2.5 ஒலிகளின் வருகை முறை தொல்காப்பியர், தம்முடைய காலத்தில் உலக வழக்கிலும் செய்யுள் வழக்கிலும் வழங்கிய சொற்களை எல்லாம் நன்கு ஆராய்ந்தார். அச்சொற்களில் எந்தெந்த எழுத்துகள் முதலில் வருகின்றன. எந்தெந்த எழுத்துகள் இறுதியில் வருகின்றன என்பனவற்றை வரையறுத்துக் கூறியுள்ளார். சொற்களுக்கு இடையில் எழுத்துகள், குறிப்பாக மெய்யெழுத்துகள் எவ்வாறு ஒன்றோடு ஒன்று மயங்கி (சேர்ந்து) வருகின்றன என்பது பற்றியும் விரிவான விதிகளைக் கூறியுள்ளார். இவ்வாறு சொல்லுக்கு முதலிலும், இறுதியிலும், இடையிலும் வரும் எழுத்துகள் பற்றி அவர் எழுத்ததிகாரத்தில் வரையறுத்துக் கூறிய விதிகள், அவர் காலத் தமிழின் ஒலியமைப்பைத் தெளிவாகக் காட்டுகின்றன.
மேற்கூறிய கருத்துகளை நோக்கின் தொல்காப்பியர் காலத்தில் 94 எழுத்துகள் மட்டுமே மொழிக்கு முதலில் வந்துள்ளன என்பது அறியப்படும். இதைக் கீழ்வரும் பட்டியல் காட்டும்.
தொல்காப்பியர் மொழி இறுதியில் வரும் உயிர் எழுத்துகளையும், மெய்யெழுத்துகளையும் எடுத்துக் காட்டியுள்ளார்.
மொழி இடையில் ஒரு மெய் தன்னோடும் பிற மெய்யோடும் சேர்ந்து வருவதை மெய்ம்மயக்கம் என்று தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். க ச த ப எனும் நான்கு மெய்களும் தம்மொடு தாம் மட்டுமே மயங்கி வரும் ; பிற மெய்களோடு மயங்கி வாரா. ர, ழ எனும் இரு மெய்களும் பிற மெய்களோடு மட்டுமே மயங்கி வரும் ; தம்மோடு தாம் மயங்கி வாரா. ஏனைய பன்னிரண்டு மெய்களும் தம்மொடு தாமும், தம்மொடு பிறவுமாக மயங்கி வரும். ஆகவே தம்மொடு தாம் மயங்குவன ர ழ நீங்கிய பதினாறு மெய்களும் ஆகும். இம்மயக்கத்தைத் தொல்காப்பியர் உடனிலை எனக் குறிப்பிடுகிறார். தம்மொடு பிற வந்து மயங்குவன க ச த ப நீங்கிய பதினான்கு மெய்களும் ஆகும். இம்மயக்கத்தை மெய்ம்மயக்கு எனக் குறிப்பிடுகிறார். ஒரு மெய்யின் முன்னர் அதே மெய் மயங்கி வருதல் உடனிலை என்பதை மேலே கண்டோம். இதை நன்னூலார் உடனிலை மெய்ம்மயக்கம் என்று குறிப்பிடுவார். (எ.டு)
ஒரு மெய்யின் முன்னர் அம்மெய் அல்லாத பிற மெய்கள் மயங்கி வருவது மெய்ம்மயக்கு ஆகும். இதனை நன்னூலார் வேற்றுநிலை மெய்ம்மயக்கம் எனக் குறிப்பிடுகிறார். (எ.டு)
மேலே கூறப்பட்டவை இரண்டு மெய்களின் மயக்கம் பற்றியாகும். மொழி இடையில் மூன்று மெய்கள் அடுத்தடுத்துச் சேர்ந்து வருவதையும் தொல்காப்பியர் எடுத்துக் காட்டுகிறார். ய, ர, ழ ஆகிய மூன்று மெய்களின் முன்னர், க, ச, த, ப ஆகிய நான்கு மெய்கள் இரட்டித்து வரும்.
ங, ஞ, ந, ம ஆகிய நான்கு மெய்கள் இரட்டித்தும், தமக்கு இனமான வல்லின மெய்களாகிய க, ச, த, ப ஆகிய நான்கோடு முறையே சேர்ந்தும் வரும்.
இதுகாறும் தொல்காப்பியர் தமிழ் எழுத்துகளின் மொழி முதல், இடை, இறுதி வருகை முறை பற்றிக் கூறியவற்றைப் பார்த்தோம். இவ்விதிகள், தமிழ் மொழியின் அமைப்பை அவர் காலத்திற்குப் பின்பும் பன்னெடுங் காலமாகச் சிதைந்து விடாது காத்து வந்துள்ளன. தமிழில் பிறமொழிச் சொற்கள், குறிப்பாக வடமொழிச் சொற்கள் வந்து கலக்கும்போது அவற்றை அப்படியே ஏற்றுக்கொள்ள இவ்விதிகள் இடம் தரவில்லை. சான்றாக, க, ச, த, ப ஆகிய மெய்களை அடுத்து அம்மெய்களே வரவேண்டும்; பிற மெய்கள் வருதல் கூடாது என்பது தொல்காப்பியர் வரையறுத்துக் கூறிய விதி. ஆனால் தொல்காப்பியர் காலத்திற்குப் பின்பு சங்க காலம் தொட்டுத் தோன்றிய பிற்காலத் தமிழ் இலக்கியங்களில் வாக்யம், அக்ரமம், சுக்லம், வச்ரம், வாத்யம் போன்ற வடமொழிச் சொற்கள் வந்து கலந்தன. இச்சொற்களின் இடையில் க்ய், க்ர், க்ல், ச்ர், த்ய் என்ற மெய்ம்மயக்கங்கள் காணப்படுகின்றன. இவை தொல்காப்பியரின் விதிக்குப் புறம்பானவை. எனவே இச்சொற்கள் அவ்விலக்கியங்களில் தொல்காப்பியர் கூறிய தமிழ் ஒலியமைப்பிற்கு ஏற்பக் கீழ்க் கண்டவாறு மாற்றி ஏற்றிக் கொள்ளப்பட்டன.
இதுபோலத் தமிழ் மொழியின் ஒலியமைப்பைக் காலந்தோறும் தனித் தன்மையுடன் பேணிக் காப்பதற்கு ஏற்ற விதிமுறைகளைத் தொல்காப்பியர் வகுத்திருப்பது தனிச் சிறப்பாக உள்ளது. |