1.0 பாட முன்னுரை ஒரு மொழியின் வரலாற்றை அறிவதற்குரிய அடிப்படைச் சான்றுகள் பல. அவற்றுள் ஒன்று கல்வெட்டு. கல்லின் மீது எழுத்துகள் வெட்டப்பட்டமையால் இவை, கல்வெட்டுகள் எனப்பட்டன. இவை அழியாப் பொருட்கள் மீது எழுதப்பட்டுள்ளமையால் பல நூற்றாண்டுகள் கடந்தும் நமக்கு அப்படியே கிடைத்துள்ளன. தமிழில் பல்லாயிரக்கணக்கான கல்வெட்டுகள் உள்ளன. இவை தமிழ்நாட்டில் கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி. பதினைந்தாம் நூற்றாண்டு வரை பல்வேறு காலங்களில் பல்வேறு ஊர்களில் தோன்றியவை. இவற்றைக் குகைக் கல்வெட்டுகள் என்றும் கோயில் கல்வெட்டுகள் என்றும் இரு வகையாகப் பிரிக்கலாம். ஊர்களை அடுத்துள்ள மலைகளில் இயற்கையாக அமைந்த குகைகளில் உள்ள பாறைகளில் காணப்படும் கல்வெட்டுகள் குகைக் கல்வெட்டுகள் (Cave Inscriptions) எனப்படும். ஊர்களில் உள்ள கோயில்களில் இருக்கும் மதில் சுவர், வாயில், கல் தூண் முதலியவற்றில் காணப்படும் கல்வெட்டுகள் கோயில் கல்வெட்டுகள் (Temple Inscriptions) எனப்படும். இக்கல்வெட்டுகள் யாவும் காலந்தோறும் தமிழ்மொழி எவ்வாறு எழுதப்பட்டது, எவ்வாறு வளர்ந்து வந்தது, எத்தகைய மாற்றங்களைப் பெற்றது என்பனவற்றைக் காட்டுவனவாக உள்ளன. தமிழில் உள்ள கல்வெட்டுகளில் மிகவும் பழைமை வாய்ந்தவை குகைக் கல்வெட்டுகள் ஆகும். இவற்றின் வழிநின்று பழங்காலத் தமிழ்மொழியின் எழுத்து வடிவம் பற்றியும், ஒலியனியல், உருபனியல் (சொல்லியல்), தொடரியல் ஆகியன பற்றியும் காண்பதே இப்பாடத்தின் நோக்கம். |