5.5 வினைச்சொற்கள்

திராவிட மொழிகளில் ஒரே அடிச்சொல் பெயர்ச்சொல்லாகவும், வினைச்சொல்லாகவும் வழங்குகிறது. இத்தகைய பல சொற்கள் இம்மொழிகளில் உள்ளன.

சான்று:

அடி - பெயர் - பாதம்
அடி - வினை - அடித்தல் செயலைக் குறிப்பது.

திராவிட வினைச்சொற்கள் பெரும்பாலும் ஒட்டுநிலை ஆக அமைந்தவை. தமிழில் வினைச்சொல் காலம், திணை, பால் முதலியவற்றை உணர்த்துவது உண்டு.

சான்று:

வந்தான்

காலம்

இறந்தகாலம்

திணை

உயர்திணை

பால்

ஆண்பால்

ஆங்கிலம் முதலிய மொழிகளில் இந்த நிலை இல்லை. has come, came, is coming என்பன காலத்தை மட்டுமே உணர்த்தின.

மேலும் வினைச்சொற்கள் திணை, பால் முதலியன உணர்த்தும் முறை திராவிட மொழிகளில் ஒன்றாகவே, ஒழுங்காகவே உள்ளது. ஐரோப்பிய மொழிகளில் இருப்பது போலப் பலவகை முறை இங்கு இல்லை.

திராவிட மொழிகளும், சித்திய மொழிகளும் முற்று, எச்சம் என இருவகை வினைப்பகுப்பைப் பெற்றுள்ளன. அவை இறப்பு, நிகழ்வு, எதிர்வு என மூவகைக் காலம் உணர்த்துகின்றன. ஏனைக் காலங்களை உணர்த்தத் துணை வினைகளைப் பயன்படுத்துகின்றன. ஏவல், வியங்கோள் என்னும் அமைப்பைப் பெற்றுள்ளன.

திணை, பால், இடம் உணர்த்தும் பால்அறி கிளவிகள் மலையாளத்தில் மட்டும் இல்லை. கோண்டு போன்ற மொழிகளில் பாலறி கிளவிகள் சேர்வதில் ஒழுங்கின்மையும், சிக்கலும் காணப்படுகின்றன. ஆனால் தமிழில் ஒழுங்கும் தெளிவும் காணப்படுகின்றன.

வடமொழி போன்றவற்றில் வினைத்திரிபு முறைகள் பலவாகக் காணப்படுகின்றன.

5.5.1 தன்வினை, பிறவினை

வினைச்சொல்லால் உணர்த்தப்படும் வினையைத் தான் செய்வது தன்வினை, பிறரைச் செய்வித்தல் பிறவினை. இவை திராவிட மொழிகளில் காணப்படுகின்றன. தன்வினைகளைப் பிறவினைகளாக ஆக்க முடியும். திணை, பால், காலம், இடத்தை உணர்த்தும் பாலறி கிளவிகளைச் சேர்ப்பதால் இம்மாற்றம் ஏற்படுவது இல்லை.

  • தன்வினை பிறவினை ஆதல்
  • தன்வினை தமிழில் , தெலுங்கில் இசு (அ) இஞ்சு, கன்னடத்தில் இசு என்னும் விகுதிகளைச் சேர்ப்பதால் பிறவினை ஆகும்.

    திராவிட மொழி

    தன்வினை

    பிறவினை

    தமிழ் செய் செய்வி
    தெலுங்கு செய் சேயிஞ்சு (செய்வி)
    பிலிபி (அழை) பிலிபிஞ்சு (அழைப்பி)
    கன்னடம் மாடு (செய்) மாடிசு (செய்வி)

    ஐரோப்பிய மொழிகளில் பிறவினைப் பொருளை உணர்த்த வேண்டின், இரண்டும் பலவுமான சொற்கள் தொடர்ந்து நின்றே உணர்த்தும். ஆனால் திராவிட மொழிகளிலோ சொல்லினுள் சிறு மாற்றத்தாலேயே பிறவினைப் பொருளை உணர்த்த முடிகின்றது.

  • இரட்டைக்கிளவி வினை
  • திராவிட மொழிகளில் மினுமினுத்தது, கலகலத்தது போன்ற இரட்டைக் கிளவி வினைகள் பல உள்ளன. இவற்றில் இருமுறை வரும் சொற்களைப் பிரித்தால் பொருள் கெடும், இவை இரட்டிப்பாலேயே பொருள் தருகின்றன.

    5.5.2 செயப்பாட்டு வினை

    திராவிட மொழிகளில் செயப்பாட்டு வினை இல்லை. ஐரோப்பிய மொழிகளில் உள்ளவாறு செயப்பாட்டு வினைக்குரிய பொருட்சிறப்பும் உண்டு. ஆயினும் செயப்பாட்டு வினைப்பொருள் பல முறைகளில் உணர்த்தப்படுகின்றது.

    சான்று:

    அது என்னால் உடைக்கப்பட்டது - ஐரோப்பிய மொழி மரபு.
    அது உடைந்து போயிற்று - தமிழ் மரபு.

    படு, உண் போன்ற துணைவினைகள் சேர்க்கப்படுகின்றன.

    உடைந்தது - உடைக்கப்பட்டது - (படு - துணைவினை)
    உடைபட்டது - (படு - துணைவினை)

    கொலையுண்டான் - (உண் - துணைவினை)
    கொலையுண்டது - (உண் - துணைவினை)

    செயப்பாட்டு வினை திராவிட மொழிகளில் புதிதாகப் புகுந்தது. புதியதாகப் புகுந்த பின்னரும் செல்வாக்குப் பெறவில்லை என்பர். அதுபோலவே திராவிட மொழிகளில் எல்லா வினைச்சொற்களும் உடன்பாட்டு வினைகளே. எதிர்மறை உணர்த்தும் இடைநிலைகளைப் பெறுவதாலேயே அவை எதிர்மறை வினைகளாகின்றன.

    சான்று:

    வருவான் - வாரான்
    செய்வேன் - செய்யேன்
    செய்தான் - செய்திலன்

    திராவிட மொழிகளில் வினைச்சொல் முக்கிய இடத்தைப் பெறுகிறது.

    5.5.3 சுட்டு, வினாச் சொற்கள்

    அ, இ, உ என்பன சுட்டுச் சொற்கள். சுட்டிக் காட்டிப் பொருள் உணர்த்துவதால் சுட்டுப்பெயர் எனப்படுகின்றன. அகரம் தூரத்தில் உள்ள பொருளைக் குறிக்கப் பயன்படுத்தும் சுட்டுச்சொல். இகரம் அண்மையில் உள்ளதைச் சுட்டும். உகரம் நடுவில் உள்ளதைச் சுட்டும். இவற்றுள் உகரம் வழக்கிழந்தது. எ கரம் வினாச் சொல் ஆகும். அ, இ, உ என்னும் சுட்டுப் பெயர்களும் எ என்னும் வினாப்பெயரும் திராவிடமொழிகளில் தொன்றுதொட்டு வழங்கி வருகின்றன.

    சான்று:

    அவன், இவன்,
    அவர், இவர்,
    அது, இது
    தமிழ் - சுட்டுச் சொற்கள்
    வாடு, வீடு,
    வாரு, வீரு,
    தா, தீ

    தெலுங்கு - சுட்டுச் சொற்கள்
    எவன், எவள், எது - தமிழ் - வினாச்சொற்கள்
    ஏவன், ஏவள், ஏது - மலையாளம் - வினாச்சொற்கள்

    திராவிட மொழிகளில் அல்லது முதலிலும், ன் அல்லது ம் ஈற்றிலும் பெற்ற வினாக்கள் காணப்படுகின்றன.

    என் - என்ன, என்னது? - தமிழ்

    ஏன்? - தமிழ்
    ஏன்? - மலையாளம்
    ஏனு? - கன்னடம்
    ஏமி? - தெலுங்கு

    திராவிட மொழிகளில் ஆ, ஈ என்னும் நெடில்களே சுட்டுகளாக வழங்கப்படுகின்றன. தெலுங்கில் ஆ, ஈ பெரும்பான்மையாகவும் அவ், இவ் என்பன சிறுபான்மையாகவும் உள்ளன. மலையாளமும், கன்னடமும் அவ்வாறு வழங்குகின்றன. தமிழில் ஆ, ஈ என்பவற்றுடன் அவ், இவ் என்பனவும் வழங்கியிருக்கின்றன.

    சொற்கள் பொருள் உணர்த்தும் முறை உலகில் உள்ள எல்லா மொழிகளுக்கும் பொதுவாக விளங்குகின்றது. பொருள் உணரும் மக்களின் மனம் பொதுத்தன்மை பெற்றிருத்தலே இவ்வுண்மைகள் பொதுவாக இருப்பதற்கும் காரணம் எனலாம். சொற்கள் பல தொடர்ந்து அமைவது சொல் தொடர் அமைப்பு ஆகும். ஒரு வாக்கியத்தில் ஒரு சொல்லை இடம் மாற்றி அமைத்தாலும் பொருள் மாறும் நிலை உண்டு.

    சான்று:

    John killed Weber. இதில் பெயர்களை மாற்றினால் பொருள் மாறுபடும்.

    தமிழில் அவ்வாறு எளிதில் மாறும் நிலை இல்லை.

    5.5.4 தமிழின் தனித் தன்மைகள்

    திராவிட மொழிகளுடன் ஒப்பிடும் போது தமிழ் வடமொழிக் கலப்புக் குறைந்து காணப்படுகிறது. தமிழில் வடசொல் கலப்பது பற்றித் தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார். தமிழ் ஒலியமைப்புக்கேற்ப வடசொற்களை மாற்றிப் பயன்படுத்தி உள்ளனர்.

    வடசொல் கிளவி வடவெழுத் தொரீஇ
    எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே

    என்று, வடசொற்களைக் கையாளும் போது வடவெழுத்துகளை அகற்றிவிட்டு, தமிழ் எழுத்திட்டுச் சொல் ஆக்கிக் கொள்ளும்படி தொல்காப்பியம் குறிக்கிறது.

    எழுத்து வடிவில் உள்ள இலக்கண நூல்கள், இலக்கிய நூல்களை அதிகமாகத் தமிழ் மொழியே பெற்றுள்ளது. ஏனைய திராவிட மொழிகளை விட, தமிழ்மொழியிலேயே தொன்மையான இலக்கண, இலக்கிய நூல்கள் மிகுதியாக உள்ளன.

    திராவிட மொழிகளில் பேச்சு வடிவம், இலக்கிய வடிவம் என்று இரண்டு வடிவங்கள் உள்ளன. அவை ஒன்றுடன் ஒன்று மிகுதியாக மாறுபட்டு உள்ளன. தமிழிலும் எழுத்து வடிவம், பேச்சு வடிவம் என இரட்டை வடிவங்கள் இருந்தபோதிலும், ஏனைய மொழிகளுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைவாகவே வேறுபாடுகள் உள்ளன.

    கால வேறுபாடு திராவிட மொழிகளில் பெரிய மாற்றத்தைத் தோற்றுவித்துள்ளது. பழங்கன்னடம் - புதுக் கன்னடம், பழம் மலையாளம் - புது மலையாளம் என்று இரண்டுக்கிடையில் புரிந்து கொள்வதில் பெரிய இடைவெளி உள்ளது. இருவேறு மொழிகளோ என்று ஐயமே கூட ஏற்படுகிறது. ஆனால் தமிழில் இவ்வேறுபாடு மிகக் குறைந்த அளவிலேயே உள்ளது.

    திராவிட மொழிகளில் சொல் வளமும், அதிகச் சொல்லாட்சியும் நிரம்பப் பெற்றிருக்கும் மொழி தமிழே ஆகும். ஒரே பொருளைக் குறிக்கப் பல சொற்கள் உள்ளன.

    திராவிட மொழிகளில் அமைந்துள்ள பழங்காலக் கல்வெட்டுகள் வேற்று மொழிகளிலேயே அமைந்துள்ளன. ஆனால் தமிழின் தொன்மையான கல்வெட்டுகளில் மிகுதியானவை தமிழிலேயே அமைந்துள்ளன.

    தமிழில் பிறமொழித் தாக்குதல் மிகவும் குறைவாகவே உள்ளது. தொன்மையான எழுத்து வடிவங்கள், இலக்கணக் கூறுகள் தமிழில் அதிகமாகப் பேணிக் காக்கப்படுகின்ற நிலை உள்ளது.