4.5 நாட்டுப்புறவியலும் மானுடவியலும் (Folklore and Anthropology)

தொடக்கக் காலத்திலிருந்து இன்றுவரை மனிதனின் உருவத் தோற்றம், பண்பாட்டு வளர்ச்சி இவற்றை ஆராய்வதே மானுடவியலாகும். மானுடவியலில் பலவகை உண்டு. அவை ஆதி மனிதனைப் பற்றி ஆராயும் மானுடப் பரிணாமம் (Human Evolution), இனக்குழுக்களின் உருவத் தோற்றத்தை ஆராயும் உருவத்தோற்ற மானுடவியல் (Physical Anthropology), வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட மனிதனின் சமூகவாழ்க்கையை ஆராய்கிற தொல்பொருளியல், மனிதப் பண்பாடு அதன் மூலக்கூறுகள், அமைப்பு, மாற்றங்கள் போன்றவற்றை ஆராயும் பண்பாட்டு மானுடவியல் போன்றவைகளாகும்.

சமூக அறிவியல் புலங்களில் மானுடவியல் புலம் நாட்டுப்புறவியலுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கிறது. நாட்டுப்புறவியல் மானுடவியலின் ஒரு பிரிவாக இருப்பதுடன் பல்வேறு மானுடவியல் கூறுகளையும் தன்னுள் கொண்டு விளங்குகிறது. இரண்டிற்கும் சில வேற்றுமைகளும் காணப்படுகின்றன.

  • ஒற்றுமைகள்
  • இவ்விரண்டு இயல்களும் மனிதப் பண்பாட்டை ஆராய்வனவாகும்.

    நாட்டுப்புறவியலாளர் பிறப்பு முதல் இறப்பு வரையிலுள்ள சடங்குகளை நாட்டுப்புறப் பாடல்கள் மூலம் ஆராய்கிறார். பண்பாட்டு மானுடவியலாளர் சமூக அமைப்பின் கீழ் இவற்றை ஆராய்கிறார்.

    மானுடவியலாளர் ஓர் இனத்தின் பண்பாட்டினை ஆராயும் போது அவ்வின மக்களிடையே காணப்படும் பழங்கதைகள், நம்பிக்கைகள் முதலியவற்றை ஆராயாவிட்டால் அவரது ஆய்வு முழுமை பெறாது.

    மரபு வழிப்பட்ட நம்பிக்கைள், கலை, கைவினைப் பொருட்கள், சடங்குகள், பழக்க வழக்கங்கள், முதலிய ஆய்வுகள் நாட்டுப்புறவியலுக்கும் மானுடவியலுக்கும் பொதுவானவையாகும்.

  • வேறுபாடுகள்
  • நாட்டுப்புறவியலும், மானுடவியலும் மிக நெருங்கிய தொடர்புடையவை என்றாலும் இரண்டிற்கும் இடையே சில குறிப்பிடத் தக்க வேற்றுமைகளும் காணப்படுகின்றன. அவற்றையும் தெரிந்து கொள்வது அவற்றை மேலும் புரிந்து கொள்ள உதவும்.

    மானுடவியலாளரைப் பொறுத்தவரை நாட்டுப்புறவியல் என்பது பண்பாட்டின் ஒரு பகுதியே தவிரப் பண்பாட்டின் முழுமையான ஒன்றல்ல.

    பொதுவாக மானுடவியலாளர் தங்கள் இனத்தின் பண்பாடுகளைத் தவிர்த்துப் பிற பண்பாடுகள் பற்றிப் படிப்பதையே முதன்மை நோக்கமாகக் கொண்டிருக்கின்றனர். ஆனால் நாட்டுப்புறவியலாளரோ தங்களது இனத்தின் பண்பாடு பற்றியும் தமக்கான சில குறிப்பிட்ட மரபுகளைப் பற்றியும் ஆர்வம் கொண்டுள்ளனர். ஆனால் தற்போது இவ்விரண்டு துறைகளிலுமே மாற்றம் ஏற்பட்டுள்ளது.