<
2.1 நாட்டுப்புறவியல் - வரலாறு

நாட்டுப்புற இலக்கியத்தை, எழுத்து இலக்கிய வடிவத்தின் முதல்நிலை என்றும், அடித்தள நிலை என்றும் ஏற்றுக் கொள்ள வேண்டும். இத்தகு நிலையில் நாட்டுப்புற இலக்கியம் என்பது அழகிய ஒரு நுண்கலை (Fine Art) என்று குறிப்பிட வேண்டும். பொதுவாகக் கலையின் சுவையினைக் கண்ணால் கண்டும், காதால் கேட்டும் அனுபவிக்க இயலும். ஆனால் இலக்கியத்தின் சுவையினைக் கருத்தால் மட்டுமே உணர முடியும். எனவே இலக்கியத்தின் வரலாற்றை அறிய வேண்டும் என்று எண்ணும் போது, அந்த இலக்கியத்தின் படைப்பாளனோடும் அந்த நூலோடும் சேர்த்தே சிந்திக்க வேண்டியுள்ளது. இவ்வாறு வரலாற்று ஆய்வில் படைப்பாளனையும் (Author) படைப்பையும் (Text) ஒருசேர இணைத்தே பார்க்க வேண்டியுள்ளது.

“தலைமை வாய்ந்த இலக்கிய வரலாறுகள் பலவும் நாகரிகப் பண்பாட்டு வரலாறுகளாகவோ அல்லது திறனாய்வுக் கட்டுரைகளின் தொகுதிகளாகவோ உள்ளன” என்று ரெனி வெல்லாக் தமது நூலில் கூறுவது குறிப்பிடத்தக்கது.

2.1.1 உலகளாவிய நிலையில் நாட்டுப்புறவியல்

மானுடம் தொடங்கிய காலம் முதலே நாட்டுப்புற வழக்காறுகள் தோன்றிவிட்டன. மக்களின் நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள் இவற்றின் அடிப்படையில் எழுந்த படைப்புத்திறன் மிக்க வழக்காறுகள் இலக்கியமாகப் பரிணமித்தன. அவை, 1) பொது மக்களைச் சார்ந்த மரபுமுறைகள் (Popular Antiquities) என்றும், 2) பொது மக்கள் இலக்கியம் (Popular Literature) என்றும், 3) பொதுப் புராணவியல் (Common Mythology) என்ற பெயர்களிலும் வழங்கப்பட்டன.

ஆனால் வில்லியம் ஜான் தாமஸ் என்னும் ஆங்கிலேயர் கி.பி.1846ஆம் ஆண்டு நாட்டுப்புறவியலைக் குறிக்கும் ‘Folklore’ என்ற சொல்லை உருவாக்கி உலகுக்கு வழங்கினார். இச்சொல்லே பெருவாரியாக எல்லா நாடுகளிலும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இவ்வாறு, மனிதனின் சடங்கு முறைகள், நம்பிக்கைகள், கதைப் பாடல்கள், பழமொழி, நாட்டுப்புறப் பாடல் என வழக்காறுகள் அனைத்துமே நாட்டுப்புறவியல் இலக்கியம் என்பதாக அவர் குறிப்பிட்டார். மேலும், நாட்டுப்புறவியல் என்பது பழங்காலப் பண்பாட்டின் எச்சம் (Cultural Survival) என்பது அவர் கருத்தாகும். உலக நாடுகளில் இங்கிலாந்து, அமெரிக்கா, பிரெஞ்சு, ஜெர்மன், கனடா, மெக்ஸிகோ, ஜப்பான் ஆகிய நாடுகள் இவ்விலக்கியத்தின் பல்வேறு கூறுகளை, தத்தம் மண்ணின் மணம் வீசத் திறனாய்வு செய்து உலகளாவிய அளவில் நாட்டுப்புற இலக்கியத்தின் சிறப்பினை உணரும்படி செய்தன.

2.1.2 இந்திய அளவில் நாட்டுப்புறவியல்

மனித இனம் எவ்வளவு பழமை வாய்ந்ததோ, அந்த அளவு பழமை மிக்கது நாட்டுப்புறவியலாகும். இதில் இந்திய அளவில் எத்தகு நிலையில் நாட்டுப்புறவியல் விளங்கியது என்பதைக் காணும் போது, இந்தியாவில் நாட்டுப்புறவியல் துறை தனித்ததொரு துறையாக வளரவில்லை. ஆனால் இந்தியவியலின் (Indology) ஒரு பகுதியாகவே கருதப்பட்டது என்பது அறிஞர் கருத்தாகும். இந்திய நாட்டின் பாரம்பரியத்தைக் கூறும் வேதத்தில், குறிப்பாக ரிக் வேதத்தில் பழமையான நாட்டுப்புறப் பாடலும் கதைப்பாடலும் காணப்படுகின்றன. பஞ்சதந்திரக் கதை இந்திய நாட்டுப்புற இலக்கியத்தின் தலைமை இடத்தைப் பெற்றதாகும். புத்த ஜாதகக் கதைகள் நீதிநெறிக் கதைகளாகும்.

இந்திய நாட்டின் காஷ்மீர்ப் பகுதி, இமாசலப் பிரதேசம், பஞ்சாப், அரியானா, மேற்கு வங்காளம், பீகார், அசாம், ஒரிசா, மேகாலயா, மணிப்பூர், அருணாசலப் பிரதேசம், இராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், குஜராத், ஆந்திரா, கர்நாடகா, கேரளம் என்று அனைத்துப் பகுதிகளிலும் நாட்டுப்புறக் கதைகளும், நாட்டுப்புறப் பாடல்களும் காணப்பட்டன என்பதை இந்திய நாட்டுப்புறவியல் வரலாற்றினைப் படிக்கும் பொழுது அறிய முடிகிறது.

2.1.3 தமிழக அளவில் நாட்டுப்புறவியல்

தமிழக நாட்டுப்புற மக்களின் வாழ்க்கை முறைகளை, நாகரிகத்தை உள்ளது உள்ளபடி எடுத்துரைக்கும் இலக்கியம் நாட்டுப்புறவியல் இலக்கியமாகும். இவற்றை நாட்டுப்புற மக்களின் மரபு வழிப்பட்ட படைப்புகள் (Traditional Creations) எனலாம் என்று அறிஞர் கூறுகின்றனர்.

வட வேங்கடம் தென்குமரி
ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம்

என்பதால் வேங்கடம் முதல் குமரி வரை உள்ள தமிழ்மொழி பேசும் தமிழக மக்களின் வாழ்வியல் முறைகளை நாட்டுப்புற வழக்காறுகள் எடுத்துரைக்கின்றன.

இவ்விலக்கியத்தின் தோற்றத்தினையும் வளர்ச்சியையும் விளக்குவது வரலாறு ஆகும். இதனைக் காலப் பகுப்பின் வாயிலாக வரன்முறைப் படுத்தலாம்.