1.7 தொகுப்புரை

நண்பர்களே, இப்பாடத்தின் வழி என்னென்ன அறிந்து கொண்டோம் என்பதை ஒருமுறை எண்ணிப் பாருங்கள்.

பேச்சு மொழி, எழுத்து மொழி இரண்டைப் பற்றியும் அறிந்து கொண்டோம். மூன்று வகையான எழுத்து முறைகளைத் தெரிந்து கொண்டோம். தமிழின் வரிவடிவம் பற்றியும், அதன் வளர்ச்சி பற்றியும் வகைகள் பற்றியும் அறிந்து கொண்டோம். எழுத்துகளில் இயற்கையால் ஏற்பட்ட மாற்றங்களையும், சீர்திருத்தங்களால் விளைந்த மாற்றங்களையும் பற்றி விரிவாகத் தெரிந்து கொண்டோம்.

தமிழ் எழுத்து வடிவங்கள் மாற்றி அமைக்கப் பெற வேண்டும் என்பவர்களும் உள்ளனர். தமிழ் மொழியை அறிவியல் துறையில் இன்னும் விரிவாகப் பயன்படுத்தும் நோக்கில் ரோமன் எழுத்து வடிவில் எழுதலாம் என்னும் கருத்து அறிஞர் வா.செ. குழந்தைசாமி அவர்களால் முன்வைக்கப் பெற்றுள்ளது. கு, கூ என்று எழுதும் முறையை மாற்றி கு என்று எழுதலாம் என்ற கருத்தும் முன் வைக்கப் பெற்றுள்ளது. ஐ, ஒள என்னும் எழுத்துகளை அய், அவ் என்று எழுதினால் போதும் என்ற கருத்தும் முன்வைக்கப் பெற்றுள்ளது. அதே நேரத்தில் தமிழ் எழுத்து வடிவத்தில் மாற்றம் தேவை இல்லை என்ற கருத்தும் வழக்கில் உள்ளது. ஆனால், தமிழ் எழுத்து வடிவ வளர்ச்சியை உற்று நோக்குகையில் தேவையான நிலைகளில் மாற்றம் தவிர்க்க இயலாததாக அமைந்து விடுவதை நம்மால் உணர முடிகின்றது.

தன்மதிப்பீடு : வினாக்கள் - II
1.
தமிழ்மொழி தனக்கெனத் தனி ஒரு வரிவடிவம் உடைய மொழி என்பது சரியா?
2.
பண்டைக் காலத்தில் எழுதப் பெற்ற தமிழ்மொழியின் வரிவடிவத்தை அறிய எவை பயன்படுகின்றன?
3.
தென்னக பிராமியின் மற்றொரு பெயர் என்ன?
4.
பாண்டிய மன்னர்களால் போற்றப் பெற்ற தமிழ் எழுத்து வடிவம் எது?
5.
பெரியார் மேற்கொண்ட எழுத்துச் சீர்திருத்தம் ஒன்றைக் குறிப்பிடுக.