2.1 வரலாற்றுக் கதைப்பாடல்கள்

வரலாற்று மாந்தர்களாக இன்றும் நிலைத்து விளங்கும் மனிதர்களைப் பற்றிக் கூறும் கதைகளை வரலாற்றுப் பிரிவிற்குள் அடக்கலாம். வரலாற்றுக் கதைப்பாடல்களாக அறிஞர்களால் பின் வருபவை சுட்டப்பட்டுள்ளன:

1) இராமப்பய்யன் அம்மானை
2) தேசிங்குராசன் கதை
3) கட்டபொம்மன் கதைப்பாடல்
4) கான் சாகிபு சண்டை
5) ஐவர் ராசாக்கள் கதை
6) வெட்டும் பெருமாள் கதை
7) சிவகெங்கைக் கும்மி
8) இரவிக்குட்டிப் பிள்ளைப் போர்
9) புலித்தேவன் சிந்து
10) கன்னடியன் படைப் போர்
11) மருது பாண்டியர் கதை
12) குன்றுடையான் கதை
13) வீர வல்லாளன் கதை
14) கட்ட பொம்மன் கூத்து

கதை, கதைப்பாடல், அம்மானை, கூத்து, சிந்து, கும்மி எனும் பெயர் முடிவுகளைக் கொண்டிருப்பினும் இவை அனைத்துமே கதை பொதிந்த பாடல்களேயாகும். இராமப்பய்யன், தேசிங்குராசன், வீரபாண்டிய கட்டபொம்மன், குலசேகர பாண்டியன் முதலிய வரலாற்றுச் சிறப்புப் பெற்ற வீரர்களின் வரலாற்றைக் கதையாகக் கூறுதல் இப்பாடல்களின் தன்மையாகும். அவர்கள் செய்த போர்கள், அப்போர்களில் அவர்கள் காட்டிய வீரம், போற்றுதற்குரிய அவர்தம் இதர பண்புகள் ஆகியவையும் இவற்றுள் காணப்படுகின்றன. வரலாற்று நிகழ்ச்சிகள் பலவும் உள்ளத்துடிப்பை ஈர்க்கும் வண்ணம் பாடப்பட்டுள்ளன. ஓரு தலைவனை உயர்வாகக் கருதிப் பாடுவதே இக்கதைப் பாடல்களின் நோக்கமாகும். தமிழில் கிடைத்த கதைப் பாடல்களுள் காலத்தால் முந்தையது இராமப்பய்யன் அம்மானை என்பர். சிறந்த வரலாற்றுக் கதைப்பாடலாகத் தேசிங்குராசன் கதையைக் குறிப்பிடுவர். இக்கூற்றுக்களின் அடிப்படையில் இராமப்பய்யன் அம்மானையும் தேசிங்குராசன் கதையும் இங்கு அறிமுகப்படுத்தப்படுகின்றன.