல் என மேலும் வகைப்படுத்தப்படும்.

  • மரபுச் சொற்கள்
  • முன்னோர் மரபாகப் பயன்படுத்திய முறைப்படி, இப்படித்தான் பயன்படுத்தப்பட வேண்டும், நினைத்தபடி எல்லாம் சொல்லக் கூடாது என்ற வரையறை பெறும் சொற்கள் மரபுச் சொற்கள் ஆகும். குயில் கூவியது என்றுதான் கூற வேண்டும். கூவியது என்பது மரபுச்சொல், மயில் அகவியது; காகம் கரைந்தது; கோட்டான் குழறியது; கோழி கொக்கரித்தது; கிளி கொஞ்சியது என்று சொல்வதே மரபாகும். குயில் அகவியது என்றோ காகம் கத்தியது என்றோ கூறக் கூடாது. கீழே இடம் பெறும் மரபுச் சொற்களைப் பாருங்கள்.

    யானை பிளிறியது
    புலி உறுமியது
    சிங்கம் கர்ச்சித்தது
    குதிரை கனைத்தது
    கழுதை கத்தியது
    நாய் குரைத்தது
    எருது முக்காரமிட்டது

    விலங்குகள் எழுப்பும் ஒலியைக் குறிக்க எத்துணை மரபுச் சொற்கள் உள்ளன பாருங்கள்.

    The dog is barking.
    The lion is roaring.
    The horse is neighing.
    The donkey is braying.

    போன்ற சொற்கள் ஆங்கில மொழியின் மரபுச் சொற்கள் என்று புரிந்து கொள்ளுங்கள்

  • பெயர், வினை பொதுச் சொற்கள்
  • ஒரே சொல், பெயராகவும் பயன்படும்; வினைஆகவும் பயன்படும். அந்தச் சொல் தொடரில் எப்படி வந்துள்ளது என்பதை வைத்துத்தான் அது பெயர்ச்சொல்லா, வினைச்சொல்லா என்று தீர்மானிக்க முடியும். அப்படி வரும் பொதுச் சொற்கள் தமிழில் உள்ளன. அவை,

    சொல் - பெயர் வினை
    அடி - நீட்டல்அளவு, கால் அடிப்பாய்
    அணி - நகை அணிந்துகொள்
    இசை - பாடல் ஒலி இணங்கு
    இறை - கடவுள் சிதறு

  • ஆண்பால் - பெண்பால் பெயர்ச்சொல்
  • பெயரைக் குறிப்பது பெயர்ச்சொல். இது ஆண்பாலைக் குறிக்கும்போது ஆண்பால் பெயர்ச்சொல்; அதற்கு நேரான பெண்பாலைக் குறிப்பது பெண்பால் பெயர்ச்சொல் என்றமைகிறது.

    அப்பன் - அம்மை
    கணவன் - மனைவி
    காதலன் - காதலி
    மாணாக்கன் - மாணாக்கி
    தோழன் - தோழி
    சிறுவன் - சிறுமி.

  • எதிர்ச்சொல்
  • ஒரு சொல்லுக்கு நேர் எதிர்ப் பொருளைக் குறிக்கும் சொல் எதிர்ச்சொல் ஆகும். வா x போ; இல்லை x உண்டு; தீமை x நன்மை; குறை x நிறை; புண்ணியம் x பாவம் என்று எதிரெதிராக அமையும்.

  • அருஞ்சொல்
  • மக்கள் நாவில் அதிகம் வழங்காத சொல் அருஞ்சொல். இதற்கு விளக்கம் தந்தால்தான் எல்லாருக்கும் புரியும். இல்லாவிட்டால் விளங்குவது இல்லை.

    கிளறும் - கிண்டும்
    கேணி - கிணறு

    ஒரு சொல்லைச் சொன்னவுடன் பொருள் புரிந்தால் அது எளியசொல், விளக்கினால்தான் புரியும் என்றால் அது அருஞ்சொல், ஒரு சொல் அருஞ்சொல்லா, எளிய சொல்லா என்பது ஒருவருக்கு ஒருவர் மாறுபடும். அவரவரைப் பொறுத்தே அமையும். என்றாலும் சில சொற்களுக்குப் பொருள் புரிய வேண்டுமானால் அகராதியைப் பார்த்தே தெளிய முடியும் என்ற நிலை உள்ளது. அகராதிப் பயிற்சி நம்மைச் சொல் வல்லுநர் ஆக்கும்.

    இமையவர் - தேவர்கள்
    விசும்பு - வானம்
    ஏற்றம் - உயர்வு
    நானிலம் - உலகம்
    காமர் - விருப்பம்

    ஒரு சொல் இன்னொரு சொல்லுடன் சேரும்போது எங்ஙனம் எல்லாம் மாற்றம் பெறும் என்பதை இலக்கண நூல்களின் ‘புணரியல்’ விதிகள் தெளிவுபடுத்துகின்றன.