நாட்டுப்புற மக்களால் பழக்கத்தில்
பயின்று வழக்கத்தில் நிலைபெற்ற பாடல்கள், கதைகள், கதைப்பாடல்கள், பழமொழிகள்,
விடுகதைகள், புராணங்கள் என்பன நாட்டுப்புற இலக்கியங்களாகும். இதில் நாட்டுப்புறப்
பாடல்கள் (Folk Songs) என்பனவற்றை நாட்டுப்புறவியல் ஆய்வாளர்கள் சூழல் அடிப்படையில்
சிந்தித்து எட்டாக வகுத்து உரைக்கின்றனர். அவையாவன,
1) தாலாட்டுப் பாடல்கள்
2) குழந்தைப் பாடல்கள்
3) காதல் பாடல்கள்
4) தொழில் பாடல்கள்
5) கொண்டாட்டப் பாடல்கள்
6) பக்திப் பாடல்கள்
7) ஒப்பாரிப் பாடல்கள்
8) பனிமலர்ப் பாடல்கள் (மேற்குறிப்பிட்ட பிரிவுகளுக்கு
உட்படாத பாடல்கள்)
என்பவைகளாகும்.
• நாட்டுப்புறக் கதைகள் (Folk Tales)
நாட்டுப்புற மக்களுக்கு முறைசாராக் கல்வி (Non-formal
Education) போன்று, அறக்கோட்பாட்டை (Ethics)
வலியுறுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு கதைகள்
சொல்லப்பட்டு வருகின்றன. கதைகளைக் கீழ்க்காணும்
முறையில் பகுத்து உரைப்பர். அவையாவன:
1) மனிதக் கதைகள்
2) விலங்குக் கதைகள்
3) மந்திர தந்திரக் கதைகள்
4) தெய்வக் கதைகள்
5) இதிகாச புராணக் கதைகள்
6) பல்பொருள் பற்றிய கதைகள்
என்பனவாகும்.
• நாட்டுப்புறக் கதைப் பாடல்கள்
நாட்டுப்புறக் கதைப்பாடல் என்பது ஓரிடத்தில் வழங்கப்
பெறும் புகழ்மிக்க கதையினைப் பாடலாகப் பாடுவதாகும்.
இவ்வாறு கதையைப் பாடலாகக் கூறுவது அல்லது பாடலில்
கதை பொதிந்து வருவது கதைப் பாடல் எனப்படும். கதைப்
பாடலில்
1) காப்பு அல்லது வழிபாடு
2) குரு வணக்கம்
3) வரலாறு
4) வாழி
என்ற நான்கு பகுதிகள் கட்டாயம் இடம் பெற்று இருக்கும்.
மேலும் இக்கதைப் பாடல்களில் நம்பிக்கைகள், பழக்க
வழக்கங்கள் பற்றிய தகவல்களும் இடம் பெறுதல் உண்டு.
• பழமொழிகள்
பழமையான மொழிகளே பழமொழிகள்
ஆகும். அறிவாலும், அனுபவத்தாலும் பழுத்துப் போன மொழிகள் நாட்டுப்புற மக்களால்
நயம்படக் கூறப்படும் பொழுது அது பழமொழி என்றாகிறது. இதைச் சொலவடை, முதுமொழி,
பழஞ்சொல், முதுசொல் என்றும் கூறுவர். பழமொழிகளை,
1) அளவு அடிப்படை (Size Basis)
2) பொருள் அடிப்படை (Subject Basis)
3) அகர வரிசை அடிப்படை (Alphabetical Basis)
4) அமைப்பியல் அடிப்படை (Structural Basis)
5) பயன் அடிப்படை (Functional Basis)
என்ற பிரிவுகளால் ஆய்வு செய்வர்.
• விடுகதைகள் (Riddles)
நாட்டுப்புற மக்கள் தங்களின் அறிவுத் திறத்தைக்
காட்டுவதற்காகப் புதிர்ப் பண்பை அடிப்படையாகக் கொண்டு
ஒரு கருத்தைக் கூறுவார்கள். அதில் ஏதாவது ஒரு கருத்து
மறைந்து இருக்கும். அதைக் கண்டுபிடித்து விடை
கூறவேண்டும். இவ்விடுகதைகள்
நாட்டுப்புற விடுகதைகள் (Folk Riddles)
இலக்கிய விடுகதைகள் (Literary Riddles)
என்ற இருநிலையில் உள்ளன எனலாம்.
• புராணங்கள் (Myths)
'புராதனம்' என்னும் வடசொல்லில் இருந்து
உருவானதே 'புராணம்'. 'புராணம்' என்பது வழிவழியாக வந்த
இறைவன், இறைவி பற்றிய கருத்துகள் அடங்கிய கதைகள்
எனலாம். வேதங்களுக்கு அடுத்தபடியாகப் புராணங்கள்
போற்றப்படுகின்றன. சைவம், வைணவம் என்ற சமயங்களுக்கு
உரிய புராணங்கள் பல உள்ளன. நாட்டுப்புற மக்களின்
கடவுள் வழிபாட்டில் இடம்பெறும் சிவன், முருகன், திருமால்
போன்ற கடவுளர்க்குப் புராணங்கள் உள்ளன. புராணங்களை,
1) மகா புராணங்கள்
2) இதிகாச அமைப்பிலானவை
3) சாதிப் பெருமை விளக்குவன
4) ஊர்ச் சிறப்பைக் கூறுவன - தலபுராணம்
என்று பகுத்துக் கூறலாம்.
இவ்வாறு நாட்டுப்புற இலக்கியம் என்பது
அக்கிராம மக்களின் மண்ணின் மணத்தோடு, உள்ளத்தில் உள்ளதை உள்ளபடியே எடுத்துக்கூறல்
என்ற அமைப்பில், இசை நயத்தோடு, இலக்கணக் கட்டுப்பாடு என்பது இல்லாது படைக்கப்படுவது
ஆகும். படைப்பாளன் இவன் தான் என்று அறுதியாகக் கூற முடியாதபடி எல்லாரும்
தாம் என்று கூறும் வகையில் படைக்கப்படுவது ஆகும்.
• நம்பிக்கைகள்
நாட்டுப்புற மக்களின் வாழ்க்கையில் இலக்கியம்,
கலைகள், கைவினைப் பொருட்கள் போன்று இடம் பெறும்
மற்றொரு முக்கியக்கூறு நம்பிக்கை (Belief) என்பதாகும்.
நம்பிக்கையினை மனிதனின் மூன்றாவது கை என்பர்.
இந்நம்பிக்கை மனிதனின் வாழ்வில் பிறப்பு முதல் இறப்பு
வரை ஒவ்வொரு நிகழ்விலும் இடம் பெறுவதாகும்.
இயற்கையின் மழை, விலங்கு, பறவை குறித்தும்;
மனிதரின் பிறப்பு, பருவமடைதல், விருந்தினர் வருகை, உழவு,
என்பவை பற்றியும்; திசை, நட்சத்திரம், ராசி, கோலமிடுதல்,
விதி
பற்றிய சிந்தனை, இறப்பு போன்ற பலவற்றிலும் கிராமத்து
மக்களிடம் காணப்படும் அழுத்தமான நம்பிக்கை மிகவும்
குறிப்பிடத் தக்கதாகும். இந்நம்பிக்கைகளில்
காரண
காரியங்களை ஆராய முடியும். அறிவியல் போன்று
வன்மை,
மென்மைகளை ஆராய்தல் என்னும் போது
கிராமத்து
மக்களின் உள்ளப்பாங்கு, பண்பாடு ஆகியவற்றை அறிய
முடியும்.
|