3.1 சொல்லின்
இலக்கணம்
தொல்காப்பியர் சொல்லைக்
கிளவி, சொல், மொழி
என்னும் மூன்று சொற்களால் குறிப்பிடுகிறார். சொல் எவ்வாறு
அமைகிறது? அது எவ்வாறு பாகுபடுத்தப்படுகிறது? என்பன பற்றித்
தொல்காப்பியர் கூறியுள்ள இலக்கணக் கருத்துகளோடு இன்றைய
மொழிநூலார் கூறும் கருத்துகள் ஒன்றியுள்ளன.
3.1.1
தொல்காப்பியமும் உருபனியலும்
சொற்கள் உருவாகும் முறையைத்
தொல்காப்பியர்
விளக்குகிறார். சொல் ஓர் எழுத்தினாலும்,
இரண்டு
எழுத்தினாலும் அதற்கு மேற்பட்ட பல எழுத்துகளினாலும்
அமையும் என்று குறிப்பிடுகிறார். (தொல். எழுத்து. 45) இவ்வாறு
எழுத்துகள் இணைவதால் அமையும் சொல் பொருள் தந்தால்தான்
சொல் எனப்படும் என்பதை,
எல்லாச்
சொல்லும் பொருள் குறித்தனவே
(தொல்.சொல்.
157)
|
என்று தெளிவுபடுத்துகிறார். எல்லாச்
சொல்லும் என்று கூறியது
பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என்னும்
நால்வகைச் சொற்களையுமாம்.
எழுத்தினால்
ஆகியது சொல்; அது பொருள் தருவது என்று தொல்காப்பியர் கூறியதை இன்றைய மொழிநூலார்
உருபனுக்குக் (சொல்லுக்கு) கூறும் விளக்கத்தோடு தொடர்புபடுத்திக் காண்போம்.
உருபன்
உருவாதல்
ஓர் ஒலியன் தனித்து நின்றோ, ஒன்றுக்கு மேற்பட்ட
ஒலியன்கள் சேர்ந்து நின்றோ பொருள் தருமாயின் அது உருபன்
(Morpheme) எனக்
கூறப்படும்.
(எ.டு) ஆ,
ஈ - தனி ஒலியன் உருபனாதல். வா,
போ,
செய், மலர்,
மரம் - ஒலியன்கள் இணைந்து
உருபனாதல்
ஆ, ஈ என்பன
தொல்காப்பியர் குறிப்பிடும் ஓரெழுத்து ஒரு
மொழியில் அடங்கும். வா, போ ஆகியவற்றை
மொழிநூலார்
இரண்டு ஒலியன்களால் ஆகிய உருபன்களாகக் கொள்வர்.
ஆனால் தொல்காப்பியர் இவற்றை ஓரெழுத்து ஒரு
மொழிகளாகவே கொள்வார்.
உருபன் பொருள் தருதல்
மொழிநூலார் உருபன்களைத் தனி
உருபன்கள் (Free
morphemes), கட்டு உருபன்கள் (Bound morphemes) என
இரு வகையாகப் பகுப்பர். இவை இரண்டுமே பொருள் உடையன.
ஒரு மொழியில் தாமே தனித்து வந்து
பொருளோடு
இயங்குவனவற்றைத் தனி உருபன்கள் என்று கூறுவர். பொருள்
உடையனவாயினும் தனித்து இயங்கும் ஆற்றல் இல்லாமல் வேறு
தனி உருபன்களோடு இணைந்து இயங்குவனவற்றைக் கட்டு
உருபன்கள் என்று கூறுவர்.
(எ.டு) மலர், மலரை, மலரான், மலர்க்கண்.
இச்சொற்களில் வரும்
மலர் என்பது தனி உருபன். அது தனியே
நின்று பொருள் தருகிறது. அதனோடு இணைந்து இயங்கும் ஐ,
ஆன், கண் என்னும் வேற்றுமை உருபுகள் கட்டு உருபன்கள்.
இவை தமக்கெனத் தனிப் பொருள் உடையன. ஆயினும் தனித்து
வழங்கும் ஆற்றல் இல்லாதவை. ஆகவே மலர் என்ற தனி
உருபனோடு (பெயரோடு) சேர்ந்து வழங்குவதைக் காணலாம்.
(எ.டு) செய்தான்
இச்சொல்லில் செய்
என்பது வினை அடிச்சொல். இது தனி
உருபன். இதனோடு இணைந்து வந்துள்ள த் என்பது
இறந்த
காலம் காட்டும் இடைநிலை. ஆன்என்பது
ஆண்பால் காட்டும்
விகுதி. இவை இரண்டும் கட்டுருபன்கள். எனவே செய்தான்
என்பது ஒரு தனி உருபனும் இரண்டு கட்டு உருபன்களும்
இணைந்த ஒரு சொல்லாகும்.
இவ்வாறு ஓர் உருபன் தனித்தோ
ஒன்றுக்கு மேற்பட்ட
உருபன்கள் தொடர்ந்தோ பொருள் உணர்த்தி வரும்போது அவை
சொற்கள் என அழைக்கப்படுகின்றன என்று மொழிநூலார் கூறுவர்.
உருபுகள் இணைந்து பெயர்ச்சொல்லாகவும் வினைச்சொல்லாகவும்
பொருள் தந்து இயங்குவதைத்தான் தொல்காப்பியரும்
சொல்லதிகாரத்தில் விளக்குகிறார்.
தமிழில் உள்ள வேற்றுமை உருபுகள்,
காலம் காட்டும்
இடைநிலைகள், விகுதிகள் முதலியவற்றை மொழிநூலார்
கட்டுருபன்கள் என்று கூறுகின்றனர். தொல்காப்பியர் இவற்றை
இடைச்சொற்கள் என்று குறிப்பிடுகின்றார்.
இடைச்சொற்கள்
பொருள் உடையன : ஆனால் தனித்து வழங்கும் ஆற்றல்
இல்லாதவை ; பெயர், வினைகளைச் சார்ந்து வழங்கும்
இயல்பினை உடையன என்று இடையியலில் கூறுகிறார். எனவே
இக்கால மொழிநூலார் உருபன், உருபனியல் பற்றித் தந்துள்ள
விளக்கங்கள் தொல்காப்பியர் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே
தெளிவாகச் சொன்ன இலக்கணங்களை அடியொற்றியே
அமைந்துள்ளன என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.
3.1.2
உலக மொழிகளில் சொல் பாகுபாடு
உலக மொழிகள் அனைத்திலும் பெயர்ச்
சொல், வினைச்
சொல் என்ற சொல் பாகுபாடு உள்ளது. தமிழைப் போலவே
பழைமை வாய்ந்த மொழி கிரேக்க மொழி. இம்மொழியில் உள்ள
சொற்களை, பிளேட்டோ (கி.மு. 427-347) என்ற அறிஞர் பெயர்,
வினை என்று இரண்டாகப் பகுத்தார். அவரை அடுத்துவந்த
அவருடைய மாணவர் அரிஸ்டாடில் (கி.மு. 384-322) என்பவர்
பெயர், வினை, முன்னிடைச் சொல் (Preposition),
இணைப்புச்
சொல் (Conjunction) என நான்கு வகையாகச்
சொல்லைப்
பகுத்தார். வடமொழியின் மிகப் பழைய இலக்கண நூல் நிருக்த
நிகண்டு என்பது. இது கி.மு. எட்டாம் நூற்றாண்டில் தோன்றியது
என்பர். இந்நூலை இயற்றிய யாஸ்கர் என்பாரும்
சொல்லைப்
பெயர் (நாமம்), வினை (ஆக்கியாதம்), முன்னொட்டுச் சொல்
(உபசருக்கம்), முன் அல்லது பின் இணைவுச் சொல் (நிபாதம்)
என்று நான்கு வகையாகவே பகுத்துள்ளார். கி.மு. மூன்றாம்
நூற்றாண்டில் வாழ்ந்த தொல்காப்பியரும் சொல்லை நான்கு
வகையாகப் பகுத்துள்ளார். உலகில் உள்ள எல்லா மொழிகளிலும்
பெயரும், வினையுமே முதன்மைச் சொற்களாகக் கருதப்படுகின்றன.
3.1.3
தொல்காப்பியத்தில் சொல் பாகுபாடு
தொல்காப்பியர் சொல்லை முதலில்
பெயர்ச்சொல்,
வினைச்சொல் என இரண்டாகப் பிரிக்கிறார். பின்னர்,
அவ்விரண்டையும் சார்ந்து வழங்கும் இடைச்சொல், உரிச்சொல்
ஆகிய இரண்டையும் சேர்த்துச் சொல் நான்கு வகைப்படும்
என்கிறார். இதனை,
சொல்
எனப்படுப பெயரே வினை என்று
ஆயிரண்டு
என்ப அறிந்திசி னோரே
|
|
இடைச்சொல்
கிளவியும் உரிச்சொல் கிளவியும்
அவற்று வழி மருங்கின் தோன்றும்
என்ப
(தொல்.சொல். 160, 161) |
என்ற நூற்பாக்களில் குறிப்பிடுகிறார்.
(அறிந்திசினோர்
= அறிந்தோர்; அவற்றுவழி மருங்கின்
= அவற்றைச் சார்ந்து)
பெயரும் வினையும் மொழியின்
அடிப்படைச் சொற்கள்
ஆதலானும், தனித்து இயங்கும் ஆற்றல் உடையன ஆதலானும்
தொல்காப்பியர் அவற்றை முதலில் கூறினார். தனித்து இயங்கும்
ஆற்றல் இல்லாதனவும் பெயர் வினைகளையே சார்ந்து வழங்கும்
இயல்பு உடையனவும் ஆகிய இடைச்சொல்லையும்
உரிச்சொல்லையும் பின்பு கூறினார்.
|