இராமப்பய்யன் அம்மானையில்
சிறப்பாக முன்னிற்பவர்
இருவர். நாயக்கர் படைத்தலைவனாகிய இராமப்பய்யனும்
சேதுபதியின் மறவர் படையை முன்னின்று நடத்திய வன்னியத்
தேவனும்தாம் அவ்விருவர். அவர்களைப் பற்றிக் காணலாம்.
2.3.1
இராமப்பய்யன்
படைக்குத்
தலைமை தாங்கும் தலைவனுக்குத் தன்னம்பிக்கை
வேண்டும். அது இராமப்பய்யனிடம் முழுஅளவில் இருந்தது.
மேலும் நான் எனும் செருக்குக்கு அடிமையானவன்; தற்பெருமை
பேசுபவன்; போரில் தோல்வியுற்ற தன்னுடைய வீரர்களை
அச்சுறுத்துவதில் இன்பம் காண்பவன்.
போகலூர்க்
கோட்டையைக் கைப்பற்றாத தன் வீரர்களைப் பார்த்து
‘இன்னுமா பிடிக்கவில்லை’ என்று பொருமி,
இத்தனைநாள் இக்கோட்டை வாங்கா திருந்தீகளோ
நாளைப் பகல் நாலு நாழியலுக் குள்ளாக
கோட்டைதனை வாங்காட்டால் கொன்றிடுவே னுங்களையும்
வைகைக்கரை நீளம் வாகாய்க் கழுவில் வைப்பேன்
(இராமப்பய்யன்
அம்மானை, வரி 1225 - 1229)
என்று
அச்சுறுத்துகிறான். போர்க் கைதிகளை நாகரிகமாக
நடத்தாத படைத்தலைவன் மக்கட் பண்பில்லாதவன் ஆவான்.
இராமப்பய்யன் இக்கூற்றுக்குப் பொருத்தமானவன். போகலூர்க்
கோட்டையைப் பிடிக்க ஏற்பட்ட சண்டையில் சேதுபதியின்
மக்களான குமாரன், மதியாரழகனும் கைது செய்யப்படுகின்றனர்.
கைதிகளான அவர்கள் தோலை உரிக்குமாறு தச்சனுக்கு
உத்தரவிட்டான்.
மதியாரழகனையும் மன்னன் குமாரனையும்
குப்புறவே தான் கிடத்திக் குறிமன்னர் பார்த்திருக்க
முதுகுத்தோல் தன்னை முறைமுறையாய்ச் செதுக்கச் சொன்னார்
(அம்மானை
1256 - 1258)
வீரர்களின்
தோலை அவர்கள் துடித்துத் துடித்து விழ
ஆசாரியும் உரித்தான். பிறகு அவர்களை முட்டு முட்டாக
மொழியெலும்பைத் தறிக்கச் சொன்னான் இராமப்பய்யன். தனித்த
கைதியின் உறுப்புகளைக் கூடையில் கொட்டி அவர்கள்
மனைவியரின் தலையிலே ஏற்றிப் பாளையத்தைச் சுற்றிப்
பறையடித்துப் பவனி வரச் செய்தவன். அதேபோல
சேதுபதியின் படைத்தலைவன் வன்னி இறந்து விட்டானென்ற
செய்தி கிடைத்ததும்,
குலுங்க நகைத்துக் கொற்றவரைத் தான்பார்த்து
வன்னியு மாண்டானென மன்னவரே கேட்டீர்களோ
என்று சொல்லி ராமய்யனும் இருபுயமும் தான் குலுங்க நகைத்து
(அம்மானை
வரி 2105 - 2112)
இருந்தான்.
வன்னியின் வீரத்துக்கு அஞ்சலி செய்வதை விடுத்து, படை வீரனுக்குக் களங்கம்
உண்டாகுமாறு நகைக்கிறான். வன்னியன் இறந்த பிறகு இராமப்பய்யனிடம் சரணடைந்த
சேதுபதி இறுதிச் சண்டை செய்யாமலே போரில் வெற்றியை இராமப்பய்யனுக்கு
நல்குகிறான். இந்நிகழ்ச்சிகள் இராமப்பய்யன் மனிதாபிமானமும், படைத்
தலைவனிடம் இருக்க வேண்டிய பெருந்தன்மையும் இல்லாதவன் என்பதைக் காட்டுகின்றன.
·
இராமப்பய்யனின் ஆற்றல்
திருமலை
நாயக்கரின் தளபதியான இராமப்பய்யனின்
போர்த்திறன், சிந்தனை ஆற்றல், படை நடத்தும் பாங்கு,
சூழ்நிலைக்குத் தக்கவாறு செயலாற்றும் போக்கு ஆகிய
அனைத்தும் கதைப்பாடலில் விளக்கம் பெறுகின்றன.
இராமப்பய்யனை எதிர்த்துப் போரிட்ட சடைக்கன் சேதுபதியின்
மைத்துனனான வன்னியும் மாபெரும் வீரன். இவனை எதிர்க்கும்
போது இராமப்பய்யன் ஆற்றலிழந்து காணப்படுவதாகக்
கதைப்பாடல் உண்மையை எடுத்துரைக்கின்றது.
2.3.2
வன்னியத்தேவன்
சேதுபதியின்
மருகனும் படைத்தலைவனுமாகிய வன்னியத்தேவன் வீரத்தின் விளைநிலம், வெற்றித்
திருமகள் அவன் தோள்களை அலங்கரித்தாள். இராணுவத் தந்திரம் மிக்கவன்,
எதிரிகளை வலுவில் தாக்கி அழிக்கும் வல்லமை பெற்றவன்.
வன்னியென்றாலே நாயக்கர் படையினர்க்கு
நடுக்கம் ஏற்படும். இராமப்பய்யனுடன் நடந்த மூன்று போர்களிலும் அவனே
வெற்றி பெற்றான். இராமேசுவரம் தீவில் நடந்த ஆறு மோதல்களிலும் மறவர்
படையும் நாயக்கர் படையும் வியப்புறச் சண்டை செய்தான், மறவர்படை சோர்வுற்றபொழுதும்
பலம் குன்றிய போதும் ‘புலியை நரிபாய்ந்து போகும்மா’ என்று தனக்கே உரித்தான
போர்க் குரலை யெழுப்பி வலுவூட்டியவன்.
வெற்றிகொண்டு வன்னி வீரியங்கள் பேசிவந்தான்
கோட்டை புகுந்தான் கோடையிடி வன்னியுந்தான் (846-850)
நிற்தூளியாக்கி நின்றானே வன்னியுந்தான் (1484)
என்று
அவன் வீரம் பேசப்படுகிறது. மேலும் இராமப்பய்யன்
சேதுபதியைத் தோற்கடிக்கப் பரங்கியர்கள் உதவியை நாடியதைக்
கேள்வியுற்ற வன்னி,
பரங்கியும் பார்ப்பானும் பாரமோ என்று
சொல்லி
வீரியங்கள் பேசி வன்னி வீரவாள் கைப்பிடித்துப்
(வரி
1550 - 1551)
பரங்கியர்களைத்
தாக்கவே, அவர்கள்
கண்ணுக்கு மெட்டாமல் கருங்கடலிலோடினர் காண்
(வரி
1574)
என்று
அம்மானை இசைக்கின்றது. வைசூரி நோயால் வாடிய நிலையிலும் கடைசி முறையாக
‘ஆனைத் திரளில் ஆளி சிங்கம் புகுந்தாப் போல்’ எதிரிகளைக் கலக்குகிறான்
வன்னி. படைத் தலைவனாகிய தன்னுடைய சாவுக்குப் பிறகு எதிரியைச் சேதுபதியால்
சமாளிக்க முடியாது என்று எடுத்துக்கூறியும் சரணடையக் கூறியும் போருக்கு
முற்றுப்புள்ளி வைக்கச் சொல்கிறான் வன்னி. போர் வேண்டாமென்று உரைத்தது
அவனது அரசு உத்தியையும், வீணாகப் போர் வீரர்களை உயிர் இழக்காமல் காப்பாற்றியதையும்
தெரிவிக்கும். ஒரு படைத் தலைவனுக்குரிய அனைத்துச் சிறப்புகளையும் கொண்டவனாகத்
திகழ்ந்தவன் வன்னியத்தேவன்.
கதைப்பாடலின்
தலைவனாக இராமப்பய்யன் இருந்தும்,
பொய்யுரைக்காமல் உண்மையை எடுத்துரைத்து வன்னியனை
மக்கள் மறவாதிருக்கும் படி செய்து விட்டது இராமப்பய்யன்
அம்மானை எனலாம்.
|