இலக்கிய வகை ஒன்றின் அமைப்பைக்
கண்டுபிடிப்பதற்கு எவை மாறாதவை (constants), எவை மாறுபவை
(variables) என்பதை முதலில் கண்டுபிடிக்க வேண்டும்.
சான்று
பிராப் சில வாக்கியங்களைக் கூறி அவற்றின் நிலைத்த
கூறு என்று எவற்றைக் கூறலாம் என்பதையும் விளக்கியுள்ளார்.
1) ஒரு ஜார் ஒரு கழுகை ஒரு வீரனுக்குக் கொடுக்கிறான்.
அந்தக் கழுகு அந்த வீரனை வேறொரு நாட்டுக்குக்
கொண்டு செல்லுகிறது. (ஜார் = ரஷிய மன்னர்)
2) ஒரு முதியவர் கசென்கோவிற்கு ஒரு குதிரையைக்
கொடுக்கிறார். அந்தக் குதிரை கசென்கோவை வேறொரு
நாட்டிற்குக் கொண்டு செல்கிறது.
3) ஒரு மந்திரவாதி இவானுக்குப் படகைக் கொடுக்கிறான்.
அந்தப் படகு இவானை வேறொரு நாட்டுக்குக் கொண்டு
செல்கிறது.
4) ஓர் இளவரசி இவானுக்கு ஒரு மோதிரம் கொடுக்கிறாள்.
அந்த மோதிரத்திலிருந்து சில இளைஞர்கள் தோன்றி
இவானை வேறொரு நாட்டுக்குச் சுமந்து செல்கின்றனர்.
மேற்சொல்லப்பட்ட நான்கு கதைகளில் இரண்டு வகையான
தன்மைகளைப் பார்க்க முடிகிறது.
1) நிலையானது.
2) நிலையற்றது.
நிலையற்றது என்று எடுத்துக்கொண்டால் கதைப்
பாத்திரங்களின் பெயர்கள், இயல்புகள், அனுப்புகின்றவர்,
கொடுக்கப்படுகின்ற பொருள் இவைகள் வேறுபடுகின்றன.
நிலையானது என்று எடுத்துக் கொண்டால் பாத்திரங்களின்
செயல்பாடுகள், அனுப்புவதும், போவதும்,
கொடுக்கப்படுவதும் நிலையானவை. இவைகளைத் தான்
செயல் என்று கூறுகிறார் பிராப். இந்தச் செயல்
(வினை- function) தான் கதைகளின் அடிப்படை அலகு.
பிராப் கதைகளின் மாதிரி (Model) அமைப்பினை உருவாக்கினார். அதில் முப்பத்தொரு வினைகளைப் பற்றிக்
கூறுகின்றார். அந்த வினைகளுக்கான குறியீட்டையும்
அமைத்துள்ளார். இந்தக் குறியீடுகள் பல்வேறு கதைகளை
ஒப்பிடும் திட்டத்திற்குப் பின்னர் உதவும். கதைத் தொடக்கச்
சூழலில் ஆரம்பித்து முப்பத்தொரு வினைகளையும்,
குறிகளையும் பார்க்க வேண்டும்.
இந்த 31 வினைகளும் ஒரே கதையில் இடம்பெற
வேண்டும் என்ற கட்டாயமில்லை. சில வினைகள் சில தனித்த
கதைகளில் இடம்பெறாமலும் அமையலாம். ஆனால்
வினைகளின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும். மேலும்
அவற்றின் வரன்முறை அடுக்கு நிலையானதாகவும் அமையும்.
கதாபாத்திரங்களின் எண்ணிக்கை பெரும்பாலும் 7ஆக
அமையும்.
|