4.5 நாவல் மொழி
தமிழ் நாவல் இலக்கிய மொழிநடை வரலாற்றில்
மொழிநடையை உருவாக்கி வளர்த்த காரணிகள் பல. அவை
பின்வருமாறு:
(1) புதுமை வேட்கை உள்ள இலக்கியப் படைப்பாளிகளின் எழுச்சி.
(2) குறிப்பிடத் தக்க சமூக இயக்கங்களின் (தனித்தமிழ் இயக்கம், திராவிட
இயக்கம், மார்க்சியக் கொள்கைப் பரவல்) வளர்ச்சி.
(3) மக்களின் வாழ்வில் உள்ள ஏற்றத் தாழ்வுகளையும் சமுதாய அமைப்புச் சார்ந்த
குற்றங்களையும் ஊழல்களையும் போக்க வேண்டும் என்ற சிந்தனைப் புரட்சி.
(4) அச்சு இயந்திர வரவால் ஏற்பட்ட வாசகர் பெருக்கம்.
(5) தொலைக்காட்சியின் தாக்கம்.
(6) சமூக மதிப்பு மாற்றங்கள்.
(7) ஒடுக்கப்பட்டோரிடையே (தலித் மக்கள், பெண்கள்) ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு
4.5.1 தொடக்கக் காலம்
தமிழ் நாவல்
மொழிநடை தொடக்கக் காலத்தில் கட்டுரைத் தன்மை மிக்கதாய்த் தொடங்கி,
வடசொல் கலந்த மணிப்பிரவாள நடையாய், செந்தமிழ், தனித்தமிழ் என்ற நிலைகளில்
உருவானது. மாயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதிய தமிழின் முதல் நாவலாகிய
பிரதாப முதலியார் சரித்திரத்தில் (1879) கட்டுரைத் தன்மையும் வடமொழிச் சொல்
கலந்த நடையும் இருந்தன. தொடர்ந்து அதுவே இராஜம் அய்யர், அ. மாதவையா
போன்றோரின் நாவல்களிலும் தொடர்கிறது.
ஊர் முழுதும் மகா தோரணங்கள் கட்டி
வாழை
கமுகுகள் நாட்டிப் பந்தல் அலங்கரித்து மணமகனையும்
மணமகளையும் சுகந்த பனிநீரால் திருமஞ்சனம் சூட்டி
திவ்யமான வஸ்திராபரணங்கள் பூட்டி, ஸ்வர்ணமயமாயும்
நவரத்தின கஜிதமாயும் அலங்கரிக்கப்பட்ட கலியாண
மண்டபத்தில், கோடி சூரியர்கள் போலத் தீபகோடிகள்
பிரகாசிக்க, சமுத்திர கோஷம் போல நானா பேத
வாத்யங்கள் முழங்க, மயிற் கூட்டங்கள் போல்
நாட்டியப் பெண்கள் நடனம் செய்ய, குயிற்கூட்டங்கள்
போல் பாடினிகள் சுப சோபனம் பாட, கோதானம்,
பூதானம் முதலிய மாதானங்களுடன் கனகசபையின்
கலியாணம் நடந்தேறியது.
(பிரதாப
முதலியார் சரித்திரம் , 139-140)
1935 வரை ஏறக்குறைய 43 நாவல்கள் எழுதிய ஆரணி
குப்புசாமி முதலியாரின் நடை வடமொழிக் கலப்பில்
அவர்காலப் பேச்சு வழக்கு முதலியன கலந்து எளிய தன்மை
உடையதாய் அமைந்து இருந்தது. வடுவூர் கே. துரைசாமி
அய்யங்காரின் நடையும் தெளிவுடன் கூடிய வசன நடையாக
இருந்தது. எனவே, இவர்களது நடை மக்களைக் கவர்ந்தது.
வை.மு. கோதை நாயகி அம்மாளின் நடையும் உவமைகள்,
அடுக்குத் தொடர், இரட்டைக் கிளவி முதலியன அழகு செய்யப்
பெண்களின் பிரச்சனைகளை எடுத்துரைத்தது.
மணிக்கொடி எழுத்தாளரான புதுமைப்பித்தன் (1906-1948)
எழுதிய குறுநாவல்களாகிய சிற்றன்னை, துன்பக்கேணி
முதலியவை வாழ்க்கையின் நடப்பு உண்மைகளைச் சுட்டி
வாசகர்களைச் சிந்திக்கத் தூண்டின.
“பசி ஐயா பசி! பத்தும் பசி வந்திடப்
பறந்து போகும் என்று வெகு ஒய்யாரமாக உடம்பில் பிடிக்காமல் பாடுகிறீரே!
அங்கு நீர் ஒருநாள் இருந்தால் உமக்கு அடிவயிற்றிலிருந்து வரும் அதன் அர்த்தம்.”
என்பது இவரது நடைக்குச் சான்று. இவர் நேரடியாகப் பேசும்
நடைத்திறன் வாசகர்களைக் கவர்ந்தது.
4.5.2 வளர்ச்சி நிலை
விடுதலைக்குப் பின்னர்
வெளிவந்த தமிழ் நாவல்களின் மொழி அமைப்பைக் கணக்கிட்டால் வாசகனைக் கவரும்
வகையில் செய்தியைச் சொல்லிய குறிப்பிட்ட சில எழுத்தாளர்களைக் கொண்ட வளர்ச்சிப்
போக்கினைக் கவனிக்க இயலுகிறது. இந்திய விடுதலையின் முதல் காலக் கட்டம் (1947-57),
இரண்டாவது காலக் கட்டம் (1957-64) என்று இருநிலைகளில் விடுதலைக்குப் பிந்திய
காலக் கட்டம் அமைகிறது. விடுதலைக்கு முன்னர் ஐரோப்பியர் வரவால் ஏற்பட்ட ஆங்கிலக்
கல்வி, சிந்தனைப் புரட்சி, பாரதியின் எளிய தமிழ்ப் பண்பாடு, திரு.வி.க.
கொண்டு வந்த உரைநடை எளிமை முதலியனவற்றின் தாக்கத்தால் அனைத்துப் படைப்பிலக்கியங்களிலும்
ஓர் எளிமை இடம் பெறுகிறது.
• தனித்தமிழ் நடை
மறைமலையடிகளார் (1876-1950) வடசொற்களைத்
தவிர்த்து எழுதுமாறு வலியுறுத்திய தனித்தமிழ்நடை
எளிமையுடையதாய் அமைந்தது.
• அழகுத் தமிழ் நடை
இவரது தனித்தமிழ் இயக்கத்தில் ஈடுபாடு கொண்ட
திராவிட இயக்க எழுத்தாளர்கள் தனித்தமிழ்ச் சொற்களைப்
பயன்படுத்தி எழுதினர். இவ்வகையில் அண்ணாதுரை,
கருணாநிதி போன்றோர் பயன்படுத்திய அடுக்குமொழி, மரபுத்
தொடர்கள், அடைமொழி, உவமை, வினாத்தொடரின்
தொடர்ச்சி, எழுவாய் பயனிலையின் வினா முறை மாற்றம்,
முரண் தொடர், புரட்டன், எத்தன், ஏமாளி, எத்திப்
பிழைப்போர் போன்ற தனித்தன்மை கொண்ட சொல்லாட்சி
போன்றவை குறிப்பிடத்தக்கனவாய் அமைந்து அழகுத்
தமிழ்நடையை உருவாக்கின.
• கவர்ச்சி நடை
தமிழ் நாவல் நடை வரலாற்றில் இளஞாயிற்றின் உதயமென
வந்து மறுமலர்ச்சி தந்தவர் எனப் போற்றப்படுபவர் கல்கி.
இவரது நடையில் ஒரு விதக் கவர்ச்சி இருந்தது. கல்கியின்
நடையில் வருணனை, கற்பனை, வரலாற்று நாவலாக மாற்றும்
திட்டப் பாங்குகள், எளிமை முதலியன கலந்த ஈர்ப்பு நடை
அமைந்திருந்தது. வருணனைச் சிறப்பு, பாத்திர உருவாக்கம்,
உரையாடல் அமைக்கும் பாங்கு, தம் வாசக வட்டத்தைப்
பார்க்காமல் அவர்களோடு உரையாடும் முறை முதலியன
இவரது நடைக்குக் கவர்ச்சியைத் தந்தது.
காவேரி தீரம் அமைதி கொண்டு விளங்கிற்று.
உதயசூரியன் செம்பொற்கிரணங்களால் நதியின்
செந்நீர்ப் பிரவாகம் பொன்னிறம் பெற்றுத்
திகழ்ந்தது. அந்தப் புண்ணிய நதிக்குப்
‘பொன்னி’ என்னும் பெயர் மிகப்
பொருத்தமாய்த் தோன்றியது.
(பார்த்திபன்
கனவு -ப.1)
என்பது சான்று.
4.5.3 பேச்சு மொழியும் இலக்கியச் சாயலும் கலந்த நடை
பேச்சு மொழி, இலக்கியச் சாயல் இரண்டனையும் கலந்த
எளிய நடையை உருவாக்கிய பலர் இக்காலக் கட்டத்தில்
குறிப்பிடத் தக்கவர் ஆவர். காந்தியத் தாக்கம் பெற்று
எழுதியவர்கள் இத்தகைய நடையைப் பயன்படுத்தினர்.
அகிலன், நா. பார்த்தசாரதி போன்றோர் இவ்வகையில்
குறிப்பிடத் தக்கவர் ஆவர். இவர்களது நடையைப்
பொதுத்தமிழ் வாய்ந்திருந்த நடை எனலாம். அகிலன் நாவல்கள்
பாத்திரங்களின் பேச்சு நடைக்கு முக்கியத்துவம் தந்தன.
நா.பா.வின் எழுத்துகளில் இலக்கியச் சாயலைக் காணலாம்.
நடுத்தர வர்க்க மக்களின்
வாழ்க்கையை மட்டும் அடிப்படையாகக் கொள்ளாமல் சேரியில் வாழும் மக்களையும்
மையமாக வைத்து எழுதியவர் ஜெயகாந்தன். ஆங்கில மொழிச் சொற்கலப்பைப்
பற்றிக் கவலைப்படாமல் அச்சொற்களைத் தம் எழுத்துகளில் சேர்த்து எழுதினார்
இவர். பேச்சு மொழிப் பயன்பாடு இவரிடம் இயல்பாகவே அமைந்தது.
நவீனத் தமிழ் வாசகர்களை உருவாக்கிய
க.நா. சுப்பிரமணியம் (1912-1988) தஞ்சை மாவட்ட மக்களின்
வாழ்க்கைப் பின்னணியைச் சித்திரித்துள்ளார். வாசகர்களைத்
தொடர்ந்து கதையை வாசிக்கத் தூண்டும் ஈர்ப்புத் தன்மையை
இவரது கதையில் காண இயலும். மொழிநடையில் எவ்விதக்
குழப்பமும் விளைவிக்காத சிறுசிறு தொடர்களில் தெளிவாகப்
பொருளைப் புலப்படுத்தும் முறை இவருடையது.
4.5.4 வட்டாரச் சொற்கலப்பு நடை
மார்க்சிய இயக்கக்
கொள்கைகளால் ஈர்க்கப்பட்டுப் பல்வேறு தொழிலாளர்களின் பிரச்சினைகளைத் தத்தம்
படைப்புகளில் படைத்துக் காட்டியோர் பலர். இத்தகைய நாவல்கள் யதார்த்தத் (நடப்பியல்)
தன்மை மிக்கவையாய் மட்டுமன்றி, அந்தந்த வட்டாரத் தொழிலாளர்களின் பேச்சு வழக்கையும்
வெளிப்படுத்துவனவாய் வெளிவந்தன. ஹெப்சிபா ஜேசுதாசன், ஐசக் அருமைராசன்,
இராஜம் கிருஷ்ணன், கி.ராஜநாராயணன், ஆர். சண்முகசுந்தரம் போன்றோரது எழுத்துகளில்
அப்படைப்புக்களின் வட்டாரப் பின்னணி சார்ந்த சொற்கள் இடம்பெற்று இலக்கியச்
சுவை பயக்கின்றன.
“கிளம்பிய ஆடுகளை எல்லாம் திரும்பவும் கொண்டுவந்து
அதே இடத்தில் நிப்பாட்டினார்கள். பிறகு ரவைக்குக் கிடை
போடும் இடத்தில் இவர்களுக்குள் விவகாரம் வைத்துக்
கொள்வார்கள். அன்று அவள் குத்திப் போடுவதற்காகச்
சீக்கிரமே வீடு திரும்பி விட்டாள்.”
“ஏலே வசங்கெட்ட பயபுள்ள, பாங்கு தெரிஞ்சிதான் நடக்கியா?
ஏமுலே எங்கேயாவது தேனையும் தவிட்டையும் கொண்டுகிட்டுப்
போங்களேமுலே”
(கி.ரா., கிடை -163)
(நிப்பாட்டுதல் = நிறுத்துதல்; ரவை = இரவு; தேத்திப்போட
= உரலில் தானியத்தைக் குத்திக் கஞ்சி காய்ச்ச)
இது ராஜநாராயணனின் கரிசல் வட்டாரத் தமிழுக்குச் சான்று.
4.5.5 மாறுபட்ட மொழி நடை
காலந்தோறும் மாறுபட்ட
மொழிநடையை விரும்பும் வாசகர்கள் இருந்து கொண்டே இருப்பர். அத்தகையோருக்காக
எழுதும் வகையில் சுஜாதா, பாலகுமாரன் போன்றோர் தம் நடையில் ஒருவித
மாறுபாட்டைக் கொண்டு வந்தனர். சுஜாதாவின் விதி என்ற நாவலில் வர்ணிக்கப்படும்
பெண் ‘உதட்டில் ஒரு செ.மி. கர்வம்’ (விதி, பக். 33-34) என்று புதுமையாக வர்ணிக்கப்படுவது
சான்று. சந்தையில் உற்பத்திப் பொருளாக வந்து குவியும் வார, மாத நாவல்களின்
குவிப்பு குறிப்பிடத்தக்கது. சாலையோரக் கடைகளில் தொங்கவிடப்பட்டு விற்பனையாகும்
இந்நாவல்கள் (கண்மணி, மேகலா போன்ற இதழ்கள்) வாசிக்கப்பட்ட உடனே மறந்து விடுகின்ற
அளவே உள்ளடக்கத் தரமுடையவை. இருப்பினும் இவற்றிற்கென ஒரு வாசகர் வட்டம் பெருகியமைக்கு
இந்நாவலாசிரியர்கள் மொழியை மாறுபடுத்திக் கையாண்டமையால் உருவான ஒருவித மாற்று
மொழி நடையும் காரணமென்றால் அது தவறில்லை.
ஸ்கூட்டரின்
கீழ் பூமியை நழுவ விட்டான்.
(இராஜேந்திர
குமார், இடிமின்னல், இந்துமதி ப.10)
இராஜாவின் தோளைக் கொத்தினாள்.
(இராஜேந்திர
குமார், தப்பிக்க நேரமில்லை ப.28)
அந்த லாரி அவனை நீளமாய்ச் சிவப்புப் பெயிண்டில் கோடிழுத்த மாதிரித்
தேய்த்தது.
(இராஜேந்திர
குமார், நீலநிற நிமிடங்கள், ப.10)
இவை சான்றுகள்.
|