4.5 தொடர் வகைகள் தொல்காப்பியர் காலத் தமிழில் பல்வகைத் தொடர்கள் வழங்கின. தொல்காப்பியர் அத்தொடர் வகைகள் எவை எவை என்பதைத் தொகுத்துக் கூறவில்லை. எனினும் அவர் சொல்லதிகாரத்தில் உள்ள வேற்றுமை இயல், விளி மரபு, வினையியல், எச்சவியல் ஆகியவற்றில் ஆங்காங்கே அவர் காலத்தில் வழங்கிய பல்வேறு தொடர்களைப் பற்றியும் அவற்றின் அமைப்புப் பற்றியும் கூறுகிறார். அவர் கூறியுள்ளனவற்றின் வழிநின்று அவர் காலத் தமிழில் கீழ்க்கண்ட தொடர் வகைகள் அமைந்திருந்தன எனலாம்.
இத்தொடர்கள் பற்றித் தொல்காப்பியர் கூறுவனவற்றைச் சுருக்கமாகக் காண்போம். தொல்காப்பியர் குறிப்பிடும் வேற்றுமைகள் எட்டு. அவற்றுள் முதல் வேற்றுமையே எழுவாய்த் தொடர் எனக் கூறப்படுகிறது. எழுவாயாக நிற்கும் பெயர், ஒரு பயனிலையைக் கொண்டு முடிவது எழுவாய்த் தொடர் எனப்படும். எழுவாயோடு ஏற்படும் உறவின் அடிப்படையில் பயனிலையை வகைப்படுத்தும் முயற்சியை இக்கால மொழிநூலார் பலரும் மேற்கொண்டுள்ளனர். தொல்காப்பியரும், எழுவாய் கொண்டு முடியும் பயனிலைகளை ஆறு வகையாகப் பாகுபடுத்துகிறார். இதனை,
என்ற வேற்றுமை இயல் நூற்பாவில் குறிப்பிடுகிறார். (பெயர்ப் பயனிலை = பெயர்ச்சொல் ஏற்கும் பயனிலை) (1) பொருண்மை சுட்டல் : பொருளினது உளதாம் தன்மையைச் சுட்டல். “கடவுள் உண்டு” (2) வியங்கொள வருதல் : வியங்கோள் வினை பயனிலையாக வருதல். “அரசன் வாழ்க” (3) வினைநிலை உரைத்தல் : தெரிநிலை வினை பயனிலையாக வருதல். “சாத்தன் வந்தான்” (4) வினாவிற்கு ஏற்றல் : வினாச் சொல் பயனிலையாக வருதல். “அவன் யார்?” (5) பண்பு கொள வருதல் : பண்பு அடியாகத் தோன்றும் குறிப்பு வினை பயனிலையாக வருதல். “கொற்றன் கரியன்” (6) பெயர் கொள வருதல் : பெயர்ச்சொல் பயனிலையாக வருதல். “சாத்தன் வணிகன்” பெயர் முன்னும் வினை பின்னுமாக வந்து அமைவது எழுவாய்த் தொடர். இதற்கு நேர் மாறாக வினை முன்னும் பெயர் பின்னுமாக வந்து அமைவது வினைமுற்றுத் தொடர். தமிழில் பெயர், வினை இரண்டுமே திணை, பால், எண், இடம் ஆகியன காட்டுவதால் இவ்வாறு மாறி அமைய முடியும். “வந்தான் சாத்தன்” தொல்காப்பியர் காலத் தமிழில் வினைமுற்றுத் தொடர்களே மிகுதியாக வழங்கின. தொல்காப்பியரும் தொல்காப்பியத்தில் எழுவாய்த் தொடர்களைக் காட்டிலும் வினைமுற்றுத் தொடர்களையே அதிகம் கையாண்டுள்ளார்.
இரண்டாம் வேற்றுமை முதல் ஏழாம் வேற்றுமை வரையுள்ள ஆறு வேற்றுமைகளுக்குத் தனித் தனி உருபுகள் உண்டு. உருபுகளுக்குத் தனித் தனிப் பொருள் உண்டு. வேற்றுமை உருபுகள் பெயர்ச்சொல்லின் இறுதியில் வந்து வினைகளையோ பெயர்களையோ கொண்டு முடிவது வேற்றுமைத் தொடர் எனப்படும். சில வேற்றுமைத் தொடர்களில் உருபுகள் தொக்கு (மறைந்து) நிற்பதும் உண்டு. வேற்றுமைத் தொடர் ஆறு வகைப்படும். அவை வருமாறு :
மேலே காட்டிய வேற்றுமைத் தொடர்கள் உருபு தொக்கு, மரம் வெட்டினான், மண்குடம், சாத்தன் வீடு என்பன போல வேற்றுமைத் தொகைகளாகவும் வரும். தொல்காப்பியர் கூறியுள்ள எட்டாம் வேற்றுமை, விளித்தொடர் என்று கூறப்படும். “நம்பீ வா” ஓர் எச்ச வினையும், அது கொண்டு முடியும் வினைச்சொல்லும் சேர்ந்த தொடர் வினையெச்சத் தொடர் எனப்படும். இது, தெரிநிலை வினையெச்சத் தொடர், குறிப்பு வினையெச்சத் தொடர் என இரண்டு வகைப்படும். தெரிநிலை எச்ச வினை, ஒரு வினையைக் கொண்டு முடியும் தொடர் தெரிநிலை வினையெச்சத் தொடர் எனப்படும். “உண்டு வந்தான்” குறிப்பு எச்ச வினை, ஒரு வினையைக் கொண்டு முடியும் தொடர் குறிப்பு வினையெச்சத் தொடர் எனப்படும். இதை இக்கால மொழிநூலார் வினையடைத் தொடர் என்று கூறுவர். “நன்கு பேசினான்” வினையெச்சங்கள் ஒரு தொடரில் பலவாக அடுக்கியும் வரலாம். அவ்வாறு வரினும் அவை ஒரு வினை கொண்டே முடிய வேண்டும் என்கிறார் தொல்காப்பியர். (தொல். சொல். 235) “உண்டு தின்று ஆடிப் பாடி மகிழ்ந்து வந்தான்” ஓர் எச்ச வினை, ஒரு பெயரைக் கொண்டு முடிவது பெயரெச்சத் தொடர் எனப்படும். இது, தெரிநிலைப் பெயரெச்சத் தொடர், குறிப்புப் பெயரெச்சத் தொடர் என இரு வகைப்படும். தெரிநிலை எச்ச வினையானது, ஒரு பெயரைக் கொண்டு முடிவது தெரிநிலைப் பெயரெச்சத் தொடர் எனப்படும். தெரிநிலைப் பெயரெச்சம் கொண்ட இடம், செயப்படு பொருள், காலம், கருவி, வினைமுதல் (எழுவாய்), வினைப்பெயர் ஆகிய ஆறு வகையான பெயர்களைக் கொண்டு முடியும் என்கிறார் தொல்காப்பியர் (தொல். சொல். 236)
குறிப்பு எச்ச வினையானது, ஒரு பெயரைக் கொண்டு முடிவது குறிப்புப் பெயரெச்சத் தொடர் எனப்படும். இதனை, இக்கால மொழி நூலார் பெயரடைத் தொடர் என்பர். “நல்ல மக்கள்” பேசுவோனுக்குத் திடீர் என்று ஓர் உணர்ச்சி ஏற்பட, வாக்கியத்தில் முன்னும் பின்னும் வெவ்வேறு சொற்களை அமைக்காமல், ஒரே சொல்லையே திரும்பத் திரும்ப இருமுறை, மும்முறை கூறுதல் உண்டு. இதுவே அடுக்குத் தொடர் எனப்படும். விரைவு துணிவு போன்ற பொருள் காரணமாக அடுக்குத் தொடர் அமையும் என்கிறார் தொல்காப்பியர் (தொல். சொல். 421, 424). “பாம்பு பாம்பு பாம்பு” |