4.1 இலக்கியமும் மொழியும்
இலக்கியங்கள் கவிதை உரைநடை ஆகிய இரு
வடிவங்களில் அமைகின்றன. இவற்றுள் ஒரே வடிவத்தில்
அமைந்தாலும், ஒரே உள்ளடக்கத்தைப் பேசினாலும் கூட,
இலக்கியங்களுக்கிடையே வேறுபாடுகளைக் காணலாம். சான்றாக,
வகுப்பில் ஆசிரியர் ஒருவர் வறுமை என்ற தலைப்பினைத்
தந்து மாணவர்களைக் கவிதையோ சிறுகதையோ படைத்து வரச்
சொல்லும் சூழலில் மாணவர்கள் எழுதி வரும் படைப்புகள்
ஒன்றிலிருந்து மற்றொன்று வேறுபடுகின்றன. இங்கு உள்ளடக்கம்
ஒன்றுதான். ஆனாலும் அக்கவிதைகளையோ சிறுகதைகளையோ
படைத்த மாணவர்களின் ஆளுமைக்கேற்ப அப்படைப்புகள்
ஒன்றுக்கொன்று வேறுபடுகின்றன. அதாவது, அவர்கள்
மொழியைத் தம் படைப்புகளில் கையாண்டிருக்கும்
திறத்திற்கேற்ப வேறுபடுகின்றன. இவ்வகையில் படைப்பாளியை
இனங்காண்பதற்கு (to identify)
அவரது இலக்கிய மொழி
உதவுகிறது.
• இலக்கிய மொழி
இலக்கியங்களில் கையாளப்படும் மொழி ஒருவகையில்
வரலாற்று ஆவணம் ஆகும். ஏனெனில் காலந்தோறும் மொழி
வளர்ந்து வந்திருக்கிற வளர்ச்சியை இலக்கியங்கள் நமக்குக்
காட்டுகின்றன. தமிழில் சங்க காலம் தொடங்கித் தற்காலம்
வரை இலக்கியங்களில் காணப்படும் மொழியை ஆராய்ந்து
பார்த்தால் அவை காலந்தோறும் மாற்றங்களுக்கு உட்பட்டு
வந்துள்ள நிலை புலனாகிறது. எனவே இவ்வகையிலும் இலக்கிய
மொழி ஒரு சிறந்த வரலாற்றுப் பதிவாக ஆகிறது.
4.1.1 இலக்கிய வடிவ வேறுபாடும் மொழி வேறுபாடும்
தமிழ் மொழி ஒரு நீண்ட நெடிய இலக்கியப்
பாரம்பரியமுடைய மொழி. எனவேதான் தமிழைத்
தொன்மையான மொழி என்று கூறுகிறோம். ஏறத்தாழ 2000
ஆண்டுகளுக்கும் முற்பட்ட சங்கக் கவிதைகள் தொடங்கி இன்று
வரை வெளிவந்துள்ள தமிழ் இலக்கியங்கள் பல்வேறு
வடிவங்களைத் தாங்கி உருப்பெற்றவை ஆகும். ஒவ்வொரு
காலத்திலும் இலக்கியத்தில் பேசப்படும் செய்தியாகிய
உள்ளடக்கமும் இலக்கியத்தின் வடிவமும் மாறுபட்டுக்
கொண்டே வந்திருக்கின்றன. “சமயச் சார்பற்ற சங்க
இலக்கியங்கள், ஆசிரியப்பாவில் அமைந்து காணப்படுகின்றன.
அறக்கருத்துகளை வலியுறுத்தும் கீழ்க்கணக்கு நூல்கள்,
வெண்பாவில் ஆக்கப்பட்டுள்ளன. பக்தி இலக்கியங்கள்,
விருத்தப்பாவில் அமைந்துள்ளன. தற்காலப் புதுக்கவிதைகள்
நடப்பியலை மேலோங்கிய வடிவமாகக் கொண்டு வடிவமற்ற
வடிவில் அமைந்துள்ளன. வடிவத்தைப் பற்றிய சரியான
கணிப்புகள் கருத்தினையும் காலத்தினையும் புரிந்து கொள்ளப்
பயன்படுகின்றன. தொலைவில் நின்று பல கோபுரங்களைக்
கண்டாலும் அமைப்பைக் கொண்டே இது இந்து மதக் கோயில்
என்றோ இது இசுலாமியர் மசூதி என்றோ இது கிறித்தவ
ஆலயம் என்றோ பிரித்தறிய முடிவதைப் போன்றே இலக்கிய
வடிவமும் அதனுடைய கருத்தினை அல்லது உள்ளடக்கத்தைப்
புரிந்து கொள்ளத் துணை செய்ய வல்லதாகும். மொழியாகிய
கருவியே இவ்வடிவத்தை ஆக்கித் தருகின்றது” என்று இலக்கிய
வடிவம் ஒவ்வொரு காலத்திலும் மாறுபடுவது குறித்தும்
அவ்வாறு வடிவம் மாறுபடுவதில் மொழிக்கு அதிகப் பங்கு
இருப்பது குறித்தும் ஜெ. நீதிவாணன் தமது நடையியல் என்ற
நூலில் விளக்குகிறார்.
4.1.2 தமிழில் இலக்கிய வடிவங்கள்
தமிழில் ஒவ்வொரு காலத்திலும் இலக்கிய வடிவங்கள்
வேறுபட்டுக் கொண்டே வந்திருக்கின்றன. இதனால் நமக்குப்
பல்வேறு இலக்கிய வகைகள் கிடைத்திருக்கின்றன. இவ்விலக்கிய
வகைகளில் ஏற்பட்டுள்ள வளர்ச்சிக்குக் காலச்சூழல்,
மேனாட்டார் தொடர்பு போன்றவை முக்கியக்
காரணங்களாகின்றன. தமிழில் காணலாகும் இலக்கிய
வகைகளைப் பின்வருமாறு பிரித்துக் காணலாம்.
கவிதை, உரைநடை, மரபுக் கவிதை, புதுக்கவிதை,
கட்டுரை, சிறுகதை, நாவல் இவ்விலக்கியங்களில் மொழி
கையாளப்பட்டுள்ள பாங்கு, இலக்கியத்தைச் சுவைத்துப்
படிப்பவருக்கு இலக்கிய நயத்தை உணர்த்துவதுடன்
மகிழ்ச்சியையும் பயப்பதாகும்.
|