கதைப்பாடலை வகைமைப் படுத்துவதில் தமிழாய்வு அறிஞர்கள் வேறுபடுகின்றனர்.
கதைப்பாடல்களைச் சிலர் நான்காகவும், சிலர் ஏழாகவும், சிலர் ஒன்பதாகவும்
உள்ளடக்கத்தை அடிப்படையாகக் கொண்டு வகைமைப்படுத்துவர்; வேறு சிலர்
கதையின் அளவை அடிப்படையாகக் கொண்டு குறுங்கதைப் பாடல், சிறு கதைப்பாடல்
என்று வகைமைப்படுத்துவர். இவர்களது கருத்துப்படி நீண்ட வடிவமும் கதை
அம்சமும் கொண்ட தேசிங்கு ராஜன் கதை, கோவலன் கதை. பஞ்சபாண்டவர் வனவாசம்,
அல்லி அரசாணி மாலை முதலானவை கதைப்பாடல்களாகும். வடிவத்தாலும் கதையாலும்
குறுகி அமைந்துள்ள வீணாதி வீணன் கதை, தேசிங்கு கும்மி போன்றவை குறுங்கதைப்
பாடல்களாகும். கதையம்சம் கொண்ட சிறிய கதைப் பாடல்கள் சிறு கதைப் பாடல்களாகும்.
மேலும் ‘Ballad’ என்ற ஆங்கிலச் சொல்லிற்குப் பொருத்தமான எடுத்துக்காட்டாக
அமைவது சிறு கதைப் பாடல்களே என்றும் குறிப்பிட்டுள்ளனர். ஆயின் தற்பொழுது
கதைப்பாடல்களை
1) வரலாற்றுக் கதைப் பாடல்கள்
2) சமூகக் கதைப் பாடல்கள்
3) புராண, இதிகாசக் கதைப்பாடல்கள்
என
மூவகையாகப் பகுத்துக் காணும் போக்கே காணப்படுகின்றது.
1.6.1
வரலாற்றுக் கதைப்பாடல்கள்
வீரபாண்டிய
கட்டபொம்மன், தேசிங்குராசன், குலசேகர பாண்டியன் முதலிய வரலாற்றுச்
சிறப்புப் பெற்ற வீரர்களின் வரலாற்றைக் கதையாகக் கூறுதல் இப்பாடல்களின்
தன்மையாகும். ஒரு தலைவனை உயர்வாகக் கருதிப் பாடுவதே இக்கதைப் பாடல்களின்
நோக்கமாகும்.
1.6.2
சமூகக் கதைப்பாடல்கள்
உழைப்பாளி
மக்களையும் தமிழ்நாட்டுத் தலைவர்களையும்
கதைத் தலைவர்களாகக் கொண்டவை சமூகக் கதைப்பாடல்கள்.
சாதிச் சண்டை, கலப்புத் திருமணம், பொருந்தா மணம், கிராம
நலனுக்காகச் செயற்கரிய செய்து மாண்டோர், தன் மானம் காக்க
வீறு கொண்டெழுந்தோர் மற்றும் பணக்காரர் எதிர்ப்பு,
நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு ஆகிய கருத்துகளை மையமாகக்
கொண்டே சமூகக் கதைப் பாடல்கள் தோன்றியுள்ளன.
நல்லதங்காள் கதை, மதுரைவீரன் கதை, சுடலைமாடன் கதை
முதலியன இவ்வகையுள் அடங்கும்.
1.6.3
புராணக் கதைப்பாடல்கள்
இராமாயணம்,
பாரதம், கந்தபுராணம் முதலியவற்றில்
துணுக்குகளாக இடம்பெற்றிருக்கும் செய்திகளே இவ்வகைக்
கதைப்பாடல்களுக்கு ஆதாரமாகும். மூலக் கதையிலிருந்து
தலைவர்களின் பெயர்களை மட்டும் எடுத்துக்கொண்டு
பாடுவோன் தன் சொந்தக் கற்பனையில் பாடுபவையே
இப்பாடல்கள். அல்லி அரசாணி மாலை, புலந்திரன் தூது,
பவளக் கொடிமாலை முதலியவை இவ்வகைமையுள்
அடங்கும். |