1.4 நாட்டுப்புறக் கதைப்பாடல் - வரையறை

கதைப்பாடல்கள் பெரும்பான்மையான மக்களுக்கு மிகுந்த இன்பத்தை அளிக்கக் கூடியனவாக இருந்தாலும் ஆய்வறிஞர்களுக்கும் திறனாய்வாளர்களுக்கும் ஒத்துப்போக முடியாத சிக்கல்களை ஏற்படுத்துவனவாக உள்ளன. கதைப்பாடல் குறித்து ஆய்வு செய்த மேலை நாட்டு ஆய்வாளர் ஒருவர் அதற்கு வரையறை கூற இயலாமல், ‘கதைப் பாடல்கள் இடர்ப்பாடானவை’ (Balladsare awkward things) என்று கூறியுள்ளார். நாட்டுப்புறக் கதைப் பாடல்கள் குறித்து வரையறை கூறுவதில் மேலைநாட்டவரிடையேயும் கருத்து மாறுபாடு உண்டு.

1.4.1 கதைப்பாடல் - விளக்கம்

‘பாலட்’ (Ballad) என்ற ஆங்கிலச் சொல்லிற்கு இணையாகக் கதைப்பாடல் அல்லது கதைபொதி பாடல் என்ற சொற்களைத் தமிழறிஞர்கள் பயன்படுத்தி வருகின்றனர். பாலட் என்பது குறிப்பிடும் ஆங்கிலக் கதைப் பாடலைவிட, தமிழ் நாட்டுப்புறக் கதைப் பாடல்கள் இசையுடன் கூடிய மிக நீண்ட படைப்புக்களாக உள்ளன. சாதாரணமாக ஓர் ஆங்கிலக் கதைப்பாடல் நூறு வரிகளை அல்லது ஒரு பத்தியில் நான்கு வரிகள் அமைந்த இருபத்தைந்து பத்திகளைக் கொண்டவை. ஆயின் ‘பாலட்’ என்பதற்கு இணையாகக் கூறப்படும் தமிழகக் கதைப் பாடல் ஒன்று சிறியதாக இருப்பினும் இரண்டாயிரம் வரிகள் கொண்டதாக இருக்கின்றது. எனினும் கதைப்பாடலுக்குக் கதை முக்கியமான ஒன்றாகும். எனவே ‘கதையைப் பாட்டாகப் பாடுவது’ - ‘பாலட்’ என்ற மேல்நாட்டாரின் விளக்கத்திற்கு ஏற்பவே தமிழறிஞர்களும் விளக்கம் கொடுத்துள்ளனர். இதில் மாறுபட்ட கருத்து அவர்களிடையே இல்லை.

நாட்டுப்புறக் கதைப் பாடல்களுக்கு வரையறை சொல்வதற்கு முன் அந்த இலக்கிய வகைமையின் அகக்கூறு (உள்ளடக்கம்), புறக்கூறு (வெளியமைப்பு), இழைவுக் கூறு (texture), பாடம் (text), சூழல் (context) முதலியவற்றையும் கருத்தில் கொண்டு வரையறுக்க வேண்டும் என்பர். இதன் அடிப்படையில் பின்வருமாறு கதைப்பாடலை வரையறை செய்யலாம்:

குறிப்பிட்டதொரு பண்பாட்டில், குறிப்பிட்ட சில சூழல்களில், வாய்மொழியாகப் பாடகர் ஒருவரோ ஒரு குழுவினரோ நாட்டார் முன் எடுத்துரைத்து, இசையுடன் நிகழ்த்தும் அல்லது நிகழ்த்திய ஒரு கதை தழுவிய பாடல் கதைப் பாடல் ஆகும்.

இந்த வரையறையையே தமிழில் கிடைத்துள்ள நாட்டுப்புறக் கதைப் பாடல்களுக்குரிய வரையறையாகக் கொள்ளலாம்.