1.6 தொகுப்புரை

குகைக் கல்வெட்டுகள் பழங்காலத் தமிழ்மொழி வரலாற்றை அறிய உதவும் தலைசிறந்த சான்றாக விளங்குகின்றன. பழங்காலத்தில் இந்தியா முழுவதிலும் பேசப்பட்ட பல்வேறு மொழிகளுக்கும் பிராமி என்ற ஒரே எழுத்து வடிவமே வழக்கில் இருந்தது. வட இந்தியாவில் வழங்கிய வடபிராமிக்கும் தமிழ்நாட்டில் குகைக் கல்வெட்டுகளில் வழங்கிய தென்பிராமிக்கும் இடையே வரி வடிவிலும் ஒலியமைப்பிலும் வேறுபாடுகள் உள்ளன. குகைக் கல்வெட்டுகள் பண்டைத் தமிழின் ஒலி, சொல், தொடர் ஆகியவற்றின் அமைப்பை அறிந்து கொள்ள மிகவும் உதவி புரிகின்றன. பழங்காலத் தமிழில் பிறமொழிச் சொற்கள் கலக்கும்போது, அச்சொற்கள் தமிழ்மொழியின் ஒலியமைப்பிற்கு ஏற்ப மாற்றியே ஏற்றுக் கொள்ளப்பட்டதைக் குகைக் கல்வெட்டுகள் காட்டுகின்றன. பழங்காலத்தில் தமிழ் மக்கள் பேசிய பேச்சுத் தமிழின் போக்கை ஓரளவு அறிந்து கொள்ளக் குகைக் கல்வெட்டுகள் மட்டுமே உதவுகின்றன.

தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1.
மொழியின் அமைப்பை மொழிநூலார் எத்தனை வகைப்படுத்தி ஆராய்வர்? அவை யாவை?
2.
குகைக் கல்வெட்டுகளில் ஆய்த எழுத்துக் காணப்படுகிறதா?
3.
மொழிநூலார் மெல்லினத்தை எவ்வாறு அழைப்பர்?
4.
வெடிப்பொலிகளில் மொழிக்கு முதலில் வருவன யாவை?
5.
சகரமெய் அகர உயிரோடு கூடி மொழி முதலாவது தொல்காப்பியர்க்கு உடன்பாடா?
6.
மெய்ம்மயக்கம் எத்தனை வகையில் காணப்படுகிறது? அவை யாவை?
7.
மொழிக்கு முதலில் மெய்ம்மயக்கம் உண்டா?
8.
மொழி இறுதி மூக்கொலி இழப்பிற்குச் சான்று தருக.
9.
தமிழில் எழுவாய்க்கும் பயனிலைக்கும் இடையே எவ்வெவற்றில் இயைபு இருக்க வேண்டும்?