3.2 பெயர்ச்சொல்
உலக மொழிகள் பலவற்றிலும்
காணப்படும் சொல்
பாகுபாட்டில் பெயரே முதலில் கூறப்படுகிறது. தொல்காப்பியரும்
தமிழ்ச் சொல் பாகுபாட்டில் பெயரை முதலாவதாக வைத்துக்
கூறுகிறார்.
3.2.1
பெயர்ச்சொல் இலக்கணம்
பெயர்ச்சொல் ஒரு பொருளைக்
குறிப்பது ; திணை, பால்,
எண், இடம் காட்டுவது; வேற்றுமை உருபுகளை இறுதியில் ஏற்று
வருவது; வினையால் அணையும் பெயர் ஒன்றைத் தவிர ஏனைப்
பெயர்கள் காலம் காட்டா. இவையே தொல்காப்பியர் பெயர்ச்
சொல்லுக்குக் கூறும் இலக்கணங்கள். (தொல்.சொல். 157,162,71)
மொழிநூலார் பெயர்ச்சொல் பொருளைக்
குறிப்பது எனவும்,
திணை, பால், எண், இடம் உணர்த்துவது எனவும், வேற்றுமை
உருபை ஏற்பது எனவும் கூறியுள்ள வரையறைகள் இங்கு
ஒப்பிடத்தக்கன.
3.2.2
திணை அடிப்படையில் பெயர்ப் பாகுபாடு
தமிழில் பெயர்ச்சொற்கள் திணை,
பால் காட்டும். எனவே
தொல்காப்பியர் பெயர்களைத் திணை அடிப்படையில்
உயர்திணைப் பெயர், அஃறிணைப் பெயர், விரவுப் பெயர் என
மூவகையாகப் பிரிக்கிறார். இவற்றுள் விரவுப் பெயர் என்பது
உயர்திணைக்கும் அஃறிணைக்கும் பொதுவாக வழங்கும் பெயர்கள்
ஆகும். அவர் காலத் தமிழில் சாத்தன், சாத்தி ஆகிய சொற்கள்
உயர்திணையில் முறையே ஒருவனையும், ஒருத்தியையும் குறிக்க
வழங்கின. அதே சொற்கள் அஃறிணையில் முறையே எருதையும்
பசுவையும் குறிக்கவும் வழங்கின.
(எ.டு)
சாத்தன் வந்தான்
சாத்தன் வந்தது
சாத்தி வந்தாள்
சாத்தி வந்தது
இவ்வாறு இருதிணைக்கும் பொதுவாக
வழங்கும் பெயர்களே
விரவுப் பெயர்கள் எனப்பட்டன.
3.2.3
பதிலிடு பெயர்கள்
தொல்காப்பியர், உயர்திணைப்
பெயர்கள், அஃறிணைப்
பெயர்கள், விரவுப் பெயர்கள் பலவற்றைப் பெயரியலில்
குறிப்பிடுகிறார். அவர் குறிப்பிடும் சுட்டுப் பெயர்கள்.
வினாப்
பெயர்கள், மூவிடப் பெயர்கள், எண்ணுப் பெயர்கள்
போன்றவற்றை இக்கால மொழிநூலார் பதிலிடு
பெயர்கள்
(Pronouns) என்று குறிப்பிடுகின்றனர்.
பதிலிடு பெயர் என்றால்
என்ன என்பதைச் சற்று விளக்கமாகக் காண்போம்.
ஒரு பொருளை நேரடியாகக் குறிக்கும்
பெயராக
அமையாமல் அப்பெயருக்குப் பதிலாக (substitute)
நின்று
அப்பொருளை உணர்த்தும் பெயரைப் பதிலிடு பெயர்
என்று
மொழிநூலார் அழைக்கின்றனர்.
கண்ணன்
வந்தான் என்பது ஒரு தொடர். இதை அவன்
வந்தான் என்றும் கூறலாம். கண்ணன் என்ற பெயர் நேரடியாக
ஒரு பொருளைக் குறிப்பதால் அதைத் தனிப்பெயர் (proper
noun) என்று மொழிநூலார் கூறுகின்றனர். அவன்
என்பது
பொருளை நேரடியாகக் குறிக்காமல் அப்பொருளைக் குறிக்கும்
கண்ணன் என்ற பெயருக்குப் பதிலாக வழங்குகிறது. எனவே
அவன் என்ற பெயரைப் பதிலிடு பெயர்
என்று கூறுகின்றனர்.
இனித், தொல்காப்பியர் குறிப்பிடும் பதிலிடு பெயர்களைப்
பற்றிக் காண்போம்.
சுட்டு,
வினாப் பெயர்கள்
தொல்காப்பியர் காலத் தமிழில்
அ, இ, உ என்ற மூன்றும்
சுட்டெழுத்துகளாக வழங்கின. இவற்றுள் அகரம் சேய்மையில்
உள்ள பொருளைச் சுட்டும் ; இகரம் அண்மையில் உள்ளதைச்
சுட்டும் ; உகரம் இரண்டுக்கும் நடுவில் உள்ளதைச் சுட்டும். யா
என்பது வினா எழுத்தாக வழங்கியது. இவை நான்கும் சுட்டு,
வினா அடிச்சொற்கள் ஆகும். இவற்றோடு அன், அள், அர்
முதலான பால் காட்டும் விகுதிகள் சேர்வதால் சுட்டு, வினாப்
பெயர்கள் உருவாகின்றன. தொல்காப்பியர் குறிப்பிடும் சுட்டு,
வினாப் பெயர்கள் வருமாறு :
பால் |
அ
|
இ
|
உ |
யா
|
ஆண்பால்
பெண்பால்
பலர்பால்
ஒன்றன்பால்
பலவின்பால்
|
அவன்
அவள்
அவர்
அது
அஃது
அவை
அவ்
|
இவன்
இவள் இவர்
இது இஃது
இவை
இவ் |
உவன்
வள் உவர்
உது உஃது
உவை
உவ் |
யாவன்
யாவள்
யாவர் யாது
-
யாவை யா |
(அவ், இவ், உவ் என்பன அவை,
இவை, உவை என்ற
சொற்களைப் போலப் பன்மைப் பொருளில் வழங்கின.)
மேற்காட்டிய அனைத்துப் பெயர்களும்
பதிலிடு பெயர்களாக
வருவனவே என்பதை அறிவீர்கள்.
தமிழில் சுட்டு, வினாப்
பெயர்கள் ஒழுங்குபட அமைந்துள்ள
முறையை டாக்டர் கால்டுவெல் மிகவும்
பாராட்டுகின்றார்.
இத்தகைய பண்பட்ட ஒழுங்கு முறையையும் இவற்றிற்கு
இணையான சொல் வடிவங்களையும் உலக மொழிகள் எதிலும்
காண இயலாது என்று அவர் வியந்து கூறுகின்றார். (Caldwell,
A
Comparative Grammar of the Dravidian Languages, P.422.)
மூவிடப் பெயர்கள்
தன்மை, முன்னிலை, படர்க்கை
என இடப்பெயர் மூன்று. கீழ்க்காணும் பட்டியலில் இடப்பெயர்களையும் அவை உணர்த்தும்
திணை, பால் ஆகியவற்றையும் காணலாம்.
இடம் |
பெயர் |
திணை
|
பால் |
தன்மை
|
யான்
(ஒருமை)
|
உயர்திணை
|
ஆண்,
பெண் இருபாலுக்கும் பொது. |
|
யாம்,
நாம் (பன்மை)
|
உயர்திணை
|
தன்மையில்
பலரைக் குறிக்க
வரும். |
முன்னிலை
|
நீ ஒருமை)
|
இருதிணைக்கும்
பொது
|
இருதிணையிலும்
உள்ள
ஒருமைகளைக்
குறிக்க வரும்.
(ஆண்பால்,
பெண்பால்,
அஃறிணை
ஒருமை) |
|
நீயிர்
(பன்மை)
|
இருதிணைக்கும்
பொது |
இருதிணையிலும்
பன்மை குறிக்க
வரும். |
படர்க்கை
|
தான்
(ஒருமை)
|
இருதிணைக்கும்
பொது
|
இருதிணையிலும்
உள்ள
ஒருமைகளைக்
குறிக்க வரும்
(ஆண்பால்,
பெண்பால்,
ஒன்றன்பால்) |
|
தாம்
(பன்மை)
|
இருதிணைக்கும்
பொது
|
இருதிணையிலும்
பன்மை குறிக்க
வரும் (பலர்பால்,
பலவின்பால்) |
மேற்காட்டியவற்றிலிருந்து :
1.
|
இடப்பெயர்கள்
பால் பொதுவானவை என்பதையும். |
2.
|
முன்னிலை,
படர்க்கை இடப்பெயர்கள் இருதிணைக்கும் பொதுவானவை என்பதையும் |
3.
|
மூன்று
இடப்பெயர்களும் ஒருமை - பன்மை வேறுபாடு உடையவை என்பதையும் உணரலாம்.
|
படர்க்கைப்
பெயர்களில் மாற்றம்
தொல்காப்பியர் காலத்தில் தான்,
தாம் ஆகிய இரண்டும்
படர்க்கைப் பெயர்களாக வழங்கின. தான்
என்பது படர்க்கை
ஒருமையைக் குறிக்கும். தாம் என்பது படர்க்கைப்
பன்மையைக்
குறிக்கும்.
(எ.டு) தான் வந்தான், தான் வந்தாள்,
தான் வந்தது.
தாம் வந்தார், தாம் வந்தன.
இவ்விரு பெயர்களோடு, அவன்,
அவள், அவர், அது,
அவை முதலான ஐம்பால் காட்டும் சுட்டுப் பெயர்களும்
படர்க்கைப் பெயர்களாகத் தொல்காப்பியர் காலத்தில் வழங்கத்
தொடங்கின. சுட்டுப் பெயர்கள் படர்க்கைக்கு வழங்கத்
தலைப்படவும் தான், தாம் ஆகிய படர்க்கை வடிவங்கள் சிறிது
சிறிதாகச் செல்வாக்கு இழக்கத் தொடங்கின. காலப்போக்கில்,
இவ்விரு வடிவங்களும் படர்க்கை அல்லாத பெயர்களுடனும்
சேர்ந்து வலியுறுத்தல் பொருளைத் தரும் சொற்களாகி விட்டன.
(எ.டு) நான்தான் வந்தேன். நீதான்
வந்தாய்.
தன்மையில்
இருவகைப் பன்மை வடிவங்கள்
தொல்காப்பியர் தன்மை ஒருமைக்கு
யான் என்ற ஒரு
வடிவம் மட்டுமே கூறியிருக்க, பன்மைக்கு யாம், நாம்
என்ற
இரு வடிவங்களைக் கூறியுள்ளார். காரணம் தன்மைப் பன்மை
இருவகைப் பொருளை உணர்த்துகிறது. அவை இரண்டையும்
உணர்த்த இரு வேறு பன்மை வடிவங்கள் தேவைப்பட்டன.
தொல்காப்பியர்
காலத் தமிழில் நாம் என்பது தன்மையொடு
முன்னிலையாரையும் (கேட்போரையும்) உளப்படுத்தும் (உட்படுத்தும்) ன்மைப் பன்மையாக
வழங்கியது. நாம் என்பதற்கு நானும்
நீயும் என்பது பொருள். இதனை உளப்பாட்டுத் தன்மைப்
பன்மை என்று மொழிநூலார் கூறுவர். யாம் என்பது முன்னிலையாரை உளப்படுத்தாது
தன்மையாரை மட்டும் உணர்த்தும் தன்மைப் பன்மையாக வழங்கியது. இதனை உளப்படுத்தாத்
தன்மைப் பன்மை என்று கூறுவர்.
நாம்
வந்தாம் (யானும் நீயும்)
யாம் வந்தேம் (யானும் என்னைச் சேர்ந்தோரும்)
தற்காலத் தமிழில் இவ்விரு பன்மைகளை
உணர்த்த முறையே
நாம், நாங்கள் என்பன வழங்குகின்றன.
எண்ணுப்பெயர்கள்
(Numerals)
எண்ணுப் பெயர்கள் மூவிடப் பெயர்களைப்
போலப் பதிலிடு
பெயர்களாகவே வழங்குகின்றன.
யானை
வந்தது |
- நேர்ப் பெயர் |
அது
வந்தது |
-
படர்க்கைச் சுட்டுப்பெயர் |
ஒன்று
வந்தது |
- எண்ணுப்பெயர் |
‘ஒன்று’ என்பது இங்கு ‘யானை’
என்பதற்குப் பதிலிடு
பெயராக வந்தது.
ஒன்று, இரண்டு முதலான எண்ணுப் பெயர்களின்
அடியாகத்
தோன்றும் உயர்திணைப் பெயர்களைத் தொல்காப்பியர்
எண்ணியற் பெயர் என்று குறிப்பிடுகிறார் (தொல்.சொல். 167).
ஒன்று
|
- ஒருவன், ஒருத்தி,
ஒருவர் |
இரண்டு
|
- இருவர்
|
ஆறு |
- அறுவர்
|
3.2.4
அஃறிணையில் பன்மை உணர்த்தும் முறை
அஃறிணையில் ஒரு பொருளைக் குறிக்கும்
இயற்பெயர்ச்
சொற்களைப் பன்மை ஆக்குவதற்கு அச்சொற்களின் பின் கள்
விகுதி சேர்த்துக் கொள்வதும் உண்டு என்று தொல்காப்பியர்
கூறுகிறார். (தொல். சொல். 171)
(எ.டு)
|
யானை |
யானைகள்
|
|
மரம்
|
மரங்கள்
|
இவ்வாறு ‘சேர்த்துக் கொள்வதும் உண்டு’
எனக் கூறியிருப்பதை
நோக்கும்போது, அவர் காலத்தில் கள் விகுதி
சேர்க்காமலும்
அஃறிணைப் பன்மை உணர்த்தப்பட்டது என்பது தெரிய வருகிறது.
கள் விகுதியொடு வாராத அஃறிணை இயற்பெயர்கள்,
அவை
கொண்டு முடியும் வினைகளை வைத்து, ஒருமை, பன்மை
உணரப்படும் என்கிறார் தொல்காப்பியர்.
(எ.டு) |
யானை
வந்தது |
(ஒருமை)
|
|
யானை
வந்தன. |
(பன்மை)
|
இதுகாறும் தொல்காப்பியர் காலத்
தமிழில் பெயர்ச்சொல்
எவ்வாறெல்லாம் பாகுபடுத்தப் பட்டிருந்தது என்பதையும்
அப்பாகுபாட்டின் சிறப்புகளையும் அறிந்து கொண்டோம். இனிப்,
பெயர்ச்சொல்லின் தலையாய இலக்கணமாகிய வேற்றுமை பற்றிக்
காண்போம்.
|