1.5 தொடரியல்

குகைக் கல்வெட்டுகளில் சொற்றொடர் அல்லது வாக்கிய அமைப்பு தமிழ் இலக்கண முறைப்படி அமைந்துள்ளது. எழுவாய்க்கும் பயனிலைக்கும் இடையே உள்ள இயைபு (Concord), சொற்களின் வரன்முறை (Word Order) குறித்துத் தொல்காப்பியர் கூறும் விதிகளின்படி வாக்கிய அமைப்புக் காணப்படுகிறது. மேலும் மொழிநூலார் வாக்கிய வகைகளில் ஒன்றாகக் குறிப்பிடும் பெயர்த் தொடர் வாக்கியங்களும் (Substantive Sentences) காணப்படுகின்றன.

1.5.1 இயைபு

எழுவாய்க்கும் பயனிலைக்கும் இடையே திணை, பால், எண், இடம் ஆகியவற்றில் இயைபு இருக்க வேண்டும் என்பர் தொல்காப்பியர். எழுவாய் என்ன திணை, பால், எண், இடம் காட்டுகிறதோ, அவற்றையே அது கொண்டு முடியும் பயனிலையும் காட்ட வேண்டும். இம்முறைப்படி வாக்கியங்கள் அமைந்திருப்பதைக் குகைக் கல்வெட்டுகளில் காணலாம்.
 

(எ.டு) ஆரிதன் கொட்டுபித்தோன் (ஆரிதன் செதுக்குவித்தான்)
நிகமத்தோர் கொட்டிஓர் (வணிகர் செதுக்கினர்)

1.5.2 சொற்கள் வரன்முறை

வாக்கியத்தில் சொற்கள் எம்முறையில் தொடர்ந்து நிற்க வேண்டும் என்பது பற்றித் தொல்காப்பியர் பல விதிகள் கூறியுள்ளார். குகைக் கல்வெட்டுகளில் காணப்படும் வாக்கியங்கள் தொல்காப்பிய விதிகளுக்கு ஒப்ப அமைந்துள்ளன.

  • சிறப்புப் பெயரும் இயற்பெயரும்
  • ஒருவர்க்கு இயற்பெயரோடு சிறப்புப் பெயர் இருக்குமாயின் அவ்விரண்டையும் சேர்த்து வாக்கியத்தில் கூறும்போது சிறப்புப் பெயரை முன்னும் இயற்பெயரைப் பின்னும் கூற வேண்டும்.
     
    (எ.டு) கணியன் இயக்குவன்
    வேண் கோசிபன்
    உபாசன் போத்தன்

  • இடப் பெயர்களும் இயற்பெயரும்
  • ஊர், நகரம், நாடு பற்றிய இடப் பெயர்களும் இயற்பெயருக்கு முன்னர் வர வேண்டும். வெள்ளடை, பாகனூர், எருக்கோட்டூர், எவோமி நாடு, தெங்கு (நாடு), ஈழம், குன்றத்தூர், மதுரை, குமட்டூர் போன்ற இடப் பெயர்கள் பலவும் குகைக் கல்வெட்டுகளில் உள்ளன. இவை இயற்பெயருக்கு முன்னர் அடையாக வரக் காணலாம்.
     
    (எ.டு) எருக்கோட்டூர் ஈழக் குடும்பிகன்
    பாகனூர் போதாதன்

    1.5.3 பெயர்த் தொடர் வாக்கியங்கள்

    குகைக் கல்வெட்டுகளில் உள்ள வாக்கியங்கள் கருத்து (Topic), கருத்து விளக்கம் (Comment) என்ற அமைப்பில் உள்ள பெயர்த்தன்மை கொண்ட வாக்கியங்களாகும் என்று தெ. பொ. மீனாட்சி சுந்தரனார் குறிப்பிடுகிறார். (தமிழ்மொழி வரலாறு, ப.65.) இவ்வாக்கியங்களில் வழக்கமாக எழுவாய் குகையை வெட்டியவர் யார் அல்லது அதைத் தானமாக வழங்கியவர் யார் என்பதைக் குறிப்பிடும். பயனிலை கொட்டியோர் அல்லது கொட்டுவித்தோர் என்பதைத் தெரிவிக்கும்.

    (எ.டு) ஆரிதன் கொட்டுபித்தோன்

    1.5.4 மாதிரி வாக்கியம்

    குகைக் கல்வெட்டு மொழியின் வாக்கிய அமைப்பை விளங்கிக் கொள்வதற்கு மாதிரி வாக்கியம் ஒன்றைக் காண்போம்.
     
    வேண் கோசிபன்
    கொட்டுபித்த கல் காஞ்சணம்

    இவ்வாக்கியத்தில் வரும் வேண் என்பது குறுநிலத் தலைவர் குழுவின் பெயர். கோசிபன் என்பது காசியப என்ற வடமொழிப் பெயர்ச் சொல்லின் தமிழாக்க வடிவம். கொட்டுபித்த என்பது பிறவினைப் பெயரெச்சம். காஞ்சணம் என்பது பெயர்ப் பயனிலை (காஞ்சணம் - இருக்கை) கல் என்பது அதன் அடைமொழியாகிறது. எனவே இவ்வாக்கியத்தின் பொருள்,
     
    இது வேண் வகுப்பைச் சேர்ந்த
    கோசிபன் என்பவனால் கொட்டுவிக்கப்பட்ட
    கல்லால் ஆகிய இருக்கை

    என்பதாகும்.