2.3 வினையியல் மாற்றங்கள்
மொழி காலத்திற்கு ஏற்ப மாறி வரும் இயல்புடையது.
இதனால் இலக்கண அமைப்பில் வினையிலும் பல மாற்றங்கள்
ஏற்படுவது இயல்பே. பல்லவர் காலமும் இதற்கு விதிவிலக்கல்ல.
அக்காலக் கட்டத்தில் வினையில் ஏற்பட்ட மாற்றங்கள்
சிலவற்றைக் கீழ்வருமாறு காணலாம்.
2.3.1 கால இடைநிலைகள்
வினையை உணர்த்துவது கால இடைநிலை என்பதால்
முதலில் இவ்விலக்கணக் கூற்றில் ஏற்பட்ட மாற்றம் குறித்துக்
காணலாம்.
இறந்தகாலம் அல்லாதன காட்டும் விகுதியான பகர வகர
மெய் வழக்கு சங்க காலத்திலேயே முடிந்து விட்டது எனலாம்.
நிகழ்காலம் காட்டத் தனி இடைநிலை ஆட்சிக்கு வந்ததே
பல்லவர் காலத்து மொழி வளர்ச்சி எனலாம்.
கின்று என்ற நிகழ்கால இடைநிலை முதன்முதலில்
பரிபாடலில்தான் வந்துள்ளது. அதன் பின்னர்ச் சிலம்பிலும்
மணிமேகலையிலும் அதன் வழக்குப் பெருகி, பின்பு பல்லவர்
காலத்தில் நிலைத்து விட்டது. தேவார, திருவாசகங்களில்
இவ்விடைநிலை பெருவழக்காக உள்ளது எனலாம்.
சான்று:
மயங்குகின்றேன் |
(திருவாசகம், 6 : 2) |
ஆழ்ந்திடுகின்றேன் |
(திருவாசகம், 81) |
அரற்றுகின்றேன் |
(திருவாசகம், 10) |
நிகழ்கால இடைநிலைகளான கின்று, கிறு தவிர
அப்பர்
தேவாரத்தில் ஆநின்று என்ற இடைநிலையையும் காணலாம்.
இறந்த கால இடைநிலை இன் பல்லவர் காலத்திலும்
பெருவழக்காக வழங்கக் காண்கிறோம்.
2.3.2 தன்வினை - பிறவினை
மூக்கொலியுடன் வரும் வினை வடிவங்கள்
தன்வினைகளாகவும் வெடிப்பொலிகளுடன் வரும் வடிவங்கள்
பிறவினைகளாகவும் கொள்ளப்படுகின்றன. ஆனால்
கல்வெட்டுகளில் இதற்கு மாறான போக்குக் காணப்படுகின்றது.
மூக்கொலியுடன் வரும் சில வடிவங்கள் பிறவினைகளாகக்
கொள்ளப்படுகின்றன.
சான்று:
தன்வினை |
பிறவினை |
அழுந்து |
அழுந்து |
தவிந்தன |
தவிந்தன |
இடைக்காலத் தொடக்கத்தில் தன்வினை பிறவினை
பாகுபாடு இல்லை என்பதைச் சான்றுகள் புலப்படுத்துகின்றன.
2.3.3 எதிர்மறை வினைமுற்று
• ‘கில்’ எனும் வடிவம்
எதிர்மறை வினைமுற்றை உணர்த்தப் பல்லவர் காலத்தில்
கில் என்னும் புதிய இடைச்சொல் பயன்படுத்தப்படுகிறது.
சான்று:
உண்கிலான்.
இந்த அடிப்படையில் கிற்பான் போன்ற உடன்பாட்டுச்
சொற்கள் உருவாக்கப் பட்டிருக்கலாம்.
இலாத, இலாது, இலான் போன்றவை செய்கு என்னும்
சொல்லின் ஈற்றில் உள்ள குகரத்துடன் சேர்ந்து செய்கிலான்
போன்ற எதிர்மறை வடிவத்தில் வருகின்றன. செய்+கு+இலான்
என எதிர்மறைப் பொருளில் வருகிறது. இலான் என்பது கில்
என்ற வேர்ச்சொல்லில் இருந்து வந்த தனி எதிர்மறைச் சொல்
என்று தவறாக எண்ணப்பட்டு விட்டது. அதனால் செய்+கிலான்
= செய்கிலான் என்று புணர்வதாகக் கருதிப் பல்லவர் காலத்தில்
வழங்கப்பட்டது.
• இல் என்னும் வடிவம் - வேறுபட்ட வடிவம்
திருவாசகத்தில் எதிர்மறை வழக்கு முற்றிலும் வேறுபட்ட
வடிவில் காணப்படுகின்றது.
சான்று:
பாடிற்றிலேன் |
(பாடவில்லை) |
தேடிற்றிலேன் |
(தேடவில்லை) |
ஓடிற்றிலேன் |
(ஓடவில்லை) |
சங்க காலத் தமிழில் இறந்தகாலத்தில் எதிர்மறையைக்
குறிக்க வினைமுற்றுகளுடன் அல் என்னும் குறிப்பு வினையைச்
சேர்த்துக் கூறுவர்.
சான்று:
அல்லேன் |
(பதிற்றுப்பத்து, 74 : 23) |
அல்லம் |
(புறநானூறு, 60 : 6) |
• ‘இல்’ என்னும் வடிவம் - இயல்பான வடிவம்
பல்லவர் காலத்தில் மேற்கூறப்பட்ட அல் வடிவம் மாறி
இல் என்ற வடிவம் வழக்குப் பெற்று விட்டது எனலாம்.
சான்று:
அறிந்திலேன் |
(அப்பர் தேவாரம், 5.91.8) |
அறிந்திலை |
(அப்பர் தேவாரம், 5.45.6) |
அறிந்திலன் |
(அப்பர் தேவாரம், 4.113.11) |
2.3.4 ஏவல் வினை
பல்லவர் காலத்தில் எதிர்கால இடைநிலைகளுடன் ஆய்
விகுதியை இணைத்து ஏவல் வினையானது
உருவாக்கப்பட்டுள்ளது.
சான்று:
தருவாய் |
(அப்பர் தேவாரம், 4.94.6) |
கண்டாய் |
(அப்பர் தேவாரம், திரு இராமேச்சுரம் 4.61.4) |
2.3.5 வினையெச்ச வாய்பாடுகள்
செய்யும், செய்யேல், செய போன்ற வாய்பாட்டு
வினையெச்சங்கள் பல பல்லவர் காலத்தில் பயன்படுத்தப்பட்டன.
• செய என்னும் வாய்பாட்டு வினையெச்சம்
சங்கத் தமிழில் அகர உருபை இறுதியாகக் கொண்ட செய
எனும் வாய்பாட்டு வினையெச்சத்தில் -ப்ப்- இடையில் வரும்.
சான்று:
(கொடு+ப்ப்+அ) |
= |
கொடுப்ப |
(சாய்+ப்ப்+அ) |
= |
சாய்ப்ப |
பல்லவர் காலத்திலோ இடையில் -க்க்- என்ற
வடிவம்
மிகுதியாக வருகிறது.
குறுந்தொகையில் முப்பத்தைந்து இடங்களில் -ப்ப்- வர,
ஓரிடத்தில் மட்டும் -க்க்- வருகிறது. ஆனால் அப்பர்
தேவாரத்திலோ -க்க்- என்ற வடிவம் ஐம்பத்து மூன்று
இடங்களில் வர, -ப்ப்- என்ற வடிவம் இருபத்தெட்டு
இடங்களில்தான் பயின்று வந்துள்ளது.
• செய்யும் என்னும் ஏவல் வினை
இவ்வடிவம் சங்க இலக்கியத்தில் மிகவும் குறைவாகக்
காணப்படுகிறது. பல்லவர் காலத்திலோ இவ்வழக்குப் பெருகி,
வழக்கில் நிலைத்து விட்டது எனலாம்.
சான்று:
காணும்
வாரும்
• செய்யேல் என்னும் ஏவல் வினை
செய்யேல் ஏவல் வினைகள் பல்லவர் காலத் தமிழில்
மிகுதியாக ஆங்காங்கே காணப்படுகின்றன.
சான்று:
அஞ்சேல் (சம்பந்தர்
தேவாரம், 1.130.1)
• செய்யாம் என்னும் உடன்பாட்டு வினைமுற்று
இவ்வடிவத்தில் உள்ள உடன்பாட்டு வினைமுற்று சங்க
இலக்கியத்தில் காணப்பட்டது. பல்லவர் காலத்திலோ முற்றிலும்
வழக்கொழிந்து விட்டது.
சான்று:
செல்லாம் |
பழைய வடிவங்கள் |
(பதிற்றுப் பத்து, 57:6) |
காணாம் |
(அகநானூறு, 110:19) |
2.3.6 துணை வினைகள்
திருநாவுக்கரசர் பாடிய தேவாரத்தில் அருள், இரு, ஒழி,
பெறு, இடு, போ, தா, செய், புரி, வை, விடு, உண், கொள்,
படு, கில் போன்றவை துணை வினைகளாகப்
பயன்படுத்தப்பட்டன.
சான்று:
அருள் |
- |
எழுந்தருளி |
இரு |
- |
நினைந்து இருந்தேன் |
பெறு |
- |
அடையப் பெற்றோம் |
கொள் |
- |
கண்டு கொண்டேன் |
போ |
- |
அழிந்து போனேன் |
ஒழி |
- |
எய்த்தொழிந்தேன் |
இடு |
- |
அழித்திட்டார் |
வை |
- |
எழுதியவை |
2.3.7 அனுமதி வினை
பல்லவர் காலப் பக்தி இலக்கியமான அப்பர் தேவாரத்தில்
இவ்வகையான வினைக்குப் பல சான்றுகள் உள்ளன. செய்யும்
வினைக்கு அனுமதி கொடுப்பது போல அமைக்கப்பட்டுள்ள
இவ்வகை வினைகள் தற்காலத் தமிழில் நிலைத்து விட்டன.
சான்று:
ஆள் |
- |
அலாம் |
> |
ஆளலாம் |
உய்ய |
- |
அலாம் |
> |
உய்யலாம் |
செய்ய |
- |
அலாம் |
> |
செய்யலாம் |
வினைச்சொற்களின் இலக்கண
அமைப்பு, பல்லவர் காலத்தில் மேற்கூறப்பட்ட பலவித மாற்றங்களை அடைந்து
தமிழ்மொழி வளர்ச்சியினை வெளிப்படுத்தி நிற்கிறது.
|