அமெரிக்க நாட்டைச் சேர்ந்த
நாட்டுப்புறவியல் பேரறிஞர் ரிச்சர்ட் எம். டார்சன் பன்னிரண்டு
ஆய்வுக் கோட்பாடுகளைப் பற்றிக் கூறுகின்றார். இவை அனைத்தும், அக்கோட்பாடுகள்
தோன்றிய காலக்கட்டங்களில் செல்வாக்குச் செலுத்திய அறிவியல், சமூக அறிவியல்
முதலிய அறிவுப் புலங்கள் முன்வைத்த வாய்பாடுகளின் (Paradigms)
அடிப்படையில் உருவானவை ஆகும். 19ஆம் நூற்றாண்டைப் பொறுத்த வரை பரிணாம
வாதம் (Evolutionism),
தேசிய வாதம் (Nationalism),
வரலாற்று மீட்டுருவாக்கம் (Historical
Reconstruction) போன்றவை நாட்டுப்புறவியல் ஆய்வுக் கோட்பாடுகளுக்கு
வழிகாட்டிகளாக அமைந்தன.
20ஆம் நூற்றாண்டில் அமைப்பியல்
வாதம், பண்பாட்டியல் கோட்பாடு, சூழலியல் கோட்பாடு, நிகழ்த்துதல் கோட்பாடு
முதலியன வழிகாட்டிகளாக அமைந்தன. 20ஆம் நூற்றாண்டின் இறுதியில் இலக்கியம்
மற்றும் சமூக அறிவியல் புலங்களில் வளமடைந்த பின்நவீனத்துவம், குறியியல்,
பொருள் கோடலியல், உளப்பகுப்பாய்வு போன்ற கோட்பாடுகள் தோன்றின. இக்கோட்பாடுகள்
இன்றைய நாட்டுப்புற வழக்காறுகளை ஆய்வு செய்வதற்கு மிகவும் பயனுள்ளவையாக உள்ளன.
நாம் மேற்கொள்ளும் கோட்பாடுகளில்
எதை எடுத்துக் கொண்டு ஆராய்ந்தாலும் அவ்வாய்வு ஒரு குறிப்பிட்ட பண்பாட்டிற்குள்
சுருங்கிப் போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதாவது, எந்த ஒரு கோட்பாட்டையும்
பல பண்பாட்டுச் சூழல்களிலும் ஆராய்ந்து அக்கோட்பாடு பல பண்பாடுகளுக்கும்
பொருந்துகிறதா என்று பார்க்க வேண்டும். அப்படிப் பொருத்தமாக அமைந்தால்தான்
அக்கோட்பாடு உலகளாவிய பயன்பாட்டைக் கொண்டதாகக் கருதப்படும். அதே சமயம் அவ்வாறு
சொல்லப்படுகின்ற கோட்பாட்டை அப்படியே எல்லாரும் ஏற்றுக் கொள்வார்கள் என்றும்
சொல்ல முடியாது. ஆதரவு, எதிர்ப்பு, மாற்றம், எல்லாமே தோன்றும். ஆனால் அவை
அனைத்தும் அக்கோட்பாட்டின் வளர்ச்சிக்கு உதவும். கோட்பாடு வெற்றி பெற வேண்டும்
என்றால் அதில் நம்பகமான தரவுகள், ஆழமான பகுப்பாய்வு, அறிவுப் பூர்வமான அல்லது
தர்க்கப் பூர்வமான விவாதங்கள், பல பண்பாடுகளுக்கும் பொருந்தும் தன்மை போன்றவைகள்
இருப்பது முக்கியம் ஆகும்.
|