6.0 பாட முன்னுரை

ஒரு கருத்தை நேரடியாகச் சொல்லும் ஆற்றல் வாய்ந்தது உரைநடை. சாதாரண மொழி அறிவு உடையவர்க்கும் பயன் அளிக்கும் இயல்பு கொண்டது. தொடக்கம், விளக்கம், நிறைவு என்ற வரையறுத்த அமைப்பில் உருவாவது. உரைநடைக்கு என்று தனி ஒரு வடிவ இலக்கணம் இல்லை; பத்தி அமைப்பு உண்டு; பக்க அளவு உண்டு. எளிய தன்மையது. இதனால், பல்வேறு துறைகளில் உரைநடையைப் பயன்படுத்த முடிகின்றது. பேச்சு வழக்குச் சொற்களுக்கும் உரைநடையில் இடம் உண்டு. செறிவான இலக்கிய நடைச் சொற்களுக்கும் இடம் உண்டு. சொல் சிக்கனம் வாய்ந்த அறிவியல் செய்திகளையும் உரைநடை வழி வெளியிட முடியும். தமிழில் இத்தகு உரைநடையின் தோற்றம் வளர்ச்சி பற்றி இப்பாடத்தில் நாம் படிக்க உள்ளோம்.