3.2 அச்சு ஊடகங்களில் தமிழ் மக்களுக்குச் செய்திகளைத் தருவனவாக இவ்வூடகங்கள் விளங்குகின்றன. இவற்றை இதழ்கள் என்றும் பொதுவாகக் கூறலாம். இதழ்களையும் பலவகைகளாகப் பிரித்துக் காணலாம். தொடக்கத்தில் சமயக் கருத்துகளைப் பரப்பவே தமிழில் இதழ்கள் தோன்றின. தமிழ் இதழியலுக்கு அடிக்கல் நாட்டியவர்கள் கிறித்தவப் பாதிரியார்கள் ஆவர். 1831ஆம் ஆண்டு சென்னைக் கிறித்தவ சமயச் சங்கம் தமிழ்ப் பத்திரிகை என்ற மாத இதழை முதன்முதலில் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து கிறித்தவப் பாதிரிமார்கள் இதழ்களைத் தொடங்கினர். இவ்வகையில் 30 ஆண்டுக் காலம் கிறித்தவ இதழ்களே வெளிவந்தன. 1864இல்தான் இந்து சமயத்தினர் தமது சமயம் சார்ந்த இதழ்களைத் தொடங்கினர். 1864இல் சென்னைப் பிரம்ம சமாஜம் தத்துவ போதினி என்ற இதழை வெளியிட்டது. தமிழ் இதழியல் வளர்ச்சியில் தொடர்ந்து நாட்டு விடுதலை இயக்க இதழ்கள் வெளிவரலாயின. 1882இல் விடுதலை இயக்கம் சார்ந்த வார இதழ்களாக அறிமுகமான சுதேச மித்திரன், பாரதி நடத்திய இந்தியா, விஜயா, கர்மயோகி, சக்கரவர்த்தினி என்பவை, 1917ஆம் ஆண்டில் வெளியாகிய திரு.வி.க.வின் தேசபக்தன், நவசக்தி, 1926இல் வெளிவந்த தமிழ்நாடு போன்றவை இவ்வகையில் குறிப்பிடத் தக்கவை. மேலே நாம் கண்ட இதழ்கள் கருத்து இதழியல் சார்ந்தவை. இன்று இத்தகைய இதழியலுக்குத் தமிழில் பெரிதும் வாய்ப்புகள் இல்லை. மாறாகப் பொழுது போக்கு இதழியலே நிலையாக வளர்ந்து வந்துள்ளது. இவற்றோடு செய்தி இதழியலும் சேர்ந்து வளர்ந்து வளர்ச்சி பெற்று வந்துள்ளது. இன்று வளர்ந்து நிலை பெற்றுள்ள தமிழ் இதழியலைப் பின்வருமாறு பிரித்துக் காட்டலாம். இவற்றுள் நாளிதழ்கள் அன்றாடம் முக்கியச் செய்திகளை வெளியிடுகின்றன. வார மாத இதழ்களாகிய பருவ இதழ்கள் ஒரு வார அல்லது ஒரு மாதச் செய்திகளுள் முக்கியமானவற்றைத் தெரிவு செய்து அவற்றைக் கட்டுரை, தலையங்கம் போன்ற வடிவங்களில் எழுதி மேலும் அவற்றோடு இலக்கியங்கள் மற்றும் பொழுது போக்குச் செய்திகளைச் சேர்த்து வெளியிடுகின்றன. |