பாடம் - 5
A05125 சங்ககாலத் தமிழ்

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

சங்ககாலத் தமிழ் தொல்காப்பியர் காலத் தமிழிலிருந்து பெரும்பாலும் மாறுபடாமலிருப்பதைக் கூறுகிறது.

மொழிமுதலில் வரும் எழுத்துகள் மொழி இறுதியில் வரும் எழுத்துகள், ஒலிமாற்றங்கள் போன்றவற்றில் சிறுசிறு மாற்றங்களே நேர்ந்துள்ளன என்பதை எடுத்துக் காட்டுகிறது.

இடப்பெயர்களில் மிகச்சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளமை சுட்டிக் காட்டப்படுகிறது. வினைச்சொற்களில் புதிய சில விகுதிகள் சேர்ந்துள்ளமை எடுத்துக் காட்டப்படுகிறது.

புதிய சில வினையெச்ச, பெயரெச்ச வாய்பாடுகள் சங்ககாலத்தில் தோன்றியமை எடுத்துக் காட்டப்படுகிறது.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

  • ஐ, ஒள எனும் கூட்டொலிகள் சங்க காலத்தில் எவ்வாறு எழுதப்பட்டன என அறிந்து கொள்ளலாம்.

  • சகரம், யகரம், ஞகரம் எனும் மெய்கள் மொழி முதலில் வருவதில் ஏற்பட்ட வளர்ச்சிகளைப் புரிந்து கொள்ளலாம்.

  • நான், நீர் எனும் இடப்பெயர் வடிவங்கள் சங்கத் தமிழில் புதியனவாக நுழைந்தன எனக் கண்டு கொள்ளலாம்.

  • அஃறிணைக்குரிய கள் விகுதி உயர்திணைப் பன்மைக்கும் பயன்படத் தொடங்கிய மாற்றத்தைக் கண்டு கொள்ளலாம்.

  • படர்க்கைக்குரிய அன் விகுதி, தன்மை ஒருமைக்கும் பயன்படத் தொடங்கியதனைக் காணலாம்.

  • வியங்கோள் வினைமுற்று படர்க்கையில் மட்டுமன்றித் தன்மை, முன்னிலை இடங்களிலும் வழங்கத் தொடங்கியதைக் காணலாம்.

பாட அமைப்பு