6.4 உரைநடை இலக்கியம்

இலக்கியம் எழுத உரைநடையை முதன் முதலில் பயன்படுத்தியவர் வீரமா முனிவர் என்பதை அறிவோம். இவர் எழுதிய பரமார்த்த குரு கதைக்கு அடுத்து இம்முயற்சி தொடரவில்லை. 1887இல் தமிழின் முதல் புதினமான ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ வெளிவந்தது. இதைத் தொடர்ந்து புதினங்கள் பல எழுதப் பெற்றன. இலக்கியம் எழுதும் முயற்சிக்குப் பெருமளவில் உரைநடையைப் பயன்படுத்தும் முறை வழக்குப் பெற்றது. இந்த உரைநடையிலும் மாற்றம் வேண்டும் என்பது பாரதியின் கருத்து. இதை உரைநடை வழியே பாரதி வெளிப்படுத்தி உள்ளார்.

“தமிழில் வசன நடை (உரைநடை) இப்போதுதான்
பிறந்தது. பல வருஷமாகவில்லை. தொட்டில் பழக்கம்
சுடுகாடு மட்டும். ஆதலால் இப்போதே நமது
வசனம் உலகத்தில் எந்தப் பாஷையைக் காட்டிலும்
தெளிவாக இருக்கும்படி முயற்சிகள் செய்ய வேண்டும்.
கூடியவரை பேசுவது போலவே எழுதுவதுதான்
உத்தமமென்பது என்னுடைய கட்சி. எந்த விஷயம்
எழுதினாலும் சரி, ஒரு கதை அல்லது தர்க்கம்,
ஒரு சாஸ்திரம், ஒரு பத்திரிகை விஷயம் எதை
எழுதினாலும் வார்த்தை சொல்லுகிற மாதிரியாகவே
அமைந்து விட்டால் நல்லது”

இது பாரதி வாழ்ந்த கால உரைநடை வளர்ச்சியை அறியப் போதுமான சான்று. பாரதி 1882இல் பிறந்து 1921இல் இயற்கை எய்தினார். இக்காலத்தில் பேசுவது போல் எழுத வேண்டும் என்பது ஒரு கட்சியாக இருந்து உள்ளது. இதற்கு மாற்றுக் கருத்து உடையவர் இருந்ததைப் பாரதியின் கருத்துத் தெளிவாக்குகின்றது.

பாரதிக்குப் பின்னர் உரைநடை வளர்ச்சியில் குறிப்பிடத் தக்கவர்கள் பலர் உள்ளனர். புதுமைப்பித்தன், திரு.வி.க, மறைமலை அடிகள் முதலானவர் தமக்கெனத் தனி உரைநடைப் பாணியை உருவாக்கி உள்ளனர்.