1.3 நாட்டுப்புறக் கதைப்பாடல்கள் - தோற்றம்

கதைகள் கேட்கும் ஆவல் மனிதனுக்கு இயல்பாக அமைந்துள்ளதாகும். சிறுவர்களும் பெண்களும் கதை கேட்பதில் ஆவல் மிக்கவர்களாகக் காணப்படுகின்றனர். மனித வாழ்க்கை தொடர்பான கதை மக்களால் விரும்பிக் கேட்கப்படுகின்றன. கதையுடன் இசையையும் கலந்து கேட்பதை மக்கள் மிகவும் விரும்பினர். இவ் விருப்பத்தின் காரணமாகக் கதைப்பாடல்கள் அதிக அளவில் ஆசிரியர்களால் படைக்கப் பெற்றன எனலாம். ஆயின் இக்கதைப்பாடல்கள் எப்பொழுது தோன்றின என்பதை உறுதியாகக் கூறப் போதுமான சான்றுகள் இல்லை.

1.3.1 படையெடுப்பும் பண்பாட்டுக் கலப்பும்

முடியுடை வேந்தரின் ஆட்சியின்கீழ் சீரும் சிறப்புமாக இருந்த தமிழ்நாடு பதினான்காம் நூற்றாண்டுக்கு மேல் பலவிதமான அந்நியத் தாக்குதல்களுக்கு ஆளானது. இசுலாமியர், விஜயநகரத்து நாயக்கர், மராட்டியர், கன்னடியர் ஆகியோருடைய படையெடுப்புகள் தமிழ்நாட்டின் அமைதியைச் சீர் குலைத்தன. பலவிதமான பண்பாட்டுக் கலப்புகள் ஏற்பட்டன. மனித வாழ்க்கைமுறை, பண்பாட்டு முறை, கலையமைப்பு முறை போன்றவை மாறிக் காணப்பட்டன. இதன் விளைவாக விரிவாகச் சிந்தித்துச் சிறந்த நூல்களை எழுதுவதற்கு உரிய வாய்ப்பும் வசதியும் குறைந்தது. கிடைத்த வசதியைப் பயன்படுத்தி இலக்கியத்தை வளர்க்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட நூலாசிரியர்கள் அப்போதைய சூழலில் வாழ்ந்த மக்களின் ஆர்வத்திற்கேற்ப நூல்களை உருவாக்கினர். அவ்வாறு உருவான இலக்கிய அமைப்பில் ஒன்றாகக் கதைப் பாடலைக் குறிப்பிடலாம்.

1.3.2 புகழேந்திப் புலவர்

தற்பொழுது வெளியிடப் பெற்றுள்ள கதைப் பாடல்கள் பலவற்றில் புகழேந்திப் புலவரால் இயற்றப்பட்டவை என்ற குறிப்பு உள்ளது. புகழேந்திப் புலவர் பெயரைத் தாங்கி வரும் கதைப் பாடல்கள் அனைத்தும் அவராலேயே இயற்றப்பட்டவை எனவும் உறுதியாகக் கூற இயலாது. ஆயின் கதைப்பாடலின் தோற்றத்திற்கும் புகழேந்திப் புலவருக்கும் நெருக்கமான தொடர்பு இருந்திருக்க வேண்டும் என்பதை நம்பலாம். புகழேந்திப் புலவரின் காலத்தைக் கணக்கிட்டால் கதைப்பாடலின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் ஓரளவு கண்டு கொள்ள முடியும்.

புகழேந்திப் புலவர் - யார் ?

அபிதான சிந்தாமணியில் புகழேந்திப் புலவரின் வரலாறு கூறப்பட்டுள்ளது. பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ‘சந்திரன் சுவர்க்கி’ என்ற குறுநில மன்னன் புகழேந்திப் புலவரை ஆதரித்துள்ளான், பின்னர்ப் பாண்டிய மன்னனின் அவைக்களப் புலவராகப் பதவி ஏற்றுள்ளார். பாண்டிய இளவரசி சோழ மன்னனின் மனைவியானபோது புகழேந்திப்புலவர் சீதனமாகச் சோழ நாட்டுக்கு அனுப்பப்படுகிறார். அங்கே சோழநாட்டு அவைப் புலவரான ஒட்டக்கூத்தரின் காழ்ப்புணர்ச்சியால் (பொறாமையால்) வெறுக்கப்பட்டுச் சிறை வைக்கப்படுகின்றார். சிறையில் இருக்கும்பொழுது அவ்வழியாக வரும் பெண்களுக்குச் சுவையான பல கதைகளைக் கூறுகிறார். அவர் கூறிய கதைகளே புகழேந்தி கதைகள் என்ற பெயரில் வெளிவந்துள்ளன என்ற ஒரு செய்தி வழக்காக உலவி வருகின்றது.

புகழேந்தியின் பெயரிலுள்ள படைப்புகள்

புகழேந்திப் புலவர் ‘நளவெண்பா’ என்ற அரிய இலக்கியத்தைத் தரமாகவும் நயமாகவும் எழுதித் தமிழிலக்கிய வளத்தைப் பெருக்கியவர். பதினைந்தாம் நூற்றாண்டிலிருந்து பத்தொன்பதாம் நூற்றாண்டுவரை தோன்றியுள்ள பல கதைகள் புகழேந்தியின் பெயரில் வந்துள்ளன. அல்லி அரசாணி மாலை, தேசிங்குராஜன் கதை, மதுரை வீரன் கதை போன்ற கதைகள் புகழேந்திப் புலவரால் இயற்றப்பட்டவை என்ற குறிப்பு அந்நூல்களில் காணப்படுகின்றது. அபிதான சிந்தாமணி குறிப்பிட்டுள்ள புலவரின் காலத்திற்கும் இந்நூல்கள் வெளிவந்துள்ள காலத்திற்கும் இடையே நூற்றாண்டு இடைவெளி உள்ளது. மேலும் புலமை மிக்க புலவர், பாமரர் நடைக்கு இறங்கிக் கதைப் பாடல்களைப் படைத்திருக்கவும் இயலாது. இதிலிருந்து நளவெண்பா இயற்றிய புகழேந்தி வேறு, நாட்டுப்புறக் கதைப்பாடல்கள் இயற்றிய புலவர்கள் வேறு என்பதை அறியலாம்.

புகழேந்தியும் - கதைப்பாடல்களும்

நளவெண்பா இயற்றிப் பெரும் புகழ் ஈட்டியவர் புகழேந்திப் புலவர். நளனுடைய கதை மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றிருக்க வேண்டும். அதன் விளைவாக அந்த நூலை இயற்றிய ஆசிரியரும் புகழ் பெற்று விளங்கி இருக்க வேண்டும். இக் காரணத்தினால், கதைப்பாடல்களை இயற்றிய ஆசிரியர்கள் தங்கள் கதைகளை மக்களிடம் பரவச் செய்வதற்கு வேண்டிய ஒர் உத்தியாகப் புகழேந்தியின் பெயரைப் பயன்படுத்தி இருக்கலாம். புகழேந்தி பெற்றுள்ள புகழ்காரணமாக அவரது பெயரில் தமது நூல் வருவதில் பெருமை கொண்டும் அவரது பெயரைத் தங்கள் நூலுக்குப் பயன்படுத்தியிருக்கலாம். எவ்வாறாயினும் நளவெண்பா இயற்றிய புகழேந்தி வேறு, அல்லி அரசாணி மாலை, பவளக் கொடிமாலை, ஏணியேற்றம், புலந்திரன் களவுமாலை போன்ற கதைப் பாடல்களை எழுதிய ஆசிரியர்கள் வேறு. புகழேந்தியின் பெயரால் வெளிவந்த இக்கதைப் பாடல்கள் பெற்ற வரவேற்பைப் பார்த்த பிற ஆசிரியர்கள் காத்தவராயன் கதை, மதுரை வீரன் கதை, தேசிங்கு ராஜன் கதை முதலியவற்றையும் புகழேந்தியின் பெயரிலேயே வெளியிட்டுள்ளனர் எனலாம்.

கதைப் பாடல்கள் ஒன்றுடன் ஒன்று மிக நெருக்கமான தொடர்புடையனவாகக் காணப்படுகின்றன. இந்த நெருக்கமே இக்கதைப் பாடல்கள் எல்லாம் ஒரே புலவரால் இயற்றப்பட்டவை என்று கூறுவதற்குக் காரணமாகும். இந்த அளவிலேயே புகழேந்திப் புலவருக்கும் நாட்டுப்புறக் கதைப் பாடல்களுக்கும் இடையே உறவுநிலை உள்ளது.