|
ஆய்வாளர் பாடல்கள் சேகரிப்பதற்காகத் தகவலாளியை
ஓரிடத்திற்கு வரவழைத்து, தாலாட்டு, தொழிற் பாடல்கள்,
கொண்டாட்டப் பாடல்கள், இழப்புப் பாடல்கள் முதலிய
பல்வேறு சூழல்களில் பாடப்படும் பாடல்களைப் பாடச் செய்து
பதிவு செய்தல், செயற்கைச் சூழலில் பாடல்களைப் பதிவு
செய்யும் முறையாகும். சிறுமியர் பாட்டு, கும்மிப் பாட்டு,
விளையாட்டுப் பாடல்கள் போன்ற சிறுசிறு பாடல்களை
இம்முறையில் பதிவு செய்தல் எளிது.
ஆனால் நீண்ட பாடல்களை இம்முறையில் சேகரிக்கும்போது
சில இடர்ப்பாடுகள் ஏற்படலாம்.
சான்றாக :
ஒரு சிலர் மட்டுமே செயற்கைச் சூழலில் பாடும் திறன்
உடையவர்களாக இருப்பர். பெரும்பான்மையோர் பாடப்படும்
சூழலில் தங்களை மறந்து ஈடுபடும் நிலையில் மட்டுமே
சரளமாகப் பாடுவர். மற்ற சூழ்நிலைகளில் பாடும்போது
பாடல்கள் சரளமாக வராமல் இடையில் நிறுத்தி விடுவர்.
|
|
செயற்கைச் சூழலில் ஏற்படும் இடர்ப்பாடுகளைத்
தவிர்ப்பதற்காக ஆய்வாளர் பாடல் பாடப்படும் இயற்கையான
சூழலையோ அல்லது அதே போன்றதொரு சூழலையோ
தோற்றுவித்துப் பாடலைப் பதிவு செய்யும் முறை.
சான்றாக :
கும்மிப் பாடலைச் சேகரிக்க வேண்டுமென்றால்
ஒருவரை வரவழைத்துப் பாடச் சொல்லாமல், ஒரு குழுவினரை அழைத்துக் கும்மியடித்துப்
பாடச் செய்வது. இல்லையென்றால், ஓரிடத்தில் இருந்து கொண்டே குழுவினரைக் கையைச்
சீராகத் தட்டச் செய்து, பின்பாட்டுப் பாடச் செய்ய வேண்டும். இச்சூழலில் சேகரிக்கப்படும்
பாடல்கள் இயற்கைச் சூழலில் பாடப்படும் பாடல்களை ஒத்திருக்கும். |