4.2
பெயரியல் மாற்றங்கள்
சோழர்காலத் தமிழைப் பழங்காலத் தமிழோடு ஒப்பிட்டுப்
பார்க்கும் போது தமிழ்மொழி அடைந்துள்ள மாற்றங்களை
நன்கு உணர முடியும். எழுத்தளவிலோ ஒலியளவிலோ
மொழியில் மாற்றங்கள் ஏற்படுவது போல, இலக்கண அளவிலும்
பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. பெயரியல் தொடர்பான
இலக்கண மாற்றங்களும் சோழர் காலத் தமிழில் குறிப்பிடத்
தக்கன. அவற்றைக் கீழே காண்போம்.
4.2.1 பதிலிடு பெயர்கள்
சோழர் காலத் தமிழில் பதிலிடு பெயர்கள்
சில
மாற்றங்களுக்கு உள்ளாகியுள்ளன. இப்பதிலிடு பெயர்கள் பெயர்
அல்லது பெயர்த் தொடருக்குப் பதிலாக வருவன. அவை
இலக்கண முறையில் பெயரோடு தொடர்புடையனவாய்
அமையும். ஆனால் பெயரைவிடப் பொதுவாகக் குறுகிய வடிவம்
பெற்று வரும்.
சோழர் காலத் தமிழில் நீம் (சீவக சிந்தாமணி
1932.3)
என்ற வடிவமும், நீங்கள் (அப்பர் தேவாரம், 4457) என்ற
இரட்டைப் பன்மையும் வழக்கத்திற்கு வந்துள்ளன.
சங்க கால அஃறிணை கள் விகுதி சங்கம்
மருவிய
காலத்தில் உயர்திணையுடன் வந்துள்ளது. அதுவும் இரட்டைப்
பன்மைச் சொற்களாக வருவதும் நோக்கத் தக்கது. சோழர்
காலத்திலோ பதிலிடு பெயர்களிலும் இப்பண்பினைக் காண
முடிகிறது.
சான்று:
யாங்கள், நாங்கள் |
தன்மைப் பன்மைப்
பதிலிடு பெயர்கள் |
எங்கள், நங்கள் |
நீங்கள், நீர்கள் |
முன்னிலைப் பன்மைப் பதிலிடு பெயர்கள் |
நுங்கள், உங்கள் |
தங்கள், தாங்கள் |
படர்க்கைப் பன்மைப்
பதிலிடு பெயர்கள் |
அவர்கள், இவர்கள் |
பெரிய புராணத்திலும், நாலாயிரத்
திவ்வியப்
பிரபந்தத்திலும் இத்தகைய மாற்றங்கள் மிகுந்து
காணப்படுகின்றன.
4.2.2 வேற்றுமை உருபுகள்
தமிழ் இலக்கண உலகில் வேற்றுமை என்னும் இலக்கணக்
கூறு தனக்கென ஒரு சிறப்பிடம் பெற்றுள்ளது. சொற்களில்
பெயர்ச் சொல்லோடு பொருந்தி வருவது. பெயர்ச் சொற்களின்
வழக்கைப் பொறுத்த மட்டிலும் வேற்றுமைக்குச் சிறப்பான இடம்
உள்ளது.
சோழர் கால இலக்கண நூலான நன்னூல் கீழ்வரும்
உருபுகளை வேற்றுமைக்குரிய உருபுகளாகக் கூறியுள்ளது.
மூன்றாம் வேற்றுமை |
- |
ஆல், ஆன், ஓடு, ஒடு |
ஐந்தாம் வேற்றுமை |
- |
இன், இல் |
ஆறாம் வேற்றுமை |
- |
அது, ஆது, அ |
ஏழாம் வேற்றுமை |
- |
கண், இடத்தில் முதலிய ஏறத்தாழ இருபத்தெட்டு உருபுகள் |
தொல்காப்பியர் ஆறாம் வேற்றுமை உருபாக அது
என்பதை மட்டுமே குறிப்பிடுகிறார். ஆனால் நன்னூலாரோ,
ஆறன் ஒருமைக்கு அதுவும் ஆதுவும்
பன்மைக்கு அவ்வும் உருபாம்
(நன்னூல்
: 300)
என்று ஒருமைக்கும், பன்மைக்கும் தனித்தனியே உருபுகளைக்
கூறியுள்ளார். இது சோழர் காலத்தில் ஏற்பட்ட மாற்றமாகும்.
வேற்றுமை மயக்கமாக ஐகார வேற்றுமை
குகர
வேற்றுமையாக மாறி வந்துள்ள போக்கைச் சோழர் காலத்தில்
காணமுடிகிறது.
சான்று:
வேந்தைச் சூடினாள் > வேந்துக்குச் சூடினாள்
4.2.3 வேற்றுமையின் சொல்லுருபுகள்
வேற்றுமை உருபுகளுக்குப் பதிலாக ஒரு சொல்லையே
உருபாகப் பயன்படுத்துவது சோழர் காலத்திலிருந்து
வழக்கத்திற்கு வந்தது என்று கூறலாம். நான்காம்
வேற்றுமையும், ஐந்தாம் வேற்றுமையும் பிற
வேற்றுமைகளைக் காட்டிலும் சற்று முன்னரே
சொல்லுருபுகளைப் பெற்று விட்டன.
நான்கா வதற்கு உருபாகும் குவ்வே
கொடைபகை நேர்ச்சி தகவு அது வாதல்
பொருட்டுமுறை ஆதியின் இதற்குஇதுஎனல் பொருளே
(நன்னூல்:
298)
என்று சோழர் காலத்தில் எழுதப்பட்ட நன்னூலிலேயே
பொருட்டு என்ற நான்காம் வேற்றுமைச் சொல்லுருபின் ஆட்சி குறிக்கப்பட்டுள்ளது
எனலாம்.
சான்று:
செல்லல் பொருட்டு
(செல்வதற்கு)
அதன் பொருட்டு (அதற்கு)
ஐந்தாம் வேற்றுமையுருபும், நின்று அல்லது இருந்து
என்ற
சொல்லுருபுகளால் உணர்த்தப் பெற்றது.
சான்று:
மலையினின்று வீழ்
அருவி (மலையின் வீழ் அருவி)
மரத்திலிருந்து வீழ்ந்தான் (மரத்தின் வீழ்ந்தான்)
இவ்வாறாகச் சோழர்கால இலக்கணக் கூறுகள் பெயரியல்
அளவில் பல மாற்றங்களைப் பெற்று இன்றைய பேச்சுத்
தமிழுக்கு அடித்தளம் இட்டன என்று கூறலாம்.
4.2.4 பால் காட்டும் விகுதிகள்
பெயர்ச் சொற்களில் காணப்படும் இலக்கணக் கூறுகளில்
சிறப்பாகக் குறிப்பிடத் தகுந்த ஒன்று பால் பாகுபாடு ஆகும்.
பால் காட்டும் விகுதிகள் பெயர், வினை இரண்டிற்கும் உரியன.
எனினும் பெயரோடு வரும் பால் விகுதிகளில் சோழர் காலத்தில்
சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
• ஆண்பால் விகுதி
சோழர் கால இலக்கண நூல்களுள் ஒன்றான வீரசோழியம்
ஆண் பாலுக்குரிய விகுதிகளாகக் கன், மன் என்ற இரு
புதிய விகுதிகளைக் கூறுகின்றது.
சான்று:
கன் |
- |
கிறுக்கன் |
மன் |
- |
கருமன் |
• பெண்பால் விகுதி
பெண்பாலுக்குரிய விகுதியாக மி, சி, ஆட்டி, ஆத்தி
போன்றவற்றை வீரசோழியம் குறிப்பிடுகின்றது.
சான்று:
மி |
- |
சிறுமி |
சி |
- |
ஆய்ச்சி |
ஆட்டி |
- |
வெள்ளாட்டி |
ஆத்தி |
- |
வண்ணாத்தி |
சங்க இலக்கியத்தை ஒப்பிடும்போது கன் என்ற
புதிய விகுதி
சோழர் காலத்தில் தோன்றியுள்ளது. மி, சி போன்ற
பெண்பால் விகுதிகள் சிலப்பதிகாரத்திலும் கலித்தொகையிலும்
இடம் பெற்றுள்ளன. ஆட்டி, ஆத்தி போன்றன சோழர்
காலத்தில் தோன்றிய புதிய விகுதிகளாகும்.
• பலர் பால் விகுதி
வீரசோழிய இலக்கணமாவது, அர்கள், ஆர்கள்,
கள்,
மார் போன்றவற்றைப் பலர்பால் விகுதியாகக் குறிப்பிடுகின்றது.
சங்க இலக்கியத்திலேயே இவ்விகுதிகள் மிகவும் குறைந்து
காணப்பட்டன. கள் விகுதியானது நாலாயிரத் திவ்வியப்
பிரபந்தத்தில் ஆங்காங்கே ஏறக்குறைய 25 இடங்களில்
காணப்படுகின்றது.
தன்
மதிப்பீடு : வினாக்கள் - I |
1. |
இரண்டாம்
குலோத்துங்கச் சோழன் அவையில் அமைச்சராகத் திகழ்ந்தவர்
யார்? |
விடை |
2. |
முன்னிலைப்
பன்மைப் பதிலிடு பெயர்கள் இரட்டைப் பன்மை பெற்றமைக்கு
இரு சான்றுகள் தருக. |
விடை |
3. |
சோழர்
காலத்தில் பெண்பாலுக்குரிய விகுதிகள் எனக் குறிப்பிடப்படுவன
யாவை? |
விடை |
4. |
எந்தெந்த
வேற்றுமைகள் சோழர் காலத்தில் சொல்லுருபு பெற்றன? அச்சொல்லுருபுகள்
யாவை? |
விடை
|
|
|