|
நாட்டுப்புற வழக்காற்றை ஆராயும் அறிஞர்கள்
வழக்காறுகளின் சுவையும் பண்புகளும் அதைச் சொல்லும்
முறையிலேயே அமைந்துள்ளன என்பதை உணர வேண்டும்.
கதை சொல்லும் நிகழ்வை,
சொல்லுகின்ற காலச் சூழல், நேரம்,
பருவகால நிலை
முதலானவற்றோடு இணைத்துப் பார்க்க
வேண்டும். இவற்றைப் பனுவலோடு (Text) உற்றுநோக்கி
ஆராய வேண்டும். அந்தந்த மண்ணில் தான் கதைகள்
வாழ்கின்றன. அவை
எழுதப்படும் தாள்களில் வாழ்வதில்லை.
சூழல்களைப்
புறக்கணித்து விட்டு ஆய்வாளர் ஒருவர் ஆய்வு
செய்தால்
அவ்வாய்வு உயிருள்ளதாக அமையாது. சூழல்
கருத்தாக்கம் என்பது இதுவே.
மேற்கண்ட ‘சூழல்’ என்ற கருத்தாக்கத்தை
முதன்முதலில் 1935இல் மாலினோவிஸ்கி என்பவர் முன்வைத்தார்.
தன்னுடைய மொழியியல் இனவரைவியல் கோட்பாட்டின் ஒரு பகுதியாகப் பொருளின் சூழல்
இன்றியமையாமையை இதன் வழிக் குறிப்பிட்டார். அதன்பின்னர் 1960இல் இந்தியானா
மற்றும் பென்சில்வேனியா பல்கலைக் கழகங்களில் பயிற்சி பெற்ற இளம் அமெரிக்க
வல்லுநர்கள் பனுவல், மொழி, பாவனைகள், கருத்துப் பரிமாற்ற மொழியியல், உளவியல்,
சமூகவியல், குறியியல் போன்ற சமூக அறிவியல்கள் எவ்வாறு சூழலைச் சார்ந்துள்ளன
என்று கண்டனர்.
அதன் பிறகு ரோஜர் ஆபிரகாம், டான்பென் ஆமோஸ்,
ஆலன் டண்டிஸ், ராபர்ட் ஜார்ஜஸ் மற்றும் கென்னத்
போல்ட்ஸ்டின் போன்றோர் நாட்டுப்புற வழக்காறுகளை,
சமூகத்தின் உண்மையான தொடர் நிகழ்ச்சியாகப் பார்த்தனர்.
அதனால் அவர்கள், வாய்மொழி நடத்தைகளை (Verbal
behaviour) மொழியிலிருந்தும், இயங்கியலை (Dialectics)
மானுடவியலிலிருந்தும், தனி நபரின் பங்கேற்பைச்
(Role- playing) சமூகவியலிலிருந்தும், தான் என்ற
தன்முனைப்புக் (ego) கருத்தை உளவியலிலிருந்தும்
பெற்றனர். அதுமுதல் பல துறைகளில் இருந்து
நாட்டுப்புறவியலுக்கு வந்த ஆய்வாளர்கள், வாய்மொழி
மரபுகளைச் சூழலிலிருந்து தனிப்படுத்திச் சிந்திக்காமல்,
அதன் பன்முகங்களைப் பண்பாட்டுச் சூழல்களிலும்
பொதுவான சமூகக் கட்டமைப்பு நிலைகளிலும் ஆராயத்
தொடங்கினர்.
|
|
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த
இருவரிடையே உள்ள இந்த வேறுபாட்டைப் பாருங்கள். இதற்குக் காரணம் சூழலே ஆகும்.
மாமியார் 75 வயதானவர். பழைய மரபுகளில் ஊறியவர். எனவே, அவர் வயலுக்குச் சொந்தக்காரரை
‘எங்க ஆண்ட’, ‘எங்க அய்யா’ எனப் பயபக்தியோடு பணிவோடு விளித்துப் பாடுகிறார்.
இது அவர் வளர்ந்த - வாழ்ந்த சூழலின் பாதிப்பு.
மருமகள் 30 வயதானவர். சாதிகள் குறித்துக்
சமுதாயத்தில் ஏற்பட்டுள்ள மாறுபட்ட சிந்தனைகள், அவருக்கு 'எங்க ஆண்ட', 'எங்க
அய்யா' என்று பாடவேண்டிய தேவை இல்லை என்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளது.
அவர்களின் பாடல்களைப் புரிந்து கொள்ள
வேண்டுமென்றால், முதலில் அவர்கள் வளர்ந்த, இப்பொழுது
வாழ்கின்ற சூழலைப் புரிந்து கொள்ள வேண்டும்.
அப்பொழுது தான் அப்பாடலின் வேற்றுமைக்குக் காரணத்தைத்
தெரிந்து கொள்ள முடியும்.
|
|
1983இல் நாட்டுப்புறவியல் சூழல்
ஆய்வில் ரிச்சர்டு பாவ்மென் ஆறு வகையான சூழல்களை விளக்குகிறார்.
நாட்டுப்புற வழக்காறுகளை நுட்பமாக உற்று நோக்குகிறார். சூழல் உறவுகளைப் பண்பாட்டுச்
சூழல் என்றும், சமூகச் சூழல் என்றும் வகைப்படுத்துகிறார்.
பொருள் சூழல்
நாட்டுப்புற வழக்காற்று வகை ஒன்றைப் பற்றி அச்சமூக
உறுப்பினர்களின் ஒட்டு மொத்தமான பொருள் கொள்ளும்
முறையாகும்.
நிறுவனச் சூழல் (Institutional Context)
அவ்வகைப் பண்பாட்டிற்குள் அது எங்கே பொருந்தி
வருகிறது என்பதாகும்.
தொடர்புமுறைச் சூழல்
(Context of Communication System)
அது எவ்வாறு பிற நாட்டுப்புற வழக்காற்று
வகைகளோடு
தொடர்பு கொள்கிறது என்பதாகும்.
சமூக அடித்தளம் (Social base)
அவ்வகையைக் கொண்டிருப்பவர்கள் என்ன வகையான
மக்கள்?
தனிமனிதச் சூழல் (Individual context)
அது எவ்வாறு ஒரு தனிமனிதன்
வாழ்வில்
செயலாற்றுகிறது?
சுற்றுச் சூழமைவுகளின் சூழல் (Context of Situation)
சமூகப் பின்னணிகளில் அது எவ்வாறு
பயன்படுத்தப்படுகிறது என்பதாகும்.
இந்த ஆறு சூழல்களும்
தம்முள் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. ஆய்வுக்கு
மிகவும்
இன்றியமையாதவை.
|
|
- இவ்வகை ஆய்வுகள் காரணங்களைத் தேடுவதைக் காட்டிலும் பொருளைத் தேடுகின்றன.
- ஒரு நாட்டுப்புற வழக்காற்றுப் பனுவலை, மாறுபட்ட சமூக வரலாற்றுப் பண்பாட்டுச்
சூழலுக்கு மாற்றும் போது ‘பனுவல், அதன் உட்பொருளை விட நிலையானது’ என்ற
நிலைக்குச் செல்கிறது. ஆயின் உண்மையான விளக்கம் பனுவலை அதன் சூழலில்
ஆய்வதே ஆகும்.
- நாட்டுப்புறவியலிலுள்ள ‘சூழல்’ என்ற கருத்தாக்கம் மானுடவியல், மொழியியல்,
சமூகவியல், உளவியல் மற்றும் தத்துவவியல் போன்ற பிற துறைகளுக்கும் பெரும்
பங்களிக்கிறது.
சான்று
நாட்டுப்புற வழக்காறு ஒன்றின் உண்மையான பொருள்
பின்னணிச் சூழலிலிருந்து தான் பெறப்படுகிது, பொருள்
சூழலிலோ அல்லது தோராயமான பொருள் கொள்ளுதலிலோ
இருந்து அல்ல.
முன்பு நாம் பார்த்த ஒரே வீட்டைச்
சார்ந்த மாமியார், மருமகள் இருவரும் வயலில் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர்.
அப்பொழுது அவ்வயலுக்குச் சொந்தக்காரர் வருகிறார். அவ்வேளையில் இருவரும் பாடல்
பாடுகின்றனர். அப்பாடல்கள் பின்வருமாறு :
மாமியார் பாடிய பாடல் :
வட்டக் குடிபிடிச்சே - எங்க ஆண்ட
வயப்பாக்க வாராக
வயலுங் கருதாகும் - அவுக
வந்தெடமுந் தோப்பாகும்
நீளக் குடபிடிச்சே - எங்க அய்யா
நிலம் பாக்க வாராக
நிலமுங் கருதாகும் - அவுக
நின்னெடமுந் தோப்பாகும்.
மருமகள் பாடிய பாடல் :
வட்டக் குடபுடிச்சே
வயப்பாக்க வாராக - அவுக
வயலுங் கருதாகும்
வந்தெடமுந் தோப்பாகும்
நீளக் குடபிடிச்சே
நிலம் பாக்க வாராக - அவுக
நிலமுங் கருதாகும்
நின்னெடமுந் தோப்பாகும்.
|