6.1 தொடக்கக் கால உரைநடை தமிழ் உரைநடை தொன்மை வாய்ந்தது. தமிழ் மொழியில் எழுதப் பெற்ற முதல் இலக்கண நூலான தொல்காப்பியத்தில் உரைநடை தொடர்பான குறிப்பு இடம் பெற்று உள்ளது. உரை வகை நடையே நான்கு என மொழிபடும்(பொருள் : 475 : 5) என்பது தொல்காப்பியச் சூத்திரம். உரைநடை இலக்கியம் நான்கு வகைப்படும் என்பது இதன் பொருள். என்றாலும், அந்தக் காலத்தைச் சேர்ந்த உரைநடை நூல்கள் இன்று கிடைக்கப் பெறவில்லை. சங்க இலக்கியங்கள் பிற்காலத்தில் தொகுக்கப் பெற்றன. அத்தொகுப்பு நூல்களில் சிற்சில உரைக் குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. பாடல்களின் கீழே திணை, துறை தொடர்பான குறிப்புகள் உரை நடையில் எழுதப் பெற்று உள்ளன. பாடியவர், பாடப் பெற்றவர் பெயர், சூழல் தொடர்பான குறிப்புகளும் உரைநடையில் எழுதப் பெற்று உள்ளன. இக் குறிப்புகள் யாப்பு வடிவினவாக அமையவில்லை; இதுபோன்றே உரைநடைத் தன்மைக்கு உரிய பேச்சு வடிவத்தையும் சார்ந்து இல்லை. சான்றாக ஒன்றைக் காணலாம்: திணை: வாகை துறை: அரச வாகை: இயன்மொழியுமாம்.பாண்டியன் தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனாற் பிணியிருந்த யானைக் கட்சேய் மாந்தரஞ்சேர லிரும்பொறை வலிதிற் போய்க் கட்டி லெய்தினானைக் குறுங்கோழியூர் கிழார் பாடியது (புறநானூறு. 17) இந்த நடை, சிலப்பதிகாரக் காலத்தில் மேலும் வளர்ந்து உள்ளது. சிலப்பதிகாரம் செய்யுள் வடிவில் அமைந்தது. அதில், செய்யுளுக்கு இடைப்பட்ட பகுதிகளில் உரைநடையில் சில குறிப்புகள் இடம் பெற்று உள்ளன. இதனால், சிலப்பதிகாரத்தை ‘உரை இடை இட்ட பாட்டுடைச் செய்யுள்’ என்று குறிப்பதும் உண்டு. பாடல் வரிகளுக்கு முன்பும் பின்பும் இடம் பெற்றுள்ள இந்த உரைநடைக்குச் சான்று வருமாறு : மணமதுரையோடரசு கேடுற வல்வினைவந் துருத்தகாலைக் (வஞ்சிக் காண்டம், குன்றக் குரவை, உரைப்பாட்டு மடை) இதுவரை தொடக்கக் காலத் தமிழ் உரைநடைக்குச் சான்றுகள் இரண்டு வழங்கப் பெற்றன. இவற்றின் அடிப்படையில் அக்காலத் தமிழ் உரைநடையின் தன்மைகளாகக் கீழ் வருவனவற்றைக் குறிப்பிடலாம்.
|