காலந்தோறும் இலக்கியங்கள் தோன்றியுள்ளன.
இவை அந்நாளில் படித்த சிலரால் ஓலை முதலியவற்றில் எழுதப்பட்டன. அச்சுக் கலையின்
வருகைக்குப் பின்பு மிகுதியாகப் பதிவு செய்யப்பட்டு எழுத்திலக்கியங்களாயின.
இதில் நாட்டுப்புறக் கூறுகளான வாய்மொழி இலக்கியப் பண்புகள் காணப்படுகின்றன.
வாய்மொழி இலக்கியம் பேச்சு நடையில் அமைவது, இப்பண்பு எழுத்திலக்கியத்தில்
காணப்படுகிறது.
• ஒரே
சொல்லாட்சியினைத் திரும்பத் திரும்பக் கூறுவதைச் சங்கப் பாடல்களில் காணமுடியும்.
• ஒரு கருத்தை மூன்றுமுறை அடுக்கிக் கூறும் தாழிசை எனப்படும் யாப்பின் கூறு
சங்கப்பாடல்களிலும், சிலப்பதிகாரம் போன்ற காப்பியங்களிலும் உண்டு.
• மக்கள் வாழ்வில் பயின்று வந்த
கண்ணகி - கோவலன் கதையே சிலப்பதிகாரக் காப்பியமாகப் படைக்கப்பட்டது.
• திருநாவுக்கரசரின் பழமொழிப் பதிகம் ஒவ்வொரு பழமொழியையும்
எடுத்துரைக்கிறது.
• மாணிக்கவாசகரின் திருவம்மானை,
திருப்பொற்சுண்ணம், திருத்தெள்ளேணம், திருச்சாழல், திருப்பொன்னூசல் முதலான
பாடல்கள் நாட்டுப்புற மகளிர் விளையாட்டுக்கள் குறித்து எடுத்துரைப்பன.
• பெரியாழ்வாரின் தாலாட்டு, ஆண்டாளின் பாவைப் பாட்டு,
குலசேகர ஆழ்வாரின் தாலாட்டு என்பன நாட்டுப்புறப் பாடல்களின் தாக்கத்தின்
வீச்சால் படைக்கப்பட்டவைகளே.
• இன்றும் மக்களின் தேர்தல் பிரசாரம், கோவில்
விழாக்கள் போன்றவற்றில் நாட்டுப்புறப் பாடல்கள், கலைகள் இடம் பெற்று வருகின்றன.
• குறிப்பாக, இன்றைய நாளில்
குடும்ப நலத் திட்டம், பசுமைப் புரட்சித் திட்டம், அறிவொளி இயக்கம் முதலானவற்றில்
நாட்டுப்புறப் பாடல்கள் காலத்தின் தேவைக்கேற்பப் படைக்கப்படுகின்றன. இவ்வாறு
வாய்மொழி இலக்கியத்தின் நீட்சியாக அழுத்தமான அமைப்பில் - அச்சுக் கலையின்
செல்வாக்கால் எழுத்திலக்கியம் உருவாகி நிலைத்த தன்மையைப் பெற்றுள்ளது. மேலும்
எவ்வெப்போது மக்களை ஒன்று சேர்க்கும் இயக்கங்கள் வலுப்பெற்றனவோ அப்போதெல்லாம்
எழுத்திலக்கியங்களில் நாட்டுப்புற இலக்கியத்தின் தாக்கம் மிகுதியாக இடம்பெறும்
என்பதை அனுபவத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம். |